/

பகுதி - 622

பாடலியற்றும் கிடைத்தற்கரிய ஆற்றலை

News image
Updated On :4 ஆகஸ்ட் 2017, 4:46 am

‘பாடலியற்றும் கிடைத்தற்கரிய ஆற்றலை, பாவியர்மேல் பாடியா வீணடித்துத் திரிவேன்?  அவ்வாறு திரியாமல் ஆட்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் திருவோத்தூர் தலத்துக்கானது.  இறைவன் ஓத்துக்கு (ஓத்து=வேதம்) பொருள் சொன்ன இடம் என்பதால் இது திரு ஓத்தூர் ஆனது.  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தது.  இங்குதான் சம்பந்தர் சுவாமிகள் பதிகம் பாடி ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கினார். 

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளை உடைய பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒற்றை நெடிலோடும் ஒரு வல்லொற்றோடும் கூடிய மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு மெல்லொற்றும் இருப்பதான அமைப்பைக் கொண்டது.



தனனாத் தானன தானந் தனனாத் தானன தானந்
      தனனாத் தானன தானந் தனதான

தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந் 
         தணியாச் சாகர மேழுங் கிரியேழுந்

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
         தரிகூத் தாடிய மாவுந் தினைகாவல்

துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுஞ்
         துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே

துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
         தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ

பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
         பழமாய்ப் பார்மிசை வீழும் படிவேதம்

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
         பறிகோப் பாளிகள் யாருங் கழுவேறச்

சிவமாய்த் தேனமு தூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
         டிருநீற் றாலம ராடுஞ் சிறியோனே

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
         திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.