மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 443

நிலையற்ற பொருட்களையெல்லாம் பொன்

Updated On :2 ஜனவரி 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

நிலையா பொருளை உடலா கருதி நெடு நாள்  பொழுதும் அவமே போய்

 

உடல்: உடம்பு, பிறவி, பொன் என்றெல்லாம் உள்ள பொருளில், இங்கே பொன் என்பது பொருள்;

நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி

 

நிறை: உறுதி, திண்மை;

மல(ம்) நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக

 

சயனம்: படுக்கை;

மறை போற்ற அரிய ஒளியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே

 

 

கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம்

 

கொலைகாட்டு அவுணர்: கொலைத் தொழிலையே செய்துவரும் அரக்கர்கள்; சலதி: கடல்; சுவற: வற்ற; சூதம்: மாமரம்;

குறி போய் பிளவுபட மேல் கதுவு(ம்) கொதி வேல் படையை விடுவோனே

 

குறிபோய்: வைத்த குறியின்படி; கதுவும்: கவ்வும், பற்றும்;

அலைவாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும்

 

அலைவாய்: திருச்சீரலைவாய், திருச்செந்தூர்;

அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே.

 

அதித: அதீத, கடந்த, யாவற்றையும் கடந்த; அதிப: தலைவா;


நிலையாப் பொருளை உடலாக் கருதி நெடுநாட் பொழுதும் அவமேபோய்... நிலையற்றதான பொருட்களையெல்லாம் பொன்போலப் பேற்றிப் பலநாட்களை வீணாகக் கழித்து;

நிறைபோய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி... மன உறுதி அற்றுப்போய், செவிடும் குருடுமாக ஆகி, நோய்கள் நிறைந்து, ஐம்பொறிகளும் தடுமாற்றமடைந்து;

மலநீர் சயன மிசையாப் பெருகி மடிவேற்கு... படுக்கையிலேயே மல மூத்திரங்கள் தன்னையறியாமல் பெருக்கிக்கொண்டு இறந்து போகின்றவனாகிய எனக்கு,

உரிய நெறியாக மறைபோற் றரிய ஒளியாய்ப் பரவு மலர்தாட் கமலம் அருள்வாயே... ஈடேறுவதற்கு உரிய வழியாக, வேதங்களாலும் போற்றுவதற்கு அரியதானதும்; ஒளியாகப் பரவியுள்ளதுமான உன்னுடைய திருவடித் தாமரையைத் தந்தருள வேண்டும்.

கொலைகாட்டு அவுணர் கெட சலதி குளமாய்ச் சுவற முதுசூதம்... கொலைத் தொழிலையே மேற்கொண்டவர்களான அசுரர்கள் அழியும்படியும்; கடல், சிறிய குளத்தின் அளவாக வற்றும்படியும்; முதிர்ந்த மாமரம் (மாமரமாக நின்ற சூரபதுமன்),

குறிபோய்ப் பிளவு பட மேற் கதுவு கொதிவேற் படையை விடுவோனே... வைத்தகுறி தப்பாமல் பிளவுபட்டு விழுவதற்குக் கவ்வும்படியாக தழல் வீசும் வேற்படையை விடுத்தவனே!

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர... திருச்செந்தூரின் கடற்கரையில் மகிழ்ச்சியான கோலத்திலே வீற்றிருக்கும் குமரனே!

அழியாப் புநித வடிவாகும் அரனார்க்கு அதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய பெருமாளே... அழியாதவரும், பரிசுத்த வடிவினருமான சிவபெருமானக்கு எல்லாவற்றையும் கடந்ததான (பிரணவத்தின் பொருளை) விளக்கியருளியவனே!  அடியவர்களுக்கு எளியவனான பெருமாளே! 

சுருக்க உரை

கொலைத்தொழிலை மேற்கொண்டவர்களான அசுரர்கள் அழியும்படியும்; கடல், சிறிய குளத்தின் அளவாக வற்றிப் போகும்படியும்; அந்தக் கடலின் நடுவிலே முதிர்ந்த மாமரமாக நின்ற சூரன், வைத்த குறிதப்பாமல் பிளவுபட்டு விழும்படியாகக் கவ்விப் பற்றும்படி அழல்வீசும் வேலாயுதத்தை எரிந்தவனே!  திருச்செந்தூரின் கடற்கரையிலே மகிழ்ச்சிக் கோலமாக வீற்றிருப்பவனே!  அழிவற்றவரும் பரிசுத்த வடிவினருமான சிவபெருமானனுக்கு அனைத்தையும் கடந்ததான பிரணவத்தின் பொருளை விளக்கியருளியவனே!  அடியாருக்கு எளிய பெருமாளே!

நிலையற்ற பொருட்களையெல்லாம் பொன் போலப் போற்றி, பலநாட்களை வீணே கழித்து; மன உறுதியை இழந்து, செவிடும் குருடுமாக ஆகி, பல நோய்களால் பீடிக்கப்பட்டு, ஐம்பொறிகளும் தடுமாற்றமடைந்து, படுக்கையிலேயே தன்னையறியாமல் மலமூத்திரங்களைப் பெருக்கிக் கொண்டு இறந்துபடுபவனான அடியேனுக்கு பற்றுக்கோடாக வேதங்களாலும் போற்றுவதற்கு முடியாதவையான உன்னுடைய ஒளிவீசும் திருவடித் தாமரையைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.