பதச் சேதம் | சொற் பொருள் |
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா
| தாருவே: கற்பகத் தருவே; மதுரித: மதுர இத—இனிமை மிக்க; குண: தன்மை கொண்ட; முலைபொரு: மார்பைப் பொருந்துகின்ற, தழுவுகின்ற; |
பொரு அரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா ந(ல்)ல பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவி பாடி
| பொருஅரு நட்பு: ஒப்பற்ற நட்பு; நிரைத்து: வரிசையாக அமைத்து; செம்பாகம்: (சரி பாதி என்பது ஒருபொருள். இங்கே) லளிதமான, செம்மையான; |
விலை இல் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும் வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர
| உதாரிகள்: கொடையாளிகள்; மிடி: வறுமை; உலுத்தர்: உலோபியர்; |
மிக அருமை பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே
| அருமைப் பட்டு: பிரயத்தனம் செய்து; |
இலகிய வெட்சி செம் தாம மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் இமய மகட்கு சந்தானமாகிய முருகோனே
| இலகிய: ஒளிகொண்ட, பிரகாசமான; செந் தாம: சிவந்த மாலை; |
இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே
| கொடிச்சி: மலைநாட்டுப் பெண்ணான வள்ளி; பாகசாதனன்: இந்திரன்; எழிலி: மேகம்; எழில் பற்றும்: அழகைக் கொண்ட; காய: திருமேனியுள்ள; மாயவன்: திருமால்; |
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசை தொறும் முப்பத்து எண் காதம் வீசிய அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே
| அலர்தரு: மலர்கின்ற; முப்பத்தெண் காதம்: முப்பத்தெட்டு காதம் (ஒரு காதம் என்பது பத்து மைல் என்பது ஒரு கணக்கு); அளி: வண்டு; |
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமர் இடை மெத்த பொங்காரமாய் வரும் அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே.
| பொங்காரமாய் வரும்: (பொங்கிக்) கொதிப்புடனே வரும்; சங்காரம்: சம்ஹாரம்; |
புலவரை ரக்ஷிக்குந் தாருவே மதுரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய... புலவர்களைக் காக்கின்ற கற்பக விருட்சமே! இனிய குணத்தையும் மலைபோன்ற மார்பகங்களையும் கொண்ட பெண்களைத் தழுவுகின்ற புஜங்களைக் கொண்டவனே!
திக்கெட்டும்போயு லாவிய புகழாளா பொருவரு நட்புப் பண்பான வாய்மையில் உலகிலு னக்கொப் புண்டோவெனா... திசை எட்டிலும் சென்று உலாவுகின்றதான புகழைக் கொண்டவனே! ஒப்புவமையற்ற நட்புத் தன்மையிலும்; வாய்மையிலும் உனக்கு ஒப்பானவர்கள் உலகிலுண்டோ!’ என்றெல்லாம்,
நல பொருள்கள் நிரைத்து செம்பாக மாகிய கவிபாடி... நல்ல பொருளமைந்த (சொற்களை) வரிசையுற வைத்து; செம்மையான முறையிலே அமைந்திருக்கின்ற பாடல்களைப் பாடியும்;
விலையில்தமிழ்ச்சொற்கு உன்போல் உதாரிகள் எவரென மெத்தக் கொண்டாடி... ‘விலைமதிப்பைக் கடந்ததான தழிற் சொற்களை ‘ஆதரிப்பதற்கு) உன்னைப் போன்ற கொடையாளிகள் யார் இருக்கிறார்கள்’ என்று பெரிதும் கொண்டாடியும்;
வாழ்வெனும் வெறிகொள் உலுத்தர்க்கு என்பாடு கூறிடு மிடிதீர... ‘வாழ்வே பெரிது’ என்ற எண்ணமே மேலிட்டவர்களான லோபிகளிடம் என்னுனுடைய துன்பங்களை எடுத்துச் சொல்வதான வறுமை நிலை தீர்வதற்காக;
மிக அருமைப்பட்டு உன்பாத தாமரை சரணமெனப்பற் றும்பேதையேன்மிசை... மிகவும் பிரயத்தனம் செய்து உன் பாதக் கமலங்களையே புகலிடமென்று பற்றிக்கொண்டுள்ள பேதையாகிய என் மீது;
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையுமருள்வாயே... உன்னுடைய திருக்கண்ணாலே பார்த்தருளி குறைவற்ற பெருவாழ்வைத் தந்தருள வேண்டும்.
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய ... ஒளிகொண்ட (பிரகாசமான) வெட்சிப் பூவால் ஆன சிவப்பு மாலையை அணிந்த மார்பபையும் தோள்களையும் கொண்டவனே!
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல் இமயமகட்குச் சந்தான மாகிய முருகோனே... வில்லைப் போன்ற புருவங்களையும்; மை தீட்டிய கண்களையும்; குங்குமத் திலகத்தை அணிந்த நெற்றியையும் கொண்ட மலைமகளான உமாதேவியாரின் புதல்வனான முருகனே!
இளையகொடிச்சிக்கும் பாகசாதனன் உதவுமொருத்திக்குஞ் சீல நாயக... இளையவளும் மலைநாட்டைச் சேர்ந்த குறமகளான வள்ளிக்கும்; பாகசாதனனாகிய இந்திரனுடைய மகளான தேவானைக்கும் உரிய நாயகனே!
எழிலியெழிற்பற்றுங் காய மாயவன் மருகோனே... மேகத்தின் அழகிய நிறத்தைப் போன்ற மேனிவண்ணத்தைக் கொண்ட திருமாலின் மருகனே!
அலர்தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய... மலர்கின்ற பூக்களிலிருந்து கிளம்புகின்ற நறுமணம் முப்பத்தெட்டு காதத்துக்கு (நெடும் தொலைவுக்கு) வீசுவதும்;
அணிபொழிலுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே... அழகான நந்தவனங்களில் சஞ்சரிக்கும் வண்டுகளின் ரீங்காரம் ஒலிக்கின்றதும்;
அழகிய சிக்கற் சிங்கார வேலவ சமரிடை மெத்தப் பொங்காரமாய்வரும்... அழகியதுமான சிக்கல் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற சிங்காரவேலனே! பொங்குகின்ற சினத்தோடு போருக்கு எழுந்த வந்த,
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே.... அசுரர்களை வெட்டிச் சாய்த்து சம்ஹரித்த பெருமாளே!
சுருக்க உரை
ஒளிகொண்ட வெட்சிப் பூக்களால் ஆன சிவந்த மாலைகளை அணிந்த மார்பையும் தோள்களையும் உடையவனே! வில்லைப் போன்ற புருவத்தையும்; மைதீட்டிய கண்ணையும்; திலகமணிந்த நெற்றியையும் உடையவரும் மலைமகளுமான உமையம்மையின் புதல்வனே! இளையவளும் மலைநாட்டுக் குறப்பெண்ணுமான வள்ளிக்கும்; இந்திரனுடை மகளான தேவானைக்கும் உரியவனே! மேகத்தைப் போன்ற நீலத் திருமேனியைக்கொண்ட திருமாலின் மருகனே! மலர்கின்ற பூக்களின் வாசம் நெடுந்தொலைவுக்குப் பரவுவதும்; அழகிய நந்தவனங்களில் சஞ்சரிக்கும் வண்டுகளின் ரீங்காரம் ஒலிப்பதும்; அழகானதுமான சிக்கலில் வீற்றிருக்கும் சிங்காரவேலனே! பொங்குகின்ற சினத்தோடு போருக்கெழுந்த அரக்கர்களை வெட்டிச் சாய்த்து சம்ஹரித்த பெருமாளே!
‘புலவர்களை ஆதரித்துக் காக்கின்ற கற்பக விருட்சமே! இனிய தன்மையையும் பெருத்த மார்பகங்களைக் கொண்ட பெண்களைத் தழுவுபவனே! எட்டு திசைகளையும் எட்டுகின்ற புகழைக் கொண்டவனே! ஒப்பற்ற நட்பும் சத்தியமும் நிறைந்தவனே! இந்த உலகத்தில் உனக்குச் சமமாக ஒருவரும் இல்லாதனே!’ என்றெல்லாம் அருமையான தமிழ்ப் பாடல்களை என் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகக் கருமிகளிடம் போய்ப் பாடி நிற்கின்ற என் தரித்திரத்தை ஒழித்தருளி,
மிக்க பிரயாசையோடு உனது திருவடித் தாமரைகளே புகல் என்று பற்றிக்கொண்டிருக்கும் பேதையேனாகிய எனக்குக் குறைவற்ற வாழ்வைத் தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

