பதச் சேதம் | சொற் பொருள் |
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொ(ல்)லி விதரணம் சொ(ல்)லி வீறுகளே சொ(ல்)லி அழகாக
| விதம்: பலவிதங்களில்ல; இசைந்து: இசைவுகொண்டு; அநுராகம்: அன்பு என்பதும் காமப் பற்று என்பதும் இதன் இரு வேறு பொருள்கள், இங்கே காமப் பற்று அல்லது ஆசைவார்த்தை; விதரணம்: விவேகம், அறிவு; வீறு: சிறப்பு (இந்த இடத்தில்); |
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி
| குரும்பை: சிறிய இளநீர்; சம்ப்ரம: சிறப்பான; வீறிய: ஓங்கிய; விரகம்: காமம்; எதிர்: எதிரே உள்ளவர்களின்; அமர்: விருப்பம்; |
இதம் இசைந்து அ(ன்)னமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர எவர்களும் சி(த்)தம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே
| இனநடை: விதவிதமான நடை; மால்: மயக்கம்; |
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள் புரிந்து அழகாகிய தாமரை இரு பதங்களினால் எ(ன்)னை ஆள்வதும் ஒரு நாளோ
|
|
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு (கூ)றாய் விழவே சின வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா
| மதம்: ஆணவம்; குறாய்: கூறாய்; |
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி சிறுவோனே
| இன்சொலி: இனிமையான சொல்லை உடையவள்; கவுரி: பொன்னிறத்தவள்; யாமளை: பச்சை நிறத்தவள்; காரணி: அனைத்துக்கும் காரணமானவள்; |
பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா
| பதம் இசைந்து: (சரியான) நேரத்துக்கு இசைந்து; க்ருபாகரன்: க்ருபை+ஆகரன்—கருணை வடிவினன்; சேவக(ன்): வீரன்; விறல்: வெற்றி; |
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே.
| பருதி: சூரியன்; ப்ரபை: ஒளி; கோடியதாம்: கோடிமடங்கானதாம்; காசியின் மீறிய: காசியைவிட சிறந்த; |
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அனுராகமுமே சொ(ல்)லி விதரணம் சொ(ல்)லி வீறுகளே சொ(ல்)லி... (இசையச் செய்வதற்குப்) பலவகையான உபாயங்களைக் கொண்டும்; இனிதான மலர்ச் சரங்களைக் கூந்தலில் அணிந்துகொண்டும்; ஆசைவார்த்தைகள் பேசியும்; தங்களுடைய அறிவைப் பற்றியும் உயர்வைப் பற்றியும் பேசிக்கொண்டும்;
அழகாக விரி குரும்பைகளாம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம்... அழகாக விரிந்திருக்கும் இளநீர்கள் எனும்படியாகவும்; ஓங்கியிருக்கும் பொன்மயமானதும் சிறப்பானதுமான மேரு மலையைப்போல,
அதி விரகம் ஒங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி... அளவுகடந்த காமம் நிறைந்து ஓங்கிநிற்கும் பெரிய தனங்களைக் கொண்டு எதிர்ப்படுபவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற விரும்பியும்;
இதம் இசைந்து அ(ன்)னமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர... இதமான முறையில் இசைந்துவரும் அன்னத்தைப் போல பலவகையாக நடந்து வருகின்ற பெண்கள் தெருவிலே வரவும்,
எவர்களும் சி(த்)தம் மால் கொ(ள்)ளும் மாதர் கண் வலையாலே எனது சிந்தையும் வாடி விடா வகை... யாருடைய மனத்தையும் மயங்கச் செய்வதான பெண்களடைய கண் என்னும் வலையால் என்னுடைய மனமும் நிலைதடுமாறாத வகையிலே,
அருள் புரிந்து அழகாகிய தாமரை இரு பதங்களினால் எ(ன்)னை ஆள்வதும் ஒரு நாளே... அருளைத் தந்து; அழகிய தாமரைகளைப் போன்ற உன்னுடைய இரு திருவடிகளாலம் என்னை ஆட்கொள்வதும் ஒருநாள் நடக்குமோ? (ஒருநாள் என்று சொல்லப்பட்டிருப்பினும் ‘என்றோ ஒருநாள்’ என்று கொள்ளாமல், ‘உடனேயே’ என்று கொள்வதே பொருந்தும். ஆகவே, ‘என்னை உடனடியாக ஆண்டுகொண்டருளவேண்டும்’ என்பது பொருள்.)
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு கு(கூ)றாய் விழவே சின வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா... நிறைந்த செருக்கோடு எதிரிலே தோன்றிப் போரிட்ட சூரனுடைய உடலை இரண்டு கூறுகளாக விழும்படி வீழ்த்தியதும்; உக்கிரமான வடிவத்தைக் கொண்டதுமான வேலை ஏவிய அதிதீரனே!
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி சிறுவோனே... மிக இனிமையான சொல்லை உடையவளும்; உமையென்றும்; நாராயணி என்றும்; பொன்னிறமான கௌரி என்றும்; அம்பிகை என்றும்; பச்சை நிறத்தவள் என்றும்; பார்வதி என்றும்; மோனநிலையில் நிற்பவள் என்றும்; ஜகத்காரணி என்றும்; யோகினி என்றும் பல நாமங்களைத் தாங்கிய அம்மையின் சிறுவனே!
பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா... உரிய நேரம் (வாய்த்ததும்) ஏழு உலகங்களையும் வலம் வந்ததான ஒப்பற்ற மயிலின்மேலே சுற்றிவந்த கருணையின் வடிவே! பராக்கிரமனே! வெற்றி வீரனே!
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள்... கோடிக்கணக்கான சூரியர்களுடைய ஒளி ஒன்று திரண்டதைப் போன்ற வடிவத்தைக் கொண்டுநின்று அருள்பவனே!
காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே.... காசியைக் காட்டிலும் சிறந்ததான பழனி மலையின் மீதிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
மிகுந்த ஆணவத்தோடு போருக்கு வந்த சூரனுடைய உடலை இரண்டு கூறாகும்படி கோபத்தின் வடிவமாக விளங்கும் வேலை வீசிய அதி தீரனே! மிக இனிமையான சொல்லை உடையவளென்றும்; உமைமாது என்றும்; நாரணி என்றும்; பொன்னிறமான கௌரி என்றும்; அம்பிகையென்றும்; யாமளையாகிய பசிய நிறங்கொண்டவளென்றும்; பார்வதியென்றும்; மோன சுந்தரி என்றும்; ஜகத்காரணியென்றும்; யோகினியென்றும் பல நாமங்களைத் தாங்கிய பராசக்தியின் பாலகனே! உரியநேரம் வாய்த்ததும் ஏழு உலகங்களையும் சுற்றி வந்ததான அழகிய மயின்மீது வலம்வருகின்ற கருணையின் வடிவே! பராக்ரமனே! வெற்றிவீரனே! கோடி சூரியர்கள் ஒன்றுசேர்ந்ததைப் போல ஒளிவீசுகின்ற வடிவைத்தைக் கொண்டவனே! அருள்பவனே! காசியைக் காட்டிலும் சிறந்ததான பழனி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
(ஆடவர்) தங்களுக்கு இசைவதற்காகப் பலவிதமான உபாயங்களைக் கொண்டவர்களாகவும்; கூந்தலிலே மலர்ச் சரங்களைச் சூடியவர்களாகவும்; ஆசைவார்த்தைகளைப் பேசுபவர்களாகவும்; தங்களுடைய அறிவையும் சிறப்புகளையும் எடுத்துச் சொல்பவர்களாகவும்; இளநீர்களைப் போன்றவையும் பொன்னிறமான மேருவைப் போன்றவையுமான தங்களுடைய மார்பகங்களால் (எதிரே உள்ளவருடைய) விருப்பத்தை நிறைவேற்ற விரும்புபவர்களாகவும்; அன்னத்தைப் போல இதமானதும் பலவிதமானதுமான வகையிலே தெருக்களிலே நடை பயில்பவராகவும்; எல்லோருடைய மனங்களிலும் மயக்கத்தை ஏற்படத்துபவர்களாகவும் திரிகின்ற பெண்களுடைய கண்கள் என்னும் வலையினால் என் மனம் அலைபாயாதபடி
தாமரையைப் போன்ற உன்னுடைய இரண்டு திருவடிகளாலும் அடியேனை உடனடியாக ஆட்கொண்டருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

