மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 547

மௌனநிலை சித்திக்கின்ற நிலை இப்போதே ஏற்படுவதற்கு அருள

Updated On :2 மே 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக(ம்) துக்கம் மால் கடம் மு(ம்)மலம் மாயை

 

தொக்கு: தோல் (வடசொல்); தொக்கு அறா: தோலை நீங்காத; மால்: ஆசை; கடம்: குடம்;

துற்ற கால் பதலை சொல் படா குதலை துப்பு இலா பல சமய நூலை

 

துற்ற: நெருக்கமாக வைத்த; கால்: காற்று; பதலை: பானை; கால்பதலை: காற்றடைக்கும் பானை; குதலை: மழலை; துப்பிலா: துப்பற்ற, அறிவற்ற;

கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே

 

கைக்கொளா: கைக்கொண்டு, மேற்கொண்டு; ஆக்கை: உடல்; அவல: துன்ப(த்துக்கு இடமான);

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே

 

கட்டுக் கூட்டு: கட்டப்பட்ட கலப்பு—(எலும்பு, சதை, குருதி முதலானவற்றின் கூட்டால் கட்டப்பட்டது); வேட்டு: விரும்பி; சட்ட: சட்டமாக, செம்மையாக; வாக்கு அழிவது: பேச்சிழப்பது, மௌனத்தில் ஆழ்வது;

அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய

 

அக்கு: எலும்பு; அரா: பாம்பு; பொடி: திருநீறு; மெய்க்கு இடா: மெய்க்கு இடும், அணியும்; குரவர்: தந்தை (சிவன்); அர்ச்சியா: அர்ச்சித்து; முநிவனாய:  ஞானியான;

அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா

 

அப்ப: அப்பனே; பன்னிரு வெற்ப: பன்னிரண்டு தோள் மலைகளை உடைவனே; தணியல்: தணிகை, திருத்தணிகை; பார்ப்பதி: உமை; நதி: கங்கை;

இக்கண் நோக்கு உறில் நிருத்த நோக்கு உறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே

 

இக்கண்: இந்தப் புவியில்; நோக்கு உறில்: பார்வையென்று ஒன்று இருந்தால; நிருத்த: நடனத்தை;

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே.

 

எத்திடார்க்கு: ஏத்திடாருக்கு, போற்றாதவருக்கு; முத்த: முக்த, முக்தனே, பாசங்களிலிருந்து நீங்கியவனே; எத்தினார்க்கு: ஏத்தினாருக்கு, போற்றுபவருக்கு;

தொக்கறாக் குடில் அசுத்தமேற்ற சுக துக்கமாற் கடம் முமலமாயை... தோலைவிட்டு நீங்காத குடிசையும்; அசுத்தத்தை ஏற்றதும்; சுகம், துக்கம், ஆசை ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் குடமானதும்; (ஆணவ, கன்ம, மாயா) மலங்கள் மூன்றும்,

துற்றகாற் பதலை சொற்படாக் குதலை துப்பிலாப் பலசமயநூலை கைக் கொளாக்... நெருக்கமாகத் திணிபட்ட காற்றால் அடைத்த பானையும்; மழலைமொழியைப் போலே விளங்காததும் அறிவுக்குப் பொருந்ததாதுமான பல சமயங்களின் நூல்களைக் கைக்கொண்டதும்;

கதறு கைக்கொள் ஆக்கை அவலப் புலாற் றசை குருதியாலே... அற்பக் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடலை; துன்பங்களுக்கு இடமான மாமிசம், சதை, ரத்தம் ஆகியவற்றின்,

கட்டுகூட்டு அருவருப்பு வேட்டுழல சட்டவாக்கு அழிவது ஒருநாளே... கலவையால் கட்டப்பட்டதும்; அருவருபபானதுமான இந்த உடலை விரும்பித் திரிகின்ற எனக்கு வாக்கு என்பது அடியோடு அழிந்து (மோனநிலை கூடுவது) ஏற்படுமா?  (உடனே ஏற்படவேண்டும்.)

அக்கு அராப் பொடியின் மெய்க்கு இடாக் குரவர் அர்ச்சியாத் தொழு முநிவனாய..... எலும்பையும்; பாம்புகளையும்; திருநீற்றையும் தன் மெய்லே அணிந்திருக்கும் தந்தையான சிவபெருமான் அருச்சித்துத் தொழுத ஞானியானவனே!

அப்ப போர்ப் பனிரு வெற்ப  பூத் தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா... அப்பனே!  போருக்குத் தகுந்தவையான பன்னிரண்டு தோள்களாகிய மலைகளை உடையவனே! மலர்கள் மலர்கின்ற திருத்தணிகை மலையனே!  பார்வதிக்கும் கங்கைக்கும்* மைந்தனே!

(* முருகன் கங்கைக்கும் மகன் என்பதால் காங்கேயன் என்ற பெயர் கொண்டவன்—கங்கை மைந்தர்களான முருகனுக்கும் பீஷ்மருக்கும் காங்கேயன் என்ற இப்பெயர் உரியது)

இக்கண் நோக்குறில் நிருத்தநோக்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே... இந்தப் புவியிலே பார்க்கத் தக்கது என்றொன்று இருந்தால் அது உன்னுடைய திருநடனம் ஒன்றே.  தவசீலர்களுக்கு உதவுகின்ற இளையவனே! 

எத்திடார்க்கு அரிய முத்த பாத்தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே... உன்னைப் போற்றாதவர்களுக்கு அரியவனாகிய முக்தனே!  தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்பவர்களுக்கு எளியனாக இருக்கின்ற பெருமாளே! 

சுருக்க உரை

எலும்மையும் பாம்புகளையும் திருநீற்றையும் தம் திருமேனியில் அணியும் தந்தையான சிவனார் அர்ச்சித்துப் போற்றுகின்ற ஞானியே! போருக்கு ஏற்றவையான பன்னிரண்டு தோள்களாகிய மலைகளை உடையவனே!  பூக்கள் மலர்கின்ற திருத்தணிகை மலையிலே வீற்றிருப்பவனே!  பார்வதிக்கும் கங்கைக்கும் மைந்தனே!  இப்புவியிலே பார்க்கத் தக்கது என்றொன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப் பார்ப்பது ஒன்றே.  அப்படிப்பட்ட நோக்கை உடையவர்களாகிய முனிவர்களுக்கு உதவுகின்ற இளையவனே!  போற்றாதவர்களுக்கு அரியவனே!  பாசங்களிலிருந்து விலகிய முக்தனே!  தமிழ்ப் பாக்களால் உன்னைப் போற்றுபவர்களுக்கு எளியனான பெருமாளே!

தோலைவிட்டுப் பிரியாத குடிசையும்; அசுத்தத்தை ஏற்றதும்; சுகத்தையும் துக்கத்தையும் ஆசையையும் இட்டு நிரப்பியுள்ள குடமானதும்; மும்மலங்கள் நெருக்கமாகப் பொருத்தி வைக்கப்பட்டள்ள பானையும்; மழலைச் சொல்லைப் போல விளங்காததும்; அறிவுக்குப் பொருந்தாதுமான பல சமயங்களின் நூல்களை மேற்கொண்டதும்; வீண்கூச்சலை ஏற்றுக்கொண்டதும்; துன்பத்துக்கு இடமானதும்; மாமிசம், சதை, ரத்தம் இவற்றின் கூட்டால் கட்டப்பட்ட கலவையும்; வெறுக்கத்தக்கதுமான இந்த உடலை நேசித்துத் திரிகிற அடியேனுக்கு பேச்சு செம்மையாக அடைபட்டு மௌனநிலை சித்திக்கின்ற நிலை இப்போதே ஏற்படுவதற்கு அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.