மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பதச் சேதம்

சொற் பொருள்

அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று

 

அரி: திருமால்; அயன்: பிரமன்; பரவி: போற்றி;

அநுதின(ம்) மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா

 

மொழிதர: போற்ற; அயில்: வேல்;

பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா

 

பரிபுரம்: சிலம்பு (வீரக்கழல்); பரிபுர கமலம்: வீரக் கழலை அணிந்த திருவடித் தாமரை;

பகவதி வரை மகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர

 

வரைமகள்: மலை மகளான உமை;

உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய

 

உரைசெயும்: போற்றும்;

உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும்

 

மன்: மன்னுகின்ற, மிகுந்திருக்கின்ற; உறு: மனத்தில் நிகழ்வது; உறுவர: மனத்தில் நினைத்துக்கொள்ள;

பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே

 

அணி: அழகிய; பணி: பாம்பு—இந்த இடத்தில் வாசுகிப் பாம்பு (விளக்கத்தில் காணவும்);

பகர் தரு குற மகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே.

 

தரு: கற்பகத் தரு; தருஅமை: கற்பக மரத்தின் (நிழலில்) வீற்றிருக்கும்; இருபுடை: இரண்டு பக்கங்களிலும்;

அரகர சிவன் அரி அயனிவர் பரவி முன் அறுமுக சரவண பவனே என்று... ஹரஹர (என்ற துதிக்கு உரிய) சிவனும் திருமாலும் பிரமனும் உன்னுடைய முன்னிலையில் இருந்தபடி ‘ஆறுமுகனே, சரவணத்தில் உதித்தவனே’ என்றெல்லாம்,

அநுதின மொழிதர அசுரர்கள் கெட  அநலென எழ அயில்விடும் அதிவீரா... தினந்தோறும் போற்றவும்; சூரன் முதலான அசுரர்கள் அழியுமாறு, தீயைப் போல எழுவதான வேலை வீசிய வீரனே!

பரிபுர கமலமது அடியிணை யடியவர் உளமதில் உற அருள் முருகேசா .... வீரக் கழல்களை அணிந்த உன்னுடைய திருவடியாகிய தாமரைகள் அடியார்களுடைய மனத்தில் பதியுமாறு அருள்கின்ற முருகேசனே!

பகவதி வரைமகள் உமை தர வருகுக பரமன திருசெவி களிகூர... பகவதி (என்றும்) மலைமகள் (என்றும்) உமை (என்றும் போற்றப்படும்) தேவியார் அருளிய குகனே! சிவபெருமான் மகிழுமாறு அவருடைய இருசெவிகளிலும்,

உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர... (எல்லோரும்) போற்றுகின்ற ஒப்பற்ற பிரணவத்தின் முடிவான பொருளை சொல்லியருளிய குருபரனே!

உயர்வாய உலக மன் அலகில வுயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும்... உயர்ந்ததாகிய இந்த உலகத்திலே உள்ள கணக்கற்ற உயிர்களும் தேவர்களும் முனிவர்களும் (உன் பெருமையை) மனத்தில் நினைத்துக்கொண்டு,

பரவிமுன் அநுதின மனமகிழ் வுற அணி பணிதிகழ் தணிகையில் உறைவோனே... உன் முன்னிலையில் நின்றபடிப் போற்றுமாறும்; என்றென்றும் மகிழ்ச்சியடையுமாறும்; அழகியதும் வாசுகியாகிய பாம்பு* உறைவதுமான திருத்தணிகையில் உறைபவனே!

(அமுதம் கடைவதற்குக் கடைகயிறாக விளங்கிய வாசுகிப் பாம்புக்கு அதனால் ஏற்பட்ட புண்ணும் நோவும் நீங்குமாறு திருத்தணிகையில் முருகனை வழிபட்டுத் துன்பம் நீங்கியது என்பார்கள்)

பகர்தரு குறமகள் தருவமை வநிதையும் இருபுடை யுறவரு பெருமாளே.... போற்றப்படுபவளான குறமகள் வள்ளியும்; கற்பகத் தருவின் நிழலில் வீற்றிருந்த தேவானையும் இருபுறங்களிலும் பொருந்தியிருக்கும்படியாக விளங்குகின்ற பெருமாளே! 

சுருக்க உரை

‘ஹரஹர’ என்று போற்றப்படும் சிவனும் திருமாலும் பிரமனும் உன் முன்னிலையில் நின்று தினந்தோறும் ‘ஆறுமுகனே!  சரவணத்தில் உதித்தவனே! என்றெல்லாம் துதிக்க, சூரன் முதலான அசுரர்கள் அழியும்படியாக தீயைப் போல எழுந்த வேலை வீசிய வீரனே!  தாமரையைப் போன்றதும்; வீரக் கழல்களை அணிந்ததுதமான திருவடிகளை அடியார்கள் தங்கள் மனத்திலே பதித்துக்கொள்ளும்படியாக அருள்கின்ற முருகனே!  பகவதி, மலைமகள், உமை என்றெல்லாம் போற்றப்படும் தேவியார் அருளத் தோன்றியவனே!  சிவனார் மனம் மகிழும்படியாக அவருடை இரண்டு திருச்செவிகளிலும் பிரணவத்தின் பொருளை உபதேசித்தருளிய குருநாதனே!

சிறந்த இந்த உலகத்திலுள்ள கணக்கற்ற உயிர்களும்; தேவர்களும்; முனிவர்களும் தங்கள் மனத்திலே உன்னுடைய பெருமையை எண்ணியபடி உன் முன்னிலையில் நின்று போற்றி மகிழ்ச்சியடையும்படியாக—வாசுகிப் பாம்பு போற்றித் துதித்த—திருத்தணிகையில் வீற்றிருப்பவனே!  அனைவரும் போற்றுகின்ற குறமகள் வள்ளியும்; கற்பகத் தருவின் நிழலில் வீற்றிருந்த தேவானையும் இரண்டு பக்கங்களிலும் பொருந்தியிருக்கும்படியாக விளங்குகின்ற பெருமாளே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.