பதச் சேதம் | சொற் பொருள் |
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும்
| இருப்பவல்: துணையிருப்பதும் வலியதுமான (இதை ‘இருப்பு அவல்’ என்று பிரிப்பாரும் உண்டு); இடுக்கினை: துன்பத்தை; |
இசை தமிழ் நடத்தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும்
| நடத் தமிழ்: நாடகத் தமிழ்; கவி நாலும்: (ஆசு கவி, மதுர கவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்ற) நான்குவகைக் கவிதைகளையும்; |
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சக தலத்தினில் நவிற்றுதல் அறியாதே
| தரிப்பவர்: (உள்ளத்திலே) அணிந்துகொள்பவர்கள்; நவிற்றுதல்: நவில்தல், சொல்லுதல்; |
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
| சமர்த்திகள்: சாமர்த்தியம் உள்ளவர்கள்; |
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை
| கருப்பு வில்: கரும்பு வில்; இயல் களிப்புடன்: பொருந்திய செருக்குடன்; |
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் க(ண்)ணில் எரித்தவர் கயிலாய
| நுதல்: நெற்றி; |
பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே
| பொருப்பினில்: மலையினில்; பருப்பத: பர்வத; ஒருபுறத்தினை: இடதுபுறத்தை; |
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்பு உறு பெருமாளே.
| புயல்: மேகம்; |
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை யறுத்திடும் எனவோதும்... துணையிருப்பதும் வலியதுமான திருப்புகழை விருப்பத்தோடு படிப்பவர்களுடைய துன்பங்களை ஒழிக்கும் என்று சொல்கின்ற,
இசைத்தமிழ் நடத்தமிழென துறை விருப்புடன்இலக்கண இலக்கிய கவிநாலும்... இசைத் தமிழ்; நாடகத் தமிழ்; (அகம் புறம் என்று பல்வேறு) துறைகளையும் சேர்ந்த; இலக்கணமும் இலக்கியமும் பொருந்திய; (ஆசு கவி, மதுர கவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்ற) நாலுவகையான பாடல்களையும்,
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே... மனத்திலே இருத்துபவர்களும்; சொல்பவர்களும்; நினைப்பவர்களுமான (உன் அடியார்களை) இந்த உலகத்திலே போற்றிப் பரவுதலை அறியாமல்,
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ... தங்களுடைய மார்பகத்தாலும் முகத்தாலும் மனங்களை உருகச் செய்கின்ற சாமர்த்தியம் வாய்ந்த பெண்களிடத்திலே அடியேன் மயக்கம்கொண்டு விழலாமோ? (விழாமல் தடுத்தாள்வாய்.)
கருப்புவில் வளைத்து அணி மலர்க்கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்தெய்த மதவேளை... கரும்பு வில்லை வளைத்தும்; அதிலே மலர்கணைகளைத் தொடுத்தும்; மிக்க செருக்கோடு மறைந்திருந்து எய்தவனான மன்மதனை,
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பெழ நுதற்படு கனற்கணி லெரித்தவர்... மனத்திலே நினைத்த மாத்திரத்திலேயே எரிந்து சாம்பலாகும்படி நெற்றியில் பொருந்தியுள்ள நெருப்புவிழியாலே எரித்தவரும்;
கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் தருசேயே... கயிலாய மலையிலே வீற்றிருப்பவரும்; மலைமகளான உமையம்மைக்குத் தன் இடதுபாகத்தைக் கொடுத்தவருமான சிவனாரிடத்திலே உதித்த மகவே!
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே... மேகங்கள் படிந்திருக்கின்ற சோலைகளும் வயல்களும் சூழ்ந்திருக்கின்ற இனிய திருத்தணி மலையின் மீது விருப்பம் கொள்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
கரும்பு வில்லை வளைத்து; மலர்க்கணைகளைத் தொடுத்து; ஒளிந்து நின்றபடி பொருந்திய செருக்கோடு தன்மேல் எய்தவனான மன்மதனை நினைத்த மாத்திரத்திலேயே தன்னுடைய நெற்றி விழியால் எரித்துச் சாம்பலாக்கியவரும்; மலை மகளான உமையம்மைக்குத் தன் இடது பாகத்தைக் கொடுத்தவருமான சிவனாரிடத்திலே உதித்த மகனே! மேகங்கள் படிகின்ற பொழில்களையும் வயல்களையும் கொண்டிருக்கின்ற திருத்தணி மலையின் மீது விருப்பம் கொள்கின்ற பெருமாளே!
துணையிருப்பதும் வலியதுமான* திருப்புகழை விருப்பத்தோடு படிப்பவர்களுடைய மனத் துயரங்கள் ஒழியும் என்று இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் இருப்பவையும்; இலக்கண இலக்கிய நயங்கள் பொருந்தியவையும்; அகம் புறம் போன்ற பல துறைகளைச் சேர்ந்தவையும்; நாலு வகையான கவிகள் எடுத்துச் சொல்வதை உள்ளத்திலே தரிப்பவர்களும்; சொல்பவர்களும்; நினைப்பவர்களுமான உன்னுடைய அடியார்களை போற்றுவதை விட்டுவிட்டு, மார்பாலும் முகத்தாலும் மனத்தை உருக்கச் செய்கின்ற வல்லமையுடைய பெண்களிடம் மயக்கம் கொண்டு அடியேன் திரியலாமோ? (இவ்வாறு மயங்காமல் உன் அடியார்களுடைய புகழைப் பாட அருள்செய்ய வேண்டும்.)
(* இருப்பவல் என்பதை ‘இருப்பு+அவல்’ என்று பிரித்து, ‘உயிர்போகும் நிலையிலே பக்கத்துணையாக இருக்கின்ற அவலைப் போன்ற திருப்புகழ்’ என்று வருவித்துப் பொருள் சொல்வது வழக்கம். அவ்வாறு பிரிக்கவும் வருவித்துக்கொள்ளவும் அவசியம் இல்லாமலேயே, ‘துணை இருப்பதும் வலியதுமான திருப்புகழ்’ என்பது நேரடியான பொருளாக இருப்பதால் இப்பொருள் மேற்கொள்ளப்பட்டது.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

