சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (13.04.1996) தமிழகத் தேர்தல் - ரஜினியின் வருகையை எதிர்நோக்கும் ஆதரவாளர்கள்

திமுக - மூப்பனார் காங்கிரஸ் அணிக்கு ரஜினிகாந்த் தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்தின் இம்முடிவு மாற்றுக் கட்சியினரின் வெற்றியைப் பாதிக்கும் நிலை இருப்பதால், அவர் தனது ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மதிமுக, பாமக போன்ற கட்சிகள் கோரியுள்ளன.

Updated On :11 ஏப்ரல் 2015, 11:13 am

திமுக - மூப்பனார் காங்கிரஸ் அணிக்கு ரஜினிகாந்த் தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்தின் இம்முடிவு மாற்றுக் கட்சியினரின் வெற்றியைப் பாதிக்கும் நிலை இருப்பதால், அவர் தனது ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மதிமுக, பாமக போன்ற கட்சிகள் கோரியுள்ளன.

ரஜினிகாந்தினால் பாதிப்பில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியபோதிலும் அதிமுகவினர் ரஜினி வருகை கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்றே கூறுகின்றனர்.

நரசிம்மராவின் அதிமுக ஆதரவுப் போக்கால் வெறுப்படைந்து தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் முன்னதாகத் தெரிவித்தார். அப்போது ரஜினியின் முடிவை வரவேற்று மதிமுக அறிக்கையே வெளியிட்டது. திக பொதுச் செயலாளர் கி.வீரமணியும் ரஜினியின் முடிவைப் பாராட்டினார்.

ஆனால், நிலைமை மாறி திமுக - மூப்பனார் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட ரஜினி தன் உதவியை வழங்கினார். கூட்டணி ஏற்பட்டவுடன் தமிழகம் காப்பாற்றப்பட்டது என்று ரஜினி அறிக்கை வெளியிட்டார்.

இப்போது ரஜினிகாந்த் நேரடியாகப் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கு அவர் தரப்பில் யாரும் பதில் தரும் நிலையில் இல்லை. அவர் நேரடியாகப் பிரசாரம் செய்யாவிட்டாலும் அவரது ஆதரவாளர்களின் வாக்குகள் அந்த அணிக்கே கிடைக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமாக திமுக அணிக்கு ஆதரவாக ஏற்கெனவே களத்தில் இறங்கிவிட்டனர்.

திமுக தலைவர் கருணாநிதி தன் பிரசாரத்தின்போது ரஜினியின் பெயரை ஆங்காங்கே உச்சரிக்கிறார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறியதை மேற்கோளாகக் காட்டியும் கருணாநிதி பேசுகிறார். அத்தகைய சமயங்களில் ரஜினியின் ஆதரவாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கருணாநிதி பேச்சை ரசிக்கின்றனர்.

ரஜினியின் மேற்கோள், சுவரொட்டிகளாக மாறி மக்களிடையே மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. நடிகர் ரஜினிகாந்த் பொங்கலை முன்னிட்டு அளித்த தொலைக்காட்சிப் பேட்டியின் ஆடியோ காசெட்டுகள் நகரில் பல இடங்களில் ஒலிபரப்பப்படுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியை விமரிசித்தும் நல்லாட்சி ஏற்பட உறுதுணையாக இருப்பேன் என்றும் ரஜினிகாந்த் தனது இரண்டு நாள் பேட்டியில் கூறியிருந்தார். இந்தப் பேட்டி ஒலிபரப்பாகும் இடத்தில் பொதுமக்கள் கூடி நின்று கேட்கின்றனர்.

ரஜினியின் திமுக ஆதரவு அறிக்கைகளே தேர்தல் முடிவை அக்கட்சிக்குத் சாதகமாக மாற்றும் என்று நம்பப்படுகிறது. இருந்தபோதிலும், ரஜினிகாந்த் தான் எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிக்க நேரடிப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.