சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (15.04.1998) காவிரி: பேச்சுக்கே இனி இடமில்லை - முதல்வர் கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு

காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அதைச் சட்டப்படிதான் தீர்க்கமுடியும் என்று முதல்வர் கருணாநிதி, சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Updated On :13 ஏப்ரல் 2015, 9:23 am

காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அதைச் சட்டப்படிதான் தீர்க்கமுடியும் என்று முதல்வர் கருணாநிதி, சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பழனிச்சாமி எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது.

காவிரி நீர் பிரச்னை மிக முக்கியமான பிரச்னை என்பதில் இரு வேறு கருத்து இல்லை. நிதி நிலை அறிக்கை, ஆளுநர் உரை ஆகியவற்றின் மீது பேசியபோது இது குறித்து விளக்கமாகப் பேசியுள்ளேன்.

தேசிய நதி நீர்க்கொள்கை புறக்கணிக்கக்கூடியதல்ல. இருப்பினும், அதையும் காவிரி நீர்ப் பிரச்னைக்கும் முடிச்சுப் போட்டு காவிரிப் பிரச்னையைத் தள்ளிப்போடுவது என்பதை ஏற்க முடியாது.

காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் அளித்த கருத்தின் அடிப்படையில் கர்நாடகத்துடன் நடத்திய பேச்சில் முடிவு ஏற்படவில்லை. பின்னர் அதை உச்ச நீதிமன்றத்துக்கே விட்டுவிட்டோம்.

இந்நிலையில் நடுவர் மன்னத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு வகுத்துத் தந்த விதிமுறை ஏற்புடையதா என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் கருத்தை அனுப்பின. ஆனால் கர்நாடகம் வேறு நிலையை எடுத்தது.

நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த காவிரி நீர் அரசாணையம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியது. அதை ஏற்காத கர்நாடக அரசு அதாரிடி என்பது கமிட்டியாக இருக்க வேண்டும் என்று கூறியது. அது ஒத்துவராது.

இந் நிலையில் பிரதமர் வாஜபேயியைச் சந்தித்தபோது, இப் பிரச்னையில் ஐக்கிய முன்னணி ஏற்கெனவே எடுத்த நிலையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

கர்நாடக முதல்வரின் கருத்தை ஏற்றால் தமிழக விவசாயிகளின் நலன்களுக்கு பெரும் பிரச்னை ஏற்படும்ழ கர்நாடக முதல்வரின் கருத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

இப் பிரச்னையில் இனி பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச வேண்டும் என்று பிரதமர் கூறினால், ஏற்கெனவே எத்தனை முறை பேசினோம் என்பதை எடுத்துக் கூறுவோம்.

இதுபோன்ற விஷயங்களை சூடாக விவாதித்து, இரு மாநில மக்களின் உறவுக்கு ஊறு நேரும் வகையில் வேறுபாடான கருத்துகள் உருவாக இடம் கொடுக்கக்கூடாது. சட்டப்படிதான் இப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதில் இருந்து தமிழக அரசு இம்மியளவும் விலகாது என்றார் முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.