சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(22.04.1946)இந்தியப் பிரச்னையைத் தீர்க்க சர்வதேச மத்தியஸ்தம் செய்துகொள்ள காங்கிரஸ் தயார் - சர்தார் படேல்

இந்தியக் கட்சிகளுக்கு ஒவ்வாத ஒரு முடிவு செய்யப்பட்டாலோ அவர்கள் விரும்பாத ஒரு முடிவு அவர்கள் மீது சுமத்தப்பட்டாலோ அந்த முடிவை அமலில் கொண்டு வரும் பொருட்டு, பிரிட்டிஷ் ராணுவம் இன்னும் அதிக காலத்துக்கு இந்தியாவில் நீடிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமை வெகு நாளைக்கு நிலைக்க முடியாது என்றார் சர்தார் படேல்.

Updated On :22 ஏப்ரல் 2015, 5:59 am

இந்தியப் பிரச்னையைத் தீர்க்க சர்வதேச மத்தியஸ்தம் செய்துகொள்ள காங்கிரஸ் தயார் என்று சர்தார் படேல் தெரிவித்தார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு சர்தார் படேல் அளித்த பேட்டி -

இந்தியக் கட்சிகளுக்கு ஒவ்வாத ஒரு முடிவு செய்யப்பட்டாலோ அவர்கள் விரும்பாத ஒரு முடிவு அவர்கள் மீது சுமத்தப்பட்டாலோ அந்த முடிவை அமலில் கொண்டு வரும் பொருட்டு, பிரிட்டிஷ் ராணுவம் இன்னும் அதிக காலத்துக்கு இந்தியாவில் நீடிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமை வெகு நாளைக்கு நிலைக்க முடியாது.

காங்கிரஸின் நிலை என்றும் தெளிவாக இருந்துள்ளது. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறினால் ஒழிய, வகுப்புப் பிரச்னை தீர முடியாது. இரண்டு கட்சிகளிடையே சமரசம் ஏற்பட்ட பின் பிரிட்டனின் முயற்சிகள் தோல்வி அடைவது நிச்சயம். ஆயினும் பிரிட்டிஷ் தூது கோஷ்டி உண்மையாகச் செய்துவரும் முயற்சிகளுக்கு நாங்கள் என்றும் ஆதரவும் நல்லுணர்வும் அளிப்போம்.

சர்வதேச மத்தியஸ்த முறையின் மூலம் நியாயமான சமாதானமான முடிவு ஏற்படுமென்றால், காங்கிரஸ் அம் முறையை ஏற்றுக்கொள்ளத் தயார்.

மற்றொரு முறையென்னவென்றால், பிரிட்டன் காங்கிரஸின் பிரதிநிதிகளிடத்தோ, லீகின் பிரதிநிதிகளிடத்தோ அதிகாரத்தை ஒப்படைக்கலாம். அவ்வாறு செய்தால் பிரச்னை வெகு சீக்கிரம் தீர்ந்துவிடும்.

இதனால், கொஞ்ச காலத்துக்கு சற்று தகராறு இருக்கலாம். ஒரு கட்சியிடம் அதிகாரத்தை ஒப்பவித்தால் மற்றொரு கட்சி, தானாக வழிக்கு வருகிறது. ஆனால் கொஞ்ச காலத்துக்கு தகராறு இருக்கக்கூடும்தான்.

அதே நேரத்தில் உள்நாட்டு யுத்தம் இருக்காது. இங்கும் அங்கும் சற்றுக் கலவரம் இருக்கக்கூடும். ஒரு பெரிய தேசத்தில் அது இருக்கத்தான் செய்யும்.

இப்பொழுது உடனடியாகச் செய்ய வேண்டியது இடைக்கால சர்க்கார் அமைப்பு. காங்கிரஸையோ லீகையோ கலக்காமல் தூது கோஷ்டி அதைச் செய்ய வேண்டும். மாகாண சர்க்கார்கள் ஒவ்வொன்றையும் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும்படி கேட்க வேண்டும். எஞ்சியுள்ள நான்கைந்து ஸ்தானங்களுக்கு சிறுபான்மை வகுப்பினரைத் தேர்ந்தெடுக்கலாம்.

இடைக்கால சர்க்கார் அமைக்கப்பட்டு மாகாண மத்திய நிர்வாகம் ஒழுங்காக நடைபெற்று வந்தால் நாட்டில் பிரமாத சிக்கல் எதுவும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை. வகுப்புப் பிரச்னையும் தானாகத் தீருமென்று நம்புகிறேன்.

வயது வந்தவர் அனைவருக்கும் வோட்டுரிமையென்ற அடிப்படையில் அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்த வேண்டுமென்பதே காங்கிரஸின் கொள்கை. ஆனால், இதனால் அதிக காலதாமதம் ஏற்படுமென்பதால் இம்முறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை. ஏதாவது ஒரு கட்சி அரசியல் நிர்ணய சபையில் சேர மறுத்தால், அது சேராமலிருக்கலாம். ஆனாலும் இடைக்கால சர்க்கார் அமைக்கப்பட்ட பின்னர் அரசியல் நிர்ணய சபை வேலை செய்வதில் சிரமம் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவில் கலவரம் ஏற்பட்டுவிடக்கூடுமென்ற கிலியை பரப்பும் செய்திகள் மிக விஷமத்தனமானவை.

பிரிஷ்டிஷ் மந்திரிகளை நாங்கள் நம்புகிறோம். அவர்கள் இந்தியாவுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்ற உறுதியுடன் வந்திருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம்.

ஏப்ரல் கடைசியில் அல்லது மே மாதம் நடுவில் முக்கியமான பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்று நம்புகிறேன். ஏற்கெனவே சற்று காலம் கடத்தியுள்ளதால் இந்தியா வகுப்புவாதப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தும்படி ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இப்பிரச்னையைத் தீர்க்க விரைவில் நடவடிக்கைகள் எடுப்பது மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.