சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (26.04.1951) ஒற்றர் முறை எப்போதும் இருந்துள்ளது என்பதற்கு குறளே ஆதாரம். சிஐடி அதிகாரிகள் மாநாட்டில் ராஜாஜி

ஹிட்லர் வைத்திருந்தது போன்ற கெஸ்டாபோ ரகசியப் படை எதுவும் இந்தியாவுக்கு தேவை இல்லை.

News image
Updated On :24 ஏப்ரல் 2015, 12:13 pm


ஹிட்லர் வைத்திருந்தது போன்ற கெஸ்டாபோ ரகசியப் படை எதுவும் இந்தியாவுக்கு தேவை இல்லை. ஏனெனில் இது ஜனநாயக நாடு. மக்களில் பெரும்பான்மையோர் யாரை விரும்புகின்றனரோ அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதே நமது நோக்கம் என்று உள்நாட்டு மந்திரி ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரி கூறினார்.

ராஜ்ய ரகசியப் போலீஸ் (சிஐடி) தலைமை அதிகாரிகள் மத்திய சிஐ பீரோ அதிகாரிகள் ஆகியோரின் மாநாட்டில் அவர் பேசினார். சிஐடி அதிகாரிகள், இந்தியக் குடியரசின் காவலாளர்கள். அவர்கள் தம் கடமையை நிறைவேற்றுவதற்கு உஷார் மனோ உறுதி காரிய சிரத்தை முதலிய குணங்கள் தேவை என்றார்.

சமூக விரோதக் கும்பல்களைக் கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் அவர்களை ஒடுக்குவதில் சர்க்காருக்கு உதவவும் சிஐடி இலாகா தேவை தேவை. எந்த ஒரு நாட்டிலும் எவ்வளவு திறமைமிக்க சர்க்கார் ஆட்சி செலுத்தியபோதிலும் சமூக விரோதக் கும்பல்கள் இருக்கவே செய்யும் என்றும், அதிலும் ஒரு நாடு மிகப் பரந்ததாகவும், ஏராளமான ஜனத்தொகை கொண்டதாகவும் இருப்பது அக்கும்பல்களுக்கு மிகவும் வசதியாயிருக்கும் என்றும் ராஜாஜி கூறினார்.

நியாய உணர்ச்சி மனிதர்களையும், பிறவற்றையும் புரிந்துகொள்வதற்கான நல்ல பொது அறிவு, அரசியல் சட்டத்திட்டம், விசுவாசமாயிருத்தல் ஆகிய பண்பாடுகளுடையவர்களாக சிஐடி அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருடனைப் பிடிக்கத் திருட்டனை அமர்த்து என்பது ஒரு அனுபவபூர்வமான பழமொழி. ஆனால் நல்ல ஒழுக்கம் உள்ள திருடர்களே நமக்கு தேவை. திறமையிலும், சக்தியிலும் இவர்கள் திருடர்களுக்குச் சமமாயிருக்க வேண்டும். அதே சமயத்தில், இவர்கள் பிரஜைகளில் சிறந்தவர்களாகவும், அந்தரங்க சுத்தியுள்ளவர்களாகவும், கடவுளுக்கு பயப்படுபவர்களாயும், சிறந்த தேசபக்தர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் ராஜாஜி.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் இலக்கியப் பொக்கிஷமான திருக்குறளிலிருந்து உள்நாட்டு மந்திரி சில மேற்கோள்கள் காட்டி, குறள் காலத்திலேயே (அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே) இந்நாட்டில் ஒற்றர்கள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்றார். பொது ஊழியத்தின் முக்கியமான துறைகளில் ஒன்றாக அக்காலத்திலேயே உளவறியும் இலாகா கருதப்பட்டு வந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.