நான் விலக விரும்புவது ஏன் என்பது பற்றி காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சியின் விசேஷக் கூட்டத்தில் நேரு பேசியதாவது:
கட்சியினரிடமோ, வேறு யாரிடமோ எனக்கு ஏதோ அதிருப்தி இருக்கிறது என்ற காரணத்துக்காக என்னுடைய அன்றாடப் பதவிப் பொறுப்பில் இருந்து விடுவியுங்கள் என்று நான் கேட்வில்லை. எனக்குள்ளாகவே ஒரு ஆழ்ந்த உணர்ச்சி எழுந்தது. இப்போது அது முற்றி ஒரு நெருக்கடியாகிவிட்டது.
தேசத்துடனோ, (காங்கிரஸ்) ஸ்தாபனத்துடனோ நான் சரியாக சுருதி சேரவில்லையென்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இதிலிருந்து மாறி சரியாக சுருதி சேர விரும்புகிறேன்.
சில மெம்பர்கள் கூறியதுபோல் நான் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. உடல்நிலை சம்மந்தப்பட்ட வரையில் எப்போதும்போல் திடகாத்திரனாகவே நான் இருக்கிறேன். ஆனால், தினசரி மாமூலில் இருந்து விடுபட்ட மன அமைதியையே நாடுகிறேன். அப்போதுதான் என்னிடம் உள்ள பிசகு என்ன அல்லது தேசத்தில் உள்ள பிசகு என்ன, அல்லது கட்சி ஸ்தாபனத்தில் உள்ள பிசகு என்ன என்பதைப் பற்றி நானே சிந்தித்துப் பார்க்க முடியும். என்னுடைய நன்மைக்கே இது அவசியமென்று நான் நினைக்கிறேன்.
கட்சி எனக்கு நம்பிக்கை வோட் அளிக்க வேண்டுமென்று நான் கேட்கவில்லை. ஏனெனில், அதனால் ஒன்றும் பிரயோஜனமில்லை. இதைப்பற்றி நீங்கள் சற்று நிதானமாக, சாவகாசமாக யோசித்துப் பாருங்கள். எனக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். ஏனெனில், ஆரவாரத்துடன் நீங்கள் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் எனக்கு மதிப்பு கொடுத்ததாகாது. நான் ஏதோ சொன்னேன், நீங்கள் ஏதோ செய்தீர்கள் என்று ஆகிவிடும்.
இக் கூட்டத்துக்குப் பிறகு, பத்திரிகையாளர்களுக்காக அவர் பேச்சு பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது. அதில் நேரு பேசியதாவது -
காங்கிரஸ் மட்டுமல்லாமல், தேசத்தின் பொது வாழ்வே திருப்திகரமாக இல்லையென்பதில் சந்தேகமில்லை. பதவி மோகம் அளவுக்கு மீறி இருக்கிறது. காங்கிரஸிலேயே எல்லோரும் பதவிக்காக அலைகிறார்கள். நிர்வாகப் பதவி வகிக்க வேண்டும்; எதாவது தேர்தலுக்கு நிற்க வேண்டும்; அசெம்பிளி அல்லது பார்லிமென்டுக்கு நிற்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இதில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆயினும், அதற்கு ஒரு அளவு உண்டு. ஆனால், நாம் அந்த அளவைத் தாண்டிவிட்டோமென்று நினைக்கிறேன்.
நம் முன்பு பெரிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பெரிய லட்சியங்களுக்காக நாம் போராடுகிறோம். ஏதோ சில தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டால் போதுமென்று நாம் திருப்தியடையவில்லை. இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற பெரிய லட்சியமே என் குறி.
அங்குமிங்கும் ஏதாவொரு தேர்தலில் நாம் ஜெயிப்பதும் ஜெயிக்காததும் பெரிய விஷயமல்ல. அதிலேயே நாம் மூழ்கிவிடக்கூடாது. கட்சி மீது எனக்கு ஒரு வருத்தமும் கிடையாது. செயல்படாமல் ஒதுங்கிவிட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
நான் இன்னும் திறமையுடன் எப்படி செயலாற்ற முடியுமென்பதே பிரச்னை. பார்லிமென்டுக்கு வெளியே இருந்துகொண்டோ அல்லது பிரதம மந்திரி பதவியை வகிக்காமலோ கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் பிறகு திரும்பி வரலாமா என்பதே என்னுடைய பிரச்னை.
நான் இன்று சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு என்னுடைய அறிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கட்சி மெம்பர்களுக்கு என்னிடமுள்ள அன்பையும், விசுவாசத்தையும் நான் அறிவேன். நான் போவதன் மூலம் சில கஷ்டங்கள் ஏற்படக்கூடுமென்று எனக்குத் தெரியும். ஆனால், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மூலம் அதை ஈடு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். பலத்த ஆரவாரத்தின் மூலம் தீர்க்கக்கூடிய விஷயமல்ல இது.
ஒரு தீர்மானத்தைப் பிரேரிப்பதும், துரிதமாக அதை நிறைவேற்றிவிடுவதும் கட்சிக்கோ, எனக்கோ நன்மையளிக்காது. கட்சிக்கு என்னிடம் நம்பிக்கை இருக்கிறதாவென்று நானோ, நீங்களோ சந்தேகப்பட்டு எனக்கு நம்பிக்கை வோட் அளித்ததாக ஆகிவிடும். உங்களுடைய நம்பிக்கையை எந்தச் சமயத்திலும் நான் சந்தேகித்ததே இல்லை.
நடவடிக்கைகளின் கேந்திரத்தில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்க விரும்புகிறேன் என்பதை ஏற்கெனவே ஒருதரம் கூறியிருக்கிறேன். மாதக்கணக்கில் ஆழ்ந்து சிந்தனை செய்த பிறகே அப்படிச் சொன்னேன்.
ராஜ்ய முதல்மந்திரிகளுக்கு நான் எழுதும் கடிதத்திலும் ஒருவாறாக அதைக் குறிப்பிட்டிருக்கிறேன், மேலெழுந்தவாரியாக எதுவும் செய்யும் உத்தேசம் எனக்குக் கிடையாது. பார்லிமென்டரி கட்சிக்கோ, காங்கிரஸுக்கோ, தேசத்துக்கோ கெடுதல் விளைவிக்கக்கூடியது என்று எனக்குத் தோன்றும் எதையும் நான் செய்ய மாட்டேன்.
என்னுடைய அபிப்ராயம் தவறாக இருக்கலாம். ஆனால், அது வேறு விஷயம். நான் கூறுவதில் உள்ள சாதக பாதகங்களை நன்றாகப் பரிசீலனை செய்து பாருங்கள். நான் செய்ய விரும்பும் காரியமே சரியானதென்று நான் நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


