/

இந்த நாளில் அன்று (07.06.1996)தேர்தல் தோல்விக்கு சசிகலா காரணம் அல்ல : ஜெயலலிதா

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு சசிகலா காரணம் அல்ல. அதிமுகவினரில் ஒரு பகுதியினர் சசிகலா மீது பழிபோட்டு தங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர். எந்தத் தவறும் செய்யாத சசிகலாவைப் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜூன் 2015, 12:12 pm

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு சசிகலா காரணம் அல்ல. அதிமுகவினரில் ஒரு பகுதியினர் சசிகலா மீது பழிபோட்டு தங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர். எந்தத் தவறும் செய்யாத சசிகலாவைப் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி -

சசிகலைவையும் அவர் குடும்பத்தினரையும் கட்சியில் தலையிட நான் அனுமதித்ததில்லை. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் தரவில்லை.

சசிகலா மீது புகார் தெரிவித்து எஸ்.டி.சோமசுந்தரம் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். கட்சியில் பல பேர் தவறுகள் செய்திருக்கிறார்கள். தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் மீது குற்றம் வரக்கூடாது என்பதற்காகவும், தவறு செய்தவர்கள் மீது மக்களின் கோபமும் ஆட்சியாளர்களின் கோபமும் திரும்பக் கூடாது என்பதக்காகவும் பிரச்னையைத் திசைதிருப்புகிறார்கள்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத எங்கள் கட்சியினரே எங்கள் வேட்பாளர்களை எதிர்த்து வேலை செய்துள்ளனர். இது மட்டுமின்றி, சில சலுகைகள் கேட்டுக் கிடைக்காதவர்களும் எதிராக வேலை செய்துள்ளனர். அதிமுக ஒட்டுமொத்தமாகத் தோற்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல. குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்துள்ளனர்.

பர்கூரில் நான் மக்களுக்குச் செய்த உதவிகளைப்போல் வேறு எந்த முதல்வரும் உதவிகளைச் செய்திருக்கமாட்டார். இருந்தாலும் என் மீதும் ஆட்சி மீதும் பழிகள் சுமத்தப்பட்டன. திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் ஓர் இயக்கமாகவே நடத்தப்பட்டது. இது தவிர, தேர்தலில் தில்லுமுல்லுகளும் நடந்தன. இதனால்தான் நானும் தேர்தலில் தோற்க நேரிட்டது.

என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை வரும் என்று முதலமைச்சர் கூறுகிறார். மத்திய நிதி அமைச்சரும் கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்கட்டும். அதை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நான் குற்றம் எதுவும் புரியவில்லை. நான் நிரபராதி என்றதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்பதை நிரூபிப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.