தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(07.05.1965)பிரிவினை யோசனையை ஏற்பதே பாகிஸ்தானுக்கு நல்லது - பிரதம மந்திரி சாஸ்திரி புத்திமதி

கட்ச் பகுதியில் போர் நிறுத்தம் செய்வதற்கு பிரிட்டிஷ் பிரதம மந்திரி வில்சன் கூறியுள்ள யோசனையை ஏற்றுக்கொள்வது பாகிஸ்தானின் நலன்களுக்கே நல்லது என்று பிரதம மந்திரி சாஸ்திரி கூறினார்.

News image
Updated On :5 மே 2015, 10:23 am

கட்ச் பகுதியில் போர் நிறுத்தம் செய்வதற்கு பிரிட்டிஷ் பிரதம மந்திரி வில்சன் கூறியுள்ள யோசனையை ஏற்றுக்கொள்வது பாகிஸ்தானின் நலன்களுக்கே நல்லது என்று பிரதம மந்திரி சாஸ்திரி கூறினார்.

அப்படி அவர்கள் ஏற்கவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்குத் தெரியும் என்றும் எச்சரித்தார். இந்திய சர்க்கார் தமது பொறுப்புகளை முழு அளவில் நிறைவேற்றுவார்கள் என்றும் பிரதம மந்திரி கூறினார்.

ராஜ்ய செய்தி, தகவல் இலாகா மந்திரிகளின் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த யோசனைகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாமல் தகராறு பெரிதாக வளரும்படி விட்டுவிட்டால், தேசம் பூராவுமே கொதித்தெழும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிடும்.

நாட்டு மக்களிடையே கட்டுப்பாடும், ஒற்றுமையும் அவசியமென்றும் அப்போதுதான் இந்த அறைகூவலைச் சமாளிக்க முடியும் என்றும் சொன்னார்.

மக்களிடையே இந்த உணர்ச்சியைப் பரப்புவதற்கு ராஜ்ய செய்தி தகவல் இலாகா மந்திரிகளும் அவர்களுடைய இலாகாக்களும் வேண்டிய முயற்சி எடுத்துக்கொள்வார்கள் என்றும் தாம் நம்புவதாகக் கூறினார்.

இந்தத் தகராறு பெரும் போராக மாறிவிடாமல் இருந்தால் நல்லது என்று இந்தியா கருதுகிறது. பெரிய போராட்டம் அல்லது உலக யுத்தத்தின் விளைவுகள் விபரீதமாயிருக்கும். ஆகையால், போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்றும், பூர்வ நிலை ஏற்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கூறியபோது அதை ஆட்சேபிக்கக்கூடாது என்று கருதினோம்.

இந்திய சர்க்காரின் அபிப்ராயத்தை பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கு தெரிவித்துவிட்டோம். ஆனால், போர் நிறுத்தத்துடன் கூடவே பூர்வ நிலை ஏற்பட வேண்டும் என்பதையும் தெளிவாக்கியிருக்கிறோம். அப்போதுதான் சர்க்கார் மற்ற விஷயங்களைக் கவனிக்க முடியும்.

எல்லைப் புறத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. நம்முடைய பிரதேசத்தில் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். நாட்டின் பிரதேச ஆதிபத்யத்தைக் காப்பாற்ற, வேண்டியதையெல்லாம் செய்தாக வேண்டும்.

இந்தியாவைவிட பாகிஸ்தானின் பிரசாரம் ஏன் அதிக பலனுள்ளதாக இருக்கிறதென்று அடிக்கடி கேட்கப்படுகிறது. பொய்யையே ஒருவர் பரப்பிக்கொண்டிருந்தால் ஆரம்பத்தில் அதற்குப் பலன் கிடைப்பது இயற்கையே. நாம் அம்மாதிரி செய்ய விரும்பவில்லை. ஆகையால், நம்முடைய பிரசாரம் சில சமயங்களில் அவ்வளவாகப் பலனுள்ளதாகத் தோன்றாது.

சர்க்கார் உண்மையைத்தான் கூற வேண்டும். ஆயினும், இப்போது பாகிஸ்தான் செய்திருப்பது ஆக்கிரமிப்புதான் என்பதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக்கியிருக்கிறோம். இரு நாடுகளின் அதிகாரிகளும் சந்தித்துப் பேசலாமென்று பாகிஸ்தான் தூக்குவதற்கு முன்பே நாம் சொன்னாம்.

ஆனால், இதற்கு பாகிஸ்தானிடமிருந்து பதில் வரவில்லை. 1960 ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தலாமென்று அக்டோபர் மாதத்திலேயே கூறினோம். இதற்கும் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்னையில் நமது சர்க்காரின் நிலையையும், பாகிஸ்தான் செய்துள்ள தவறுகளையும் மக்களுக்குப் புரியும்படி செய்ய வேண்டும். எந்த நிலைமையையும் சமாளிப்போம் என்ற உற்சாகத்தையும் மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்று சாஸ்திரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.