தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வணக்கம் தமிழா: சின்னஞ்சிறு அறையில் பாலிஷ் கம்பெனியைத் தொடங்கினேன்!

கண்ணைப் பறிக்கும் பளபளப்புடன் எவர்சில்வர் பாத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த பாத்திரங்களைப் பாலீஷ் செய்வதற்கு முன்பு அவை வெறும் தகர பாத்திரங்களைப் போலத்தான் இருக்கும். தகரம் போன்றிருக்கும் அந்தப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:00 pm

ந. ஜீவா

கண்ணைப் பறிக்கும் பளபளப்புடன் எவர்சில்வர் பாத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த பாத்திரங்களைப் பாலீஷ் செய்வதற்கு முன்பு அவை வெறும் தகர பாத்திரங்களைப் போலத்தான் இருக்கும். தகரம் போன்றிருக்கும் அந்தப் பாத்திரங்களைப் பாலீஷ் செய்வதற்கு என்று ஒரு சோப் உள்ளது. அதை "மெட்டல் பாலீஷிங் காம்பவுண்ட்' என்பார்கள். அதைத் தயாரித்து "வாசு கெமிக்கல்ஸ்' என்ற பெயரில் தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் சந்தைப்படுத்தியிருக்கிறார் வி. வாசுதேவன். கைத்தறி நெசவு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர், என்ன செய்தார்? எப்படி உழைத்தார்?

 கேள்விகளோடு அவரை அணுகினோம்:

 ""நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரை அருகேயுள்ள அவனியாபுரம்தான். அப்பா வயணப் பெருமாள். அம்மா குருவம்மாள். அம்மா காய்கறி வியாபாரம் செய்து வந்தார். என்னையும் சேர்த்துக் குடும்பத்தில் 5 பேர். நான் மூன்றாவதாகப் பிறந்தேன். குடும்பத்தில் வறுமை. வீட்டில் எனது மூத்த சகோதரர்கள் பள்ளிப் படிப்பை முடிக்காத நிலையில், வீட்டில் நான் ஒருவன் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். நான்காண்டுகள் படிப்பு. ஆனால் வீட்டின் வறுமை காரணமாக இரண்டாண்டுகளுக்கும் மேல் படிக்க முடியவில்லை.

 எங்கள் ஊரில் நெசவுத் தொழில் அதிகம். நான் சிறுவனாக இருந்தபோதே நெசவு செய்யும் பகுதிகளுக்குச் சென்று நெசவு செய்யக் கற்றுக் கொண்டிருந்தேன். எனவே படிக்க முடியாமற் போனதும் நெசவுத் தொழிலில் கூலி வேலைக்குப் போனேன். 1965}இல் ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் கூலியாகத் தருவார்கள். 1970 வரை நெசவு வேலைதான் செய்து வந்தேன்.

 இதற்கிடையில் மதுரை நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளிதழ் ஒன்றை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதுவும் மிகவும் அலைச்சல் உள்ள வேலைதான். எமர்ஜென்சி காலத்தில் அந்த நாளிதழை வார இதழாக மாற்றிவிட்டார்கள். அதனால் எனக்கு வருமானம் மிகவும் குறைந்துவிட்டது. வேறு வழி?

 மீண்டும் நெசவு வேலைக்குப் போகத் தொடங்கினேன்.

 அப்போது எனக்குத் திருமணம் ஆகி குழந்தைகளும் பிறந்துவிட்டார்கள். நெசவு வேலை உடல் உறுப்புகள் எல்லாவற்றுக்குமான வேலை. காலைத் தொங்கப்போட்டு, அமர்ந்தவாறே செய்யும் வேலை. ஆளை உருக்கிவிடும். எனவே அந்த வேலையை விட்டு வேறு வேலை செய்யலாம் என்று நீண்டகாலமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.

 நான் ஏற்கெனவே நாளிதழ் விநியோக வேலை செய்து கொண்டிருந்தபோது மதுரை நகரில் உள்ள பல எவர்சில்வர் பட்டறைக்காரர்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தார்கள். அப்போதுதான் நான் முதன்முதலாக மெட்டல் பாலீஷிங் சோப்பையே பார்த்தேன்.

 மெட்டல் பாலீஷிங் சோப்புகளை அப்போது தமிழ்நாட்டில் யாரும் உற்பத்தி செய்யவில்லை. மும்பையிலிருந்தும், மைசூரிலிருந்தும்தான் தருவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே மெட்டல் பாலீஷிங் சோப்பைத் தயார் செய்தால் என்ன? என்று எனக்குத் தோன்றியது. அதிகம் போட்டி இல்லாத தொழிலாக அது அப்போது இருந்தது.

 ஆனால் தொழில் தொடங்க கையில் மூலதனம் இல்லை. கைத்தறி நெசவு வேலை செய்து கிடைக்கும் கூலியில் சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து, பல புத்தகங்களைப் படித்துத் தயாரிப்பு முறைகளைத் தெரிந்து கொண்டு, மெட்டல் பாலீஷ் சோப்பைத் தயாரித்தேன்.

 நானும் எனது மனைவி தமயந்தியும் சேர்ந்து, எந்த இயந்திர உதவியும் இல்லாமல், வீட்டு அடுப்பைப் பயன்படுத்தி முதன்முதலில் தயாரித்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டின் படுக்கையறையும், உணவு உண்ணும் அறையும், மெட்டல் பாலீஷ் தயாரிக்கும் அறையும் ஒரே ஒரு அறைதான். அதில் தொழில் தொடங்கி முதல் ஐந்து ஆண்டுகள் வரை அங்கேயே நடைபெற்றது.

 நான் தயாரித்த மெட்டல் பாலீஷ் சோப்பை எனக்குப் பழக்கமான எவர்சில்வர் பட்டறைக்காரர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதைப் பயன்படுத்திப் பார்த்து, குறை, நிறைகளைச் சொன்னார்கள். அவர்கள் சொல்லிய குறைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அவற்றைச் சரி செய்து மீண்டும் தந்தேன். இப்படித் தொடர்ந்து செய்ததில் நான் தயாரித்த மெட்டல் பாலீஷ் சோப்புகள் தரத்தில் மிகச் சிறந்தவையாகின.

 என்னுடைய தயாரிப்புகள் நன்றாக இருக்கின்றன என்பதை வாய்மொழியாகக் கேட்டு, என்னிடம் பலர் ஆர்டர் செய்தார்கள். மதுரையில் மட்டுமின்றி, கும்பகோணம், சென்னை என தமிழ்நாடு முழுவதும் நாங்கள் தயாரித்த மெட்டல் பாலீஷ் சோப்புகள் விற்பனையாகின.

 தொழில் விரிவடைய விரிவடைய வேலை செய்ய அதிகப் பேர் வேண்டுமே? என்னுடைய அண்ணன் மகன்கள் எனது தொழிலுக்கு உதவியாக வந்தார்கள். இன்று வரை எனது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் இந்தத் தொழிலில் கடுமையாக உழைத்து வருகிறோம்.

 மதுரை, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் விற்பனை மையங்களைத் திறந்திருக்கிறோம். இப்போது என்னிடம் அறுபது பேர் வரை வேலை செய்கிறார்கள்.

 தொழிலில் உபரியாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு அந்தக் காலத்தில் நிலங்களாக வாங்கிப் போட்டேன். அதை ஒரு சேமிப்பாகக் கருதினேன். ஆனால் சமீப ஆண்டுகளில் நிலத்தின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், அந்தச் சேமிப்பின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துவிட்டது.

 தொழில் தொடங்கி நடத்தத் தொடங்கிய பின்பு, எப்படிக் கணக்கு வழக்குகளை வைத்துக் கொள்வது? எப்படி வரி கட்டுவது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாமல் இருந்தது.

 1995 - இல் வருமான வரித்துறையினர் நான் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குத் தொடர்ந்தனர். அதன் பிறகுதான், ஆடிட்டர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். முறையாகக் கணக்குகளைப் பராமரித்து வருகிறேன். மத்திய கலால் வரி, விற்பனை வரி போன்றவற்றுக்காகப் பல லட்சம் ரூபாய்களை வரியாகக் கட்டியிருக்கிறேன்.

 என்னைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களின் திருப்தி மிக மிக முக்கியமானது. தொழில் ஆரம்பித்த காலத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் தேவையைத் தெரிந்து கொண்டு அதை உடனே நிறைவேற்ற முயற்சி செய்வேன். அவர்கள் சொல்லும் குறைகளை உடனே நிவர்த்தி செய்வேன். அப்படிச் செய்ததால் நான் மிகத் தரமான மெட்டல் பாலீஷ் சோப்புகளைத் தயாரித்து அவர்களுக்குத் தர முடிந்தது. அதனால் பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யாமலேயே எனது தயாரிப்புகள் அதிக அளவில் விற்றன; விற்கின்றன'' என்றார் உற்சாகமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.