நந்தனின் சரித்திரம் ஆனந்தம்!
வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றத்தின் சார்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் செல்வி ஈ.சிந்துஜாவின் 'நந்தனார் சரித்திரம்' இன்னிசை சொற்பொழிவு நடைபெற்றது.

வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றத்தின் சார்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் செல்வி ஈ.சிந்துஜாவின் "நந்தனார் சரித்திரம்' இன்னிசை சொற்பொழிவு நடைபெற்றது. காதுக்கினிய பாடல்களுடன் இணைந்த கருத்துக்கினிய சொற்பொழிவின் தொகுப்பு:
"நந்தனின் சரித்திரம் ஆனந்தம்' என்ற இனிய பாடலுடன் சொற்பொழிவைத் தொடங்கினார் சிந்துஜா.
பரமசிவன் கருணையுள்ளவன். தன்னைக் காலால் உதைத்த பக்தனைக்கூட அவன் உள்ளன்பை உணர்ந்து அருள் புரிந்தவன். ஈசனின் அருள், ஏற்றத்தாழ்வுக்கும், ஏழை, பணக்கார பேதத்துக்கும் அப்பாற்பட்டது.
திருநாளைப் போவார் என்று பெயர் பெற்ற நந்தனாரின் சரித்திரத்தைப் படைத்தவர் கோபால கிருஷ்ணபாரதி. இவர் 1811 முதல் 1896 வரை வாழ்ந்தவர். இந்த எளிய பாடல்கள் கொண்ட நூலை தமிழில் பக்தி மார்க்கம் மற்றும் சங்கீத மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைத்தார்.
மாயவரத்தில் வாழ்ந்த கோபால கிருஷ்ணபாரதி, நாகப்பட்டினத்தில் ஜோதி தரிசனம் தோன்றி வழிகாட்ட, நந்தனார் சரித்திரத்தை இயற்றினார். இயற்றிய பாடல்களை தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் காட்டி, நூலுக்கு முன்னுரை வழங்குமாறு கேட்டார். பிள்ளையவர்கள், பாடல்கள் இலக்கண மரபை ஒட்டி இல்லை என மறுத்துவிட்டார்.
வருத்தமடைந்த பாரதி, பிள்ளையவர்களின் வீட்டுத் திண்ணையிலேயே, வாழ்த்துரை பெறாமல் போக முடியாதெனத் தங்கிவிட்டார். அன்று மதியம், பிள்ளையவர்கள் உணவு உண்டபின், ஓய்வு எடுக்கும்போது, வெளியிலிருந்து கோபால கிருஷ்ணபாரதி தன்யாசி ராகத்தில் பாடிய நந்தன் சரித்திரப் பாடலான "கனக சபாபதி தரிசனம் ஒரு நாள் கண்டால் கலி தீரும்' கேட்டு, வெளியில் வந்து பாரதியைத் தழுவி, "யாப்பிலக்கணம் இல்லாது போனாலும் மனதைத் தொடுகிற சங்கீதப் பாடல்கள்' என வாழ்த்தி முன்னுரை வழங்கினார்.
தியாகராஜ சுவாமிகளும், நந்தன் சரித்திரப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, பாரதியை, ஆபோஹிராகத்தில் "தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற பாடலை இயற்றச் செய்து, இந்நூல் "பிரம்மானந்தரசம்' என்று பாராட்டினார்.
நந்தனார் கொள்ளிடத்திற்கு அருகிலுள்ள ஆதனூர் என்ற அழகிய சின்னஞ்சிறு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர். உழைப்பையே வாழ்வாகக் கொண்ட மக்களிடையே, இசைக்கருவிகளுக்கு வார்த்தோல் போர்த்தும் தொழிலையும், உடன் கூலிக்கு விவசாயம் செய்யும் தொழிலையும் செய்து கொண்டு, எப்போதும் "சிவன்' நினைவாகவே, பக்தியையும், கடமையையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர்.
அவர் குலத்தோர், எந்த ஆலயத்திலும் நுழைய முடியாத கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில் திருப்புங்கூர் ஆலயத்தில் தேர் நிற்கும் இடத்திலிருந்தாவது, ஈசனை தரிசிக்கலாம் என தம் ஊர் மக்களோடு வந்தார் நந்தனார். சிவலிங்கத்தைக் காண முடியாமல் மலைபோல் நந்தி மறைத்திருக்க வருத்தம் கொண்டார் நந்தனார். சிவபெருமானே நந்தியிடம் விலகச்சொல்லி, நந்தனாருக்கும் மற்றோருக்கும் காட்சி தந்தருளினார்.
சிவதரிசனம் பெற்று மனத்திருப்தியோடு ஆதனூர் திரும்பி வருகையில், ஒரு சிவாலயத்துக்கு அருகில் இருந்த குட்டையைக் குளமாக ஆக்க விரும்பினார் நந்தனார். அவர் வேண்டுகோளுக்கு செவிமடுத்து சிவனே, கணபதியை மண்வெட்டியோடு அனுப்பி குளம் வெட்டச் செய்ய,சிவனின் முடியிலிருந்து கங்கை வழிய குளம் புனித நீர் பெற்றது.
சிதம்பரத்தில் தில்லை நடராஜனைக் காண ஆவல் கொள்கிறார் நந்தனார். தில்லைக்குப் போக பண்ணையாரிடம் அனுமதி கேட்க, அவர் "நாற்பது வேலி புஞ்சை நிலத்தில், நாற்று நட்டால் பின் தில்லை போகலாம்' என்கிறார். திகைத்துப்போன நந்தனுக்கு அருள்புரிந்து, சிவனே தன் கணங்களை அனுப்பி வயலில் நாற்று நட்டு, நந்தனின் பெருமையை மற்றோர்க்கு உணர்த்துகிறார்.
தில்லை மூவாயிரவர்களின் கனவில் தோன்றிய நடராஜப் பெருமான், சிதம்பரம் வந்து சேரும் நந்தனாரை பெருமையோடு தன் சந்நிதிக்கு அழைத்து வருமாறு பணித்தார். அக்னிப் பிரவேசம் செய்து,
தெய்வ ஒளி பெற்ற நந்தனார், "திருநாளைப் போவார் நாயனாராக' மாற, தில்லை மூவாயிரவர்கள் சகல மரியாதைகளுடன் அழைத்துச் சென்றனர். "நாளை சிதம்பரம் போவேன்' என எந்நேரமும் ஏக்கத்துடன் ஆதனூரில் எல்லோரிடமும் கூறியதால், நந்தனார் "திருநாளைப் போவார்' எனப் பெயர் பெற்றார் என்றார் சிந்துஜா.
"வாரிருக்குது, தோலிருக்குது', "சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்', "சற்றே விலகி இரும்பிள்ளாய்', "தில்லையம்பலத்தலம் ஒன்றிருக்குதாம்', "ஐயேமெத்தக்கடினம் உனதடிமை', "பாடும் சிதம்பரமோ', "திருநாளைப் போவார் தரிசனம் காண', "தாதை என்றாடுவார் தத்தித்தை', "கனகசபைத் திருநடனம்' முதலான கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரப் பாடல்களையும், சேக்கிழாரின் பெரியபுராணப் பாடல்கள் மற்றும் முத்துத்தாண்டவர் பாடல்களையும் பாடி நந்தனாரின் வரலாற்றைக் கண்முன் காட்சிகளாகக் கொண்டு வந்தார்.
கணீரென்ற குரலில், இனிய தெள்ளு தமிழ்ப்பாடல்களை, உச்சரிப்பு சுத்தமாய், காதுக்கினிமையாய் பாடி, பாடல்களின் கருத்துச் செறிவையும் விளக்கி, கேட்டவர்களைப் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தினார் சிந்துஜா. எதிர்காலத்தில் இன்னிசை சொற்பொழிவில், தன்னுடைய தனி முத்திரையைப் பதிப்பார் என்பதற்கு சபையில் பக்தர்களின் கைத்தட்டலே கட்டியம் கூறுவதாய் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

