குடும்ப விழாவான நாடக விழா!
சென்னை, ராணிசீதை அரங்கத்தில் "டம்மிஸ் டிராமா' குழு 13-ஆவது ஆண்டுத் தொடக்க விழாக் கொண்டாட்டத்தை சமீபத்தில் நடத்தியது. மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக ஐந்து நாடகங்களை நடத்தினர். எம்.பி.ஏ., பொறியியல் படி


சென்னை, ராணிசீதை அரங்கத்தில் "டம்மிஸ் டிராமா' குழு 13-ஆவது ஆண்டுத் தொடக்க விழாக் கொண்டாட்டத்தை சமீபத்தில் நடத்தியது. மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக ஐந்து நாடகங்களை நடத்தினர். எம்.பி.ஏ., பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், வீட்டு உள் அலங்காரம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியிலிருப்பவர்கள்... இப்படிப் பலதரப்பட்டவர்களும் இந்த நாடகங்களில் நடித்திருந்தனர். தொழில்முறை நாடகக் கலைஞர்கள் வெகு சிலரே என்பது, நாடகங்களைப் பார்க்க வந்திருந்த பலரின் புருவத்தை உயர்த்தியது!
எல்லா நாடகங்களையும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்தனர். இந்த நேர ஒழுங்கை நிகழ்ச்சி நடந்த எல்லா நாளும் கடைபிடித்ததற்கே பாராட்டலாம். இனி... ஒவ்வொரு
நாடகத்தைப் பற்றியும் சில வரிகள்.
அதிதி: ஒட்டுமொத்த ஊரே காலியான இடத்தில் சங்கரன் மட்டும் ஒரு வீட்டில் இருந்துகொண்டு, ஆள் நடமாட்டமில்லாத அந்த ஊரில் தப்பித் தவறி வருபவர்களை விருந்தாளிகளாக மதித்து உபசரித்து வருகிறார்.
விருந்தாளிகளை அன்புடன் உபசரிக்கும் சங்கரனின் வீட்டையும் சேர்த்து வாங்கிவிட்டதாக சொல்லும் தொழிலதிபர் ராம், வெளிநாட்டில் படித்து விட்டு வரும் தன் மகன் நிர்வகிப்பதற்காக அங்கு மருத்துவக் கல்லூரிகளையும் பொறியியல் கல்லூரிகளையும் கட்டுவதற்கு நினைக்கிறார். சங்கரனை அந்த இடத்திலிருந்து விரட்டுவதற்குப் பார்க்கிறார் ராம். இறுதியில் அவருடைய மகன் வெளிநாட்டில் நடந்த ஒரு விபத்தில் பலியாகிவிடவே, கல்லூரி கட்டும் திட்டத்தையே நிறுத்திவிடுகிறார்.
நாடகத்தில் அமைச்சர் வைத்தியலிங்கமாக நடித்திருக்கும் ஆர்.கிரிதரனைத் ("கபாலி சொன்னா சரியாத்தான்பா இருக்கும்' என்று இவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் அரங்கில் கைதட்டல் காதைப் பிளக்கிறது!) தவிர, நாடகத்தில் எல்லாப் பாத்திரங்களும் தத்துவங்களை உதிர்க்கின்றனர்... அதுவும் ஏகத்துக்கும் ஆங்கிலத்தில்!
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பயம், தைரியம் இதற்கு இடையில் நம்பிக்கை படும் பாட்டை அற்புதமாக சித்திரித்திருப்பதில் நாடகம் வெற்றி பெற்றிருக்கிறது.
"இந்த இடத்தில் காலை வைக்கலாம்.. தலை வைத்துப் படுக்கலாம்... கை வைக்க வேண்டாமே...' என்று தற்போதைய சூழ்நிலைக்குப் பொருந்தும் வசனங்களை நாசூக்காகப் பயன்படுத்தியிருந்தது நயமாக இருந்தது.
"எது கோயில் இல்லை; யார் தெய்வம்
இல்லை?' என்ற சிந்திக்க வைக்கும் கேள்வியோடு நாடகம் இறை நம்பிக்கையை வளர்க்கிறது.
உத்தியோகம் வயசு லட்சணம்!: தனியார் நிறுவனத்தில் பணியிலிருக்கும் 48 வயதான ராமமூர்த்திக்கு வயது 58 ஆகிவிட்டது என்று கூறி வேலையிலிருந்து நிற்கச் சொல்கிறது நிர்வாகம். இதற்கு ஆதாரம், "எனக்கு 58 வயது ஆகிவிட்டது...' என்று நிர்வாகம் எழுதிய ஒப்புதல் கடிதத்தைப் படித்துப் பார்க்காமல் ராமமூர்த்தியே கையெழுத்திட்டிருப்பதுதான்!
அவர் வேலையில் சேரும்போது கொடுத்திருந்த பள்ளிச் சான்றிதழை ஒருபக்கம் நிர்வாகம் தேடிக் கொண்டிருக்க, ராமமூர்த்தி, வழக்கறிஞரின் உதவியோடு நீதி கேட்டு போராடுகிறார். இறுதியில் நிர்வாகம் ராமமூர்த்தியின் பள்ளிச் சான்றிதழை தேடி எடுத்துவிடுகிறது. உண்மையை உணர்ந்து தவறுக்கு வருந்தி, ராமமூர்த்தியை திரும்பவும் பணிக்கு அழைக்கிறது.
வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் முன்பிருந்த பொறுப்பான பதவியிலிருந்து விலக்கிவிடுகின்றனர். வீட்டில் மனைவி, மகள், அலுவலக உதவியாளர் என எல்லாரும், "என்ன எழுதி இருக்கிறதுன்னு பார்த்துட்டு கையெழுத்து போடமாட்டீங்க சார்.. இனிமேலாவது என்ன ஏதுன்னு படிச்சுபோடுங்க சார்...' என்று குத்தலோடு சொல்லும் அறிவுரைகள். போராடி கிடைத்த வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுகிறார் ராமமூர்த்தி.
ஒரு பொறுப்பான ஊழியர், ஒரு நல்ல மனிதர், செய்யும் சிறிய கவனக் குறைவான வேலையைக் கூட, இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை இதைவிட ரத்தினச் சுருக்கமாக யாராலும் சொல்ல முடியாது. ராமமூர்த்தியாக நடித்த ஸ்ரீதரும், அவரது மனைவியாக நடித்த ஷோபனாவும் பிரமாதப்படுத்தியிருந்தனர்.
லைஃப் லைன்: நகரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருப்பவர் சுதர்ஸன். மருத்துவப் பணியைத் தன் உயிரினும் மேலாக மதிப்பவர். பணி மீதான அவரின் அதீத ஈடுபாட்டாலேயே அவரது மனைவி விவாகரத்து பெறுகிறார். அவரது மகளும், மத்தியில் ஆளுங்கட்சி உறுப்பினரின் செல்வாக்கில் கட்சியின் முக்கியப் புள்ளி ஒருவரும் ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு வருகின்றனர். "சைஸ் 6' எலும்பு இருவருக்கும் தேவைப்படுகிறது. கிடைப்பது ஒன்றுதான். அதை யாருக்குப் பொருத்துவது என்று குழப்பம்.
இதுதான் நாடகத்தின் மையம். ஆனால் நோக்கம் அற்புதமானது. உடல் உறுப்பு தானங்களையும் மருத்துவ முறையில் நவீன அறிவியலைக் கொண்டு இதுபோன்ற உயிர் காக்கும் உறுப்புகளைச் செயற்கை முறையில் தயாரிக்க வேண்டியதின் அவசியத்தையும் சொல்லியது நாடகம். சுதர்ஸனாக நடித்த ஸ்ரீவத்சன் உணர்வு பொங்க நடித்தார் என்றால், ஜனார்த்தன ரெட்டியாக நடித்த கிரிதரன் (இயக்குநர், இசையமைப்பாளரும் இவரே) மேடையில் தோன்றும் போதெல்லாம் அரங்கில் சந்தோஷ ஆரவாரம்!
ஐ.சி.யூ.: டாக்டரின் மகளுக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் கைராசியான மருத்துவருக்கும் காதல் அரும்புகிறது. டாக்டரானாலும் காதல் என்றால் எதிர்க்கத்தான் செய்வார் போலும்! அதற்காக ஆளுங்கட்சி பிரமுகரின் உதவியோடு, தன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் கையை உடைக்கும் அளவுக்கு கீழிறங்குவாரா?
காதலை எதிர்க்கும் மருத்துவர் தன்னுடைய கடமையிலிருந்து தவறிவிட்டதை வருந்தி, தலைமை மருத்துவர் பதவியிலிருந்து விலகுகிறார். சோகமான காட்சியில் கூட, "நான் டாக்டரோட சம்பந்தியாக்கும்...' என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டு, எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பாத்திரத்தின் மேல் எரிச்சல் வருகிறது. ஆனால் இறுதிக் காட்சி நெகிழ்ச்சியடைய வைக்கிறது!
சியாமளம்: உணர்வுப்பூர்வமாக மூத்த தலைமுறை கட்டிய வீட்டின் பெயர் சியாமளம். எதிர்காலத்தில் அதை யாரும் தன்னிச்சையாக விற்கக் கூடாது என்பதற்காக உயில் எழுதிவைக்கிறார் சியாமளா பாட்டி. அதன்படி குடும்ப உறுப்பினர்கள் எல்லோரின் சம்மதத்துடன்தான் வீட்டை விற்கமுடியும்.
எனவே, மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிரனேஷ் விற்க முயற்சிக்கிறான். அவ்வளவு பெரிய வீட்டை விற்பதற்கு ஏறக்குறைய 21 சொந்தங்களிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருக்கிறது. அதில் கையெழுத்துப் போடுவதற்காக அமெரிக்காவிலிருந்து பிரனேஷின் அத்தை லஷ்மி வருகிறார்.
காதல் திருமணத்தால் வெளிநாட்டுக்கு ஓடிப் போகும் லஷ்மி, சியாமளா பாட்டி கைப்பட எழுதியிருக்கும் டைரியில் இருக்கும் விஷயங்களை அண்ணன் மகள் ஷண்மதியின் மூலம் அறிகிறாள். தன்னுடைய ஒருத்தியின் கையெழுத்து இல்லாவிட்டாலும் இந்த வீட்டை விற்கமுடியாது. அதேநேரத்தில் இந்த வீட்டை பராமரிப்பதற்கு என்னால் முடிந்தவரை நான் வெளிநாட்டிலிருந்து உதவுகிறேன்... என்று ஷண்மதியிடம் மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்கிறாள்.
வீடு என்பது செங்கல்லும் சிமெண்டும் மட்டும் கொண்டு உருவானதில்லை, அன்பாலும் ஞாபகங்களாலும் உருவானதுதான் என்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லியது நாடகம்.
ஷண்மதி பாட்டியின் டைரியைப் படிக்க ஆரம்பித்தவுடன் மேடையில் இருக்கும் பின்னணிகளை அந்தக் காலத்திற்கு மாற்றி, உடனே நம்மை மூன்று தலைமுறைக்கு முன் கொண்டுசென்றது புதுமையாக இருந்தது.
ஒருசில வேடங்களில் ஒருவரே மீண்டும் நடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் மருத்துவர் வேடத்தில் ஸ்ரீவத்ஸன்). இசை, மேடை நிர்வாகம், ஒளியமைப்பு என்று பல விஷயங்களும் நாடகத்திற்கு பலம் சேர்த்தன.
குடும்ப விழாக்களுக்கு வருவது போல மக்கள் மூன்று நாள்களும் வந்தது, நாடகங்களுக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை உறுதி செய்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...