வணக்கம் தமிழா: முதன் முதலில் விவசாயக் கண்காட்சி!
விவசாயக் கண்காட்சியாவது? வெற்றி பெறுவதாவது? என்று இகழ்ச்சியாக எல்லாரும் பேசிக் கொண்டிருந்த காலத்தில் முதன்முதலில் கோவையில் துணிந்து விவசாயக் கண்காட்சியை நடத்தியவர் பி.வெங்கடேஷ். கோவை தொண்டாமுத்தூர் அர


விவசாயக் கண்காட்சியாவது? வெற்றி பெறுவதாவது? என்று இகழ்ச்சியாக எல்லாரும் பேசிக் கொண்டிருந்த காலத்தில் முதன்முதலில் கோவையில் துணிந்து விவசாயக் கண்காட்சியை நடத்தியவர் பி.வெங்கடேஷ். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான அவர், விவசாயத்தைப் பார்த்தோமா? காலத்தை ஓட்டினோமா? என்று இருக்காமல், இப்போது விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், வீட்டு உள் அலங்காரத்துக்கு, பஸ், டிரக் போன்றவற்றுக்கு, நுகர்வோர் பொருள்களுக்கென்று கண்காட்சிகள் பலவற்றை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
""எனது குடும்பம் விவசாயக் குடும்பம். அப்பா பழனிச்சாமி, அம்மா புஷ்பா. நான் எம்.ஏ. மக்கள் தொடர்பியல், இதழியல் படித்து இருக்கிறேன். விவசாயக் குடும்பமாக இருந்தாலும் படித்து முடித்ததும் ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காக "சசி அட்வர்ட்டைசிங்' கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். கொஞ்ச காலத்தில் அதிலிருந்து விலகிவிட்டேன்.
என்றாலும் எனக்கு விவசாயத்திலேயே அதிக நாட்டம் இருந்தது.
முதலில் போல விவசாயம் செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. விவசாய வேலைகள் செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் ரொம்பவும் திண்டாட்டமாக இருந்தது. எனவே விவசாய வேலைகளைச் செய்ய நவீனமுறைகள் தேவைப்பட்டன. நவீன இயந்திரங்கள் தேவைப்பட்டன. நான் அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நான் தெரிந்து கொண்ட விஷயங்களை எல்லா விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்ன வழி? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது கோவையில் விவசாயக் கண்காட்சிகள் எதுவும் நடைபெறவில்லை. பெங்களூரில் அப்படிப்பட்ட கண்காட்சிகள் சக்கைபோடு போட்டுக் கொண்டு இருந்தன. அவற்றைப் போன்ற கண்காட்சிகளைக் கோவையில் நடத்தினால் என்ன? என்று தோன்றியது.
1998 ஆம் ஆண்டு கோவையில் விவசாயக் கண்காட்சி நடைபெறும் என்று துணிந்து அறிவித்துவிட்டேன். கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய விவசாயிகள் இருப்பதால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் எனது முயற்சிக்கு விவசாயப் பல்கலைக் கழகம் கூட ஊக்கமளிக்கவில்லை. விவசாயிகளாவது, கண்காட்சிக்கு வருவதாவது என்ற எண்ணம் அப்போது எல்லாரிடமும் நிலவியது.
ஆனால் விவசாயக் கண்காட்சி ஆரம்பித்த மறுநாளே நிறைய விவசாயிகள் வந்து குவிந்துவிட்டனர். கோவையைச் சுற்றியுள்ள பகுதிளில் இருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்தனர். வெளியூர்களிலிருந்து வந்த விவசாயிகள் காலை 6.00 மணிக்கே கண்காட்சி நடந்த இடமான கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்திற்கு முன்பு குவிந்து நின்றனர்.
இதற்குக் காரணம், இந்தக் கண்காட்சியில் விவசாயிகளுக்குத் தேவையான இயந்திரங்கள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், விதைகள் போன்றவற்றைத் தரும் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்திருந்ததுதான். அந்த நிறுவனங்கள் எங்களுக்கு ஸ்டாலுக்கான வாடகையைத் தந்ததோடு, பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமான அரங்கங்களையும் அமைத்திருந்தனர். அவை விவசாயிகளைப் பெரிய அளவில் கவர்ந்துவிட்டன. கண்காட்சி நடந்த நான்கு நாட்களில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் கண்காட்சிக்கு வந்துவிட்டனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டு முதல் கோவையில் உள்ள விவசாயப் பல்கலைக் கழகம் நல்ல ஆதரவு கொடுத்தது. நான் நடத்திய விவசாயக் கண்காட்சிகளைப் பார்த்துவிட்டு, வேறு சில அமைப்புகளும் விவசாயக் கண்காட்சிகள் நடத்த முன்வந்தன.
மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற ஊர்களிலும் விவசாயக் கண்காட்சிகள் நடத்த ஆரம்பித்தனர். நாங்களே கோவையில் மட்டுமல்லாமல், மதுரை தமுக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகள் விவசாயக் கண்காட்சிகள் நடத்தினோம்.
இதனால் கோவையில் இப்போது நடக்கும் விவசாயக் கண்காட்சிகளில் பிற ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் பேர் வருவதில்லை.
வீட்டில் வளர்க்கப்படும் வாழை, தென்னை மரக்கன்றுகளையும், அலங்காரச் செடிவகைகளையும், பூச்செடிகளையும் விற்பனை செய்யும் அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இவற்றுக்குத் தேவையான எளிய கருவிகள், உரங்களும் விற்பனை செய்யப்பட்டன. எனவே நாங்கள் நடத்தும் விவசாயக் கண்காட்சிகளில் வீட்டுப் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதுதவிர, வீட்டு உள் அலங்காரம் தொடர்பான கண்காட்சியையும் நடத்துகிறோம். நுகர்வோர் பொருட்களுக்கான "மெகா பிராண்ட் கன்ஸ்யூமர் புராடக்ட் எக்ஸ்போ'வையும் நடத்துகிறோம். "பஸ்,டிரக் எக்ஸ்போ' வையும் நடத்துகிறோம்.
நாங்கள் 1998}இலிருந்து தொடர்ந்து பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். என்றாலும் விவசாயத்தை விட்டுவிடாமல் வாழை, கரும்பு, பாக்கு, தென்னை விவசாயத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
பொதுவாக கண்காட்சியை இன்று நினைத்து நாளை தொடங்கிவிட முடியாது. ஒரு கண்காட்சி நடத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அதற்கான தயாரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டும். அரங்கு ஒதுக்குவது, கண்காட்சியில் பங்கு கொள்ள விரும்புபவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது, கண்காட்சி நடத்தும் இடத்தைத் தேர்ந்தெடுப்பது, கண்காட்சி நடத்த அனுமதி வாங்குவது உட்பட பல வேலைகளை உரிய நேரத்தில் செய்ய வேண்டும்.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் திறன் வேண்டும். எதிர்பாராமல் வருகிற பிரச்னைகளைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் இருப்பதால்தான் நாங்கள் வெற்றிகரமாக பல கண்காட்சிகளை நடத்த முடிகிறது'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...