தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் இளவல் ஹரிஹரன்

Updated on
1 min read

தனிமையோடு பேசுங்கள், சார மின்றித்
      தவறாகப் பேசுவதை விடுத்து நெஞ்சால்
இனிமையோடு பேசுங்கள் இயன்ற மட்டும்
      இதமாகப் பேசுங்கள் என்றும் நல்ல
மனிதநேயம் வளர்ப்பதற்குச் சிந்தை செய்து
       மனதாரப் பேசுங்கள் கவலை வேண்டாம்
தனிதொடர்சிமையிலே சாரமுண்டு பேசும் பேச்சால்
       தனிப்பட்ட பிரச்சினைகள் தீரு மிங்கே.

காதோடு பேசுகின்ற கலையைக் கற்று,
       கவனமுடன் பேசுங்கள் திரித்துப் பேச
ஏதோஓர் காரணத்தால் எத்த னைபேர்
       இங்கிருக்க, இவற்றையெலாம் மனதில் கொண்டு
ஆதரவாய் நமக்குநாமே பேசிக் கொள்ளும்
       அத்தனையும் பிறரறியச் செய்தல் நன்றோ.
பாதகமே இல்லையென்பேன் பலரும் கேட்க
       பறைசாற்றும் பேச்சாநம் தனிமைப் பேச்சு.

அமைதியினை நாடிவந்து தீர்வு காண
       அனுமதியைத் தருவதுதான் தனிமைப் பேச்சு
சுமையான சுகங்களினை மறவா தென்றும்
       தொடர்சிந்தை செய்வதுதான் தனிமைப் பேச்சு
இமைமூடித் துயில்காணாக் கண்க ளுக்கும்
       இரவினிலே துணையாகும் தனிமைப் பேச்சு
அமையாத முதற்காதல் தனிமை சேர்க்கும்
       ஆதலினால் தனிமையுடன் பேசு வீரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com