தனிமையோடு பேசுங்கள் என்றார் யோகி
என்முகம் பார்த்து
யாருமற்ற பெரும்பரப்பில்
அமர்ந்திருக்கிறேன்
அலைமோதும் கற்பாறை மீது
வெளியேறிச் சென்று
விசாரிக்கிறது மனது
இறந்தவர்களையும் தோண்டியெடுத்து
கற்சிலை முன் பேசப் பேசக்
காது முளைத்துவிடுகிறது
கருங்கல் சுவர்களுக்கும்
நம்பி உள்ளத்தைத் திறக்க முடிவதில்லை
நான்கு திசைகளிலும் வேடர்கள்
எனக்குள்தான் அழுகிறேன்
எட்டிப் பார்க்கிறார்கள் யார்யாரோ...
தனிமை இதுவென்று உடல் நம்பினாலும்
கூட்ட நெரிசல் மனம்முழுவதும்
கூச்சல் இட்டபடி
சவக்குழிக்குள் என்னைப் புதைத்துக்கொண்டு
மவுனமாகப் பேசுகிறேன்
மண் அதிர்கிறது
எதுவுமற்ற மனவெளியில் பேச
எதிர்பட்ட காட்டுச்செடி கொடிகளை வெட்டி
இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன்
கண்டறிகிறேன்
எல்லாம் உண்டு இந்த உலகில்
தனிமையைத் தவிர
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.