/

35. செஞ்சடைக் கற்றை - பாடல் 4

உமை அம்மையின் மார்பகத்தை, பாம்பின் படத்துடன் ஒப்பிடும் சம்பந்தர் பாடல் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

Updated On :2 செப்டம்பர் 2016, 11:57 am

பாடல் 4

பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்

மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகிச்

செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே

விளக்கம்

இந்தப் பாடலின் கடைசி வரியில், கையெரி மற்றும் கனல் எரி என்று இரண்டு விதமான நெருப்புகளை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனவே எரி ஆடுமாறே என்று ஒவ்வொரு பாடலின் கடைசியில் அப்பர் பிரான் கூறுவது, நடராஜப் பெருமான் கையில் ஏந்தியுள்ள எரி அல்ல என்பது தெளிவாகின்றது. எனவேதான், ஊழித் தீயின் இடையே நின்று பெருமான் ஆடுவதையே அப்பர் பிரான் அனைத்துப் பாடல்களிலும் குறிக்கின்றார் என்று சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் இத்தகைய நடனம் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அப்பர் பிரான் எரி ஆடுமாறே என்று நிகழ்காலத்தில் கூறுகின்றார் போலும். ஊழித்தீயினை ஞானத்தீ என்றும் குறிப்பிடுவதுண்டு.

அசைத்த = தளரச் செய்த. பை அரவு = பாம்பின் படம். பெண்களின் மார்பகத்தை, பாம்பின் படத்திற்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. பல தேவாரப் பதிகங்களில், உமை அம்மையின் மார்பகங்கள், பாம்பின் படத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அப்பர் பெருமான் இங்கே பாம்பு வருந்துவதாக கூறுகின்றார். அல்குல் = மார்பகம், இங்கே அழகிய மார்பகத்தை உடைய பெண்ணைக் குறிக்கின்றது. சடையில் தாங்கியுள்ள சந்திரனுடன் இணைத்து சொல்லப்பட்டிருப்பதால், இங்கே அழகிய பெண்மணி என்று கங்கை நதியை குறிப்பதாகக் கொள்ளவேண்டும். கங்கையின் மார்பகத்தின் அழகுக்கு முன்னால் தனது படத்தின் அழகு எடுபடாமல் இருப்பதால் வருத்தமுற்று பாம்பு தளர்ந்து இருப்பதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

உமை அம்மையின் மார்பகத்தை, பாம்பின் படத்துடன் ஒப்பிடும் சம்பந்தர் பாடல் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (3.2.3.). வரும், கொள் எனப்படும் சொற்கள் உவமையை உணர்த்தும் சொற்கள். பாம்பின் படத்தை ஒத்த மார்பகங்களையும், மென்மையில் பஞ்சினை ஒத்த அடிகளையும், வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையையும் உடைய உமை அம்மை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். செங்கழுநீர் பூக்கள், மற்றும் தாமரை மலர்களிலிருந்து பாய்ந்த தேன், நிலத்தை உலராத சேறாக மாற்றிவிட்டது என்று நிலத்தின் வளம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. உலராத சேறு என்பதன் மூலம் இடைவிடாது தேன் பாயும் மலர்கள் உடைய நிலம் என்று உணர்த்தப்பட்டுள்ளது. பூந்தராய் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று.

பை அரா வரும் அல்குல் மெல்லியல் பஞ்சின் நேரடி வஞ்சி கொள் நுண்ணிடைத்

தையலாள் ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்

செய்யெலாம் கழுநீர் கமலம் மலர்த் தேறல் ஊரலில் சேறு உலராத நல்

பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே

இந்தப் பாடலில் அப்பர் பிரான், திருமாலையும் உமையம்மையையும் தனது உடலில் பாகமாக சிவபிரான் ஏற்றதாக கூறுகின்றார். அப்பர் பிரான், திருப்பழனத்துப் பதிகத்தின் (4.87) ஒரு பாடலிலும் இதே கருத்தினை கூறுகின்றார்.

மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒரு பாகம் மகிழ்ந்து உடனே

உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே

பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கோர் பாம்பு ஒரு கை

சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

பொழிப்புரை

படம் எடுக்கும் பாம்பினை வருத்தப்படச் செய்யும் அழகுடைய மார்பகங்களை உடைய கங்கை நங்கையையும், ஒளி வீசும் சந்திரனையும் சடையில் சிவபிரான் அணிந்துள்ளார். சந்திரனின் ஒளி சடையில் தெரிகின்றது. மை தீட்டிய அழகிய கண்களை உடைய உமை அம்மையையும், திருமாலையும் தனது உடலில் பாகமாகக் கொண்டுள்ளவன் சிவபெருமான். அத்தகைய சிவபெருமான், அனல் ஏந்திய கையினை வீசியபடியே, ஊழித்தீயின் இடையே நின்று ஆடுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.