சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 3

பெருமானின் உடலில் இடது பாகத்தில்

Updated On :13 டிசம்பர் 2016, 6:30 pm

தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி
                                   உருவம் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப்புகுவார் போல் வருவினையேன்
               செல்வதுமே அப்பால் எங்கும்
நோக்கார் ஒரு விடத்து நூலும் தோலும் துதைந்து
           இலங்கும் திருமேனி வெண்ணீறு ஆடி
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு
                           அங்கே மன்னினாரே

விளக்கம்

இந்த பாடலில், பெருமானின் உடலில் இடது பாகத்தில் திருமால் இருந்த தன்மை குறிப்பிடப்படுகின்றது. திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்று சங்கர நாராயணராக இருந்த தன்மை பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. படைப்புக் காலத்தில், தனது உடலின் இடது பாகத்தில் திருமாலைத் தோற்றுவித்து, பின்னர் அவர் மூலம் பிரமனை தோற்றுவித்து, படைப்புத் தொழிலினைத் தொடங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன.

செஞ்சடைக் கற்றை என்று தொடங்கும் பதிகத்தின் (4.22) நான்காவது பாடலில் சிவபெருமான், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றதை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படமெடுத்த பாம்பினைப் போன்ற மார்பகத்தை உடைய பெண் என்று கங்கை நங்கையை குறிப்பிடும் அப்பர் பிரான், கங்கை நங்கையுடன், பனியின் வெண்மை நிறத்தினைக் கொண்டு ஒளி வீசும் சந்திரனையும் தனது சென்னியில் வைத்த பெருமான், மை பூசிய கண்களை உடைய பார்வதி தேவியையும் திருமாலையும் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

பையரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி
மையரிக் கண்ணியாளும் மாலும் ஒரு பாகமாகிச்
செய் எரித் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே

அப்பர் பிரான், திருப்பழனத்துப் பதிகத்தின் (4.87) ஒரு பாடலிலும் இதே கருத்தினை கூறுகின்றார். மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், உமை அம்மையையும் தனது உடலில் பொருந்துமாறு வைத்துள்ளார் என்று கூறும் அப்பர் பிரான், பாம்பினைத் தனது உடலில் சுற்றி வைத்துள்ள பெருமான், தன்னைக் குறிக்கொண்டு அருள வேண்டும் என்று வேண்டும் பாடல்.

மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒரு பாகம் மகிழ்ந்து                                                                                               உடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கோர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

பதினோராம் திருமுறையில் உள்ள பொன்வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் ஆறாவது பாடலில் சங்கர நாராயண கோலத்தை சேரமான பெருமாள் நாயனார் விவரிக்கிறார். தனது மேனியின் இடது பக்கத்தை, திருமாலுக்கு அளித்த பிரானது இடது பக்கத்தில் துளசி மாலை, பொன் ஆடை, சக்ராயுதம், கருவண்ண மேனி, குடக்கூத்து இவற்றால் திருமாலின் அம்சம் முழுமை பெற்று இருப்பதை இந்த பாடல் உணர்த்தும் இவரது உடலின் வலப்பக்கத்தை கொன்றை மாலை, தோல் ஆடை, மான், செம்மை நிறம் மற்றும் கொக்கரை அலங்கரிப்பதாக கூறுகிறார். இந்தப் பாடல், சங்கரன் கோயிலில், சங்கர நாராயணர் சன்னதியில் அனைவரும் படித்து மகிழ்ந்து, சங்கரநாராயணரை தரிசனம் செய்யும் வகையில் வாயிற்படியின் மேல் எழுதப்பட்டு உள்ளது. சேது = செய்யது, செம்மை நிறம் உடையது. இடமால் கரிதால் = இடம் கரிது, ஆல் அசைச்சொற்கள்.

இடமால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண்                                                                                         கொன்றை
வடமால் இடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான்
இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கு எழில் நலம் சேர்
குடமால் இடம் வலம் கொக்கரையாம் எங்கள் கூத்தனுக்கே

தீக்கூரும் = நெருப்பு மிகுந்து எரிவது போன்று தோன்றும். அரி = திருமால். தன்னிடம் ஆக்கூர் செல்வதாக கூறிய பெருமான், அந்த இடத்திற்கு செல்லாமல் வலம்புரம் தலத்திற்கு சென்றதாக அப்பர் நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள். தான் செல்வதாக சொன்ன இடத்திற்கு செல்லாமல், வேறு ஒரு இடத்திற்கு சென்ற பெருமான் வஞ்சகம் புரிந்ததாகவும் மாயம் பேசியதாகவும் கூறுகின்றாள். இவ்வாறு அவர் செய்த செயல், அவரது வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், அவரது திருக்கோலத்தினை இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில், அப்பர் நாயகி குறிப்பிடுகின்றாள்.

பொழிப்புரை

நெருப்பு மிகுந்து எரிவது போன்ற சிவந்த நிறத்தை உடலின் ஒரு பகுதியிலும், திருமாலின் நிறத்தை உடலின் மற்றோர் பாகத்திலும் கொண்டு திகழும் பெருமான், என் கண் முன்பாக ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடக் கோயிலுக்குச் செல்வது போன்று போக்கு காட்டிய பின்னர், நான் அந்த இடத்தை விட்டு மறைந்த பின்னர் வேறு எங்கும் நோக்காமல், வலம்புரம் சென்றுவிட்டார். பூணூலும் மான்தோலும் மார்பில் பொருந்தியவராய், தனது உடலெங்கும் வெண்ணீறு பூசியவராய், தனது வாயால் வேதங்கள் பேசிய பெருமான் தனது தோற்றத்திற்கு பொருந்தாத வகையில் மாய வார்த்தைகள் பேசி, வலம்புரம் திருக்கோயிலின் உள்ளே சென்று அங்கே நிலையாக தங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.