சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 4

மூர்க்க குணம் கொண்ட பாம்பினைத்

Updated On :14 டிசம்பர் 2016, 6:30 pm

மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய
                                        முதல்வர் இந்நாள்
கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார்
             குளிர் கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப்
         புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே
                மன்னினாரே

விளக்கம்

இந்த பாடலில் மூவர் உருவாய முதல்வர் என்று குறிப்பிட்டு, பிரமன், திருமால் மற்றும் சிவன் ஆகிய மூவராக இருப்பது சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். இந்த கருத்து பல திருமுறைப் பாடல்களில் சொல்லப்படுகின்றது செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.29) ஒரு பாடலில் வெள்ளியர் (உடல் முழுவதும் திருநீறு பூசியதால் வெண்மை நிறத்துடன் காணப்படும் சிவபெருமான்), கரியர் (திருமால்) மற்றும் செய்யர் (பொன் நிறத்தில் உள்ள பிரமன்) ஆகிய மூவராக இருப்பவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தெள்ளியார் = தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள். பள்ளியார் = பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால். ஒள்ளியர் = ஒளி தருபவர்.

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழிஊழி உலகமது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே

வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) சம்பந்தர், படைப்பவனாகவும், காப்பவனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கிடை = வேதம் ஓதும் கூட்டம்.

படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படை உடையான் ஊர்
புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

சிவபுரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில், சிவபெருமான் பிரமனாகவும், திருமாலாகவும், உருத்திரனாகவும் நின்று முத்தொழில்கள் செய்யும் தன்மையினை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் அந்த மூன்று பாடல்களையும் இங்கே காண்போம். புவம் = வானம். வளி = காற்று. புனல் = தண்ணீர். கனல் = தீ. கலை = அறுபத்து நான்கு கலைகள். திரிகுணம் = சாத்வீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள். அமர் நெறி = விரும்பத்தக்க வழிமுறைகள். திவம் = தேவலோகம். மருவி = கூடி பொருந்தி, பிரமனால் படைப்புத் தொழில் எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது இந்த பாடலில் கூறப்படுகின்றது. தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப்படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்யமுடிகிறது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை திரிகுணம்                                                                                             அமர்நெறி
திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை
                    தம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை                                                                                                  பெறுவரே

பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப்படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலைபெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலைபெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப்படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப்படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.

மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை
                நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை
                             பதி
சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு
                          திகழ்வரே

பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப்படுகின்றது. கடலால் சூழப்பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.

பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை                                                                                       அவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன்
                    உறை பதி
செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு
                       மூவுலகிலே

மேற்கண்ட மூன்று பாடல்களிலும் உள்ள கருத்தினை, சிவபெருமான் மூவராகவும், அவர்களின் தலைவராகவும் உள்ள நிலை, சம்பந்தரால் முதுகுன்றம் பதிகத்தின் (1.53) முதல் பாடலில் கூறப்படுகின்றது. மறை சேர் நாவர் = வேதங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள். எரி = தீ. கால் = காற்று. விரை மலரோன் = நறுமணம் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்.

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவாராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் எனும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (6.54) ஒன்பதாவது பாடலில் நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. பண்ணியான் = ஆக்கியவன். படிறன் = வஞ்சகன். மறைப்பது வஞ்சகர் செய்யும் தொழில் என்பதால் கங்கையைச் சடையில் மறைத்த இறைவனை படிறன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நண்ணியவன் = நெருங்கி நின்று துணையாக இருந்தவன். நளிர் = குளிர்ச்சி.

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் படர்சடை
        மேல் புனல் கரந்த படிறன் தன்னை
நண்ணியனை என்னாக்கித் தன்னானானை நான்மறையின்
        நற்பொருளை நளிர் வெண்திங்கள்
கண்ணியனைக் கடியநடை விடை ஒன்று ஏறும் காரணனை
                    நாரணனைக் கமலத்து ஓங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
            நாள் போக்கினேனே

அதிகை தலத்தின் மீது அருளிய ஏழைத் திருத்தாண்டகத்தின் (6.3) முதல் பாடலில், இதே செய்தி கூறப்படுகின்றது. பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடனை வாகனமாகக் கொண்ட திருமால் என்றும் பொன் நிறத்தினை உடைய பிரமன் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் இவர்கள் இருவரையும் குறிப்பிடுகின்றார்.

வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை
            வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன்
    நிறத்தினானைப் புகழ் தக்கானை
அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை
            அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான்
            பண்டு இகழ்ந்தவாறே

மூவாத = மூப்பு அடையாத, பல தேவாரப் பாடல்களில் இளநாகம் என்று குறிப்பிடப்படுகின்றது. தனது தோலினை அடிக்கடி உரித்து விடுவதால், பாம்பின் உடலில் சுருக்கங்கள் காணப்படுவதில்லை. மேலும் நரை முடி உடைய பாம்பினையும் நாம் காண்பதில்லை, இவ்வாறு நரை மற்றும் திரை (தோலின் சுருக்கம்) இல்லாத பாம்பினை இள நாகம் என்று பொருத்தமாக மூவர் முதலிகள் அழைக்கின்றார்கள். கோவாத எரிகணை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வேறு எவரும் கோர்க்காத அம்பு என்று, தீக்கடவுள், காற்றுக் கடவுள் மற்றும் திருமால் ஆகிய மூவரும் மூன்று பாகங்களாக இருந்த அம்பினை, சிவபெருமான் பயன்படுத்தி திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.     

மாயம் பேசி தன்னை வஞ்சித்ததாக சென்ற பாடலில் குறிப்பிட்ட அப்பர் நாயகி இந்த பாடலில் பேசிய மாய வார்த்தை என்ன என்பதை உணர்த்துகின்றாள். தன்னை வாவா என்று அழைத்த பெருமான் தனக்காக காத்திராமலும், தன்னிடம் சொல்லாமலும் வலம்புரம் சென்று புகுந்ததாக, தனது வருத்தத்தை அப்பர் நாயகி வெளிப்படுத்தும் பாடல். தன்னை வாவா என்று அழைத்த பெருமான், தன்னை விடுத்து பூத கணங்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றது அப்பர் நாயகியின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது போலும்.

பொழிப்புரை

என்றும் இளமையாக காணப்படும், மூர்க்க குணம் கொண்ட பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டிய பெருமான், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் உருவில் இருக்கும் முழுமுதற் கடவுளாவார். வேறு எவரும் கோர்க்க முடியாத அம்பினைத் தனது வில்லினில் கோர்த்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த பெருமான் என்றும் இளையவனாகவும் அழகாகவும் விளங்குகின்றார். குளிர்ந்த கொன்றைப் பூவினை தலையில் சூடி நின்ற அழகரைக் கண்டு நான் அவர் பின்னே செல்ல, அவர் என்னை புறக்கணித்து விட்டு, தம்முடன் பூத கணங்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். என்னை நேரில் கண்டபோது வாவா என்று அழைத்த பெருமான், எனக்காக காத்திராமலும், என்னை விட்டுவிட்டு வலம்புரம் தலத்தில் புகுந்த பெருமான் அங்கேயே நிலையாக தங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.