சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 4

போர்த் திறமை மிக்க அர்ச்சுனன்

Updated On :21 டிசம்பர் 2016, 12:15 pm

அரும்பெரும் சிலைக் கை வேடனாய் விறல் பார்த்தற்கு
                                                                                      அன்று
உரம் பெரிது உடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையனாக்கி வாள் அமர் முகத்தின் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே


விளக்கம்

விறல் = வலிமை, வெற்றி. உரம் = வலிமை. ஒள்ளமர் = வீரம் வெளிப்பட்ட போர். சிலை = வில். சரம் பொலி தூணி = அம்புகள் நிறைந்து பொலியும் அம்பறாத்தூணி. எடுக்க எடுக்க குறையாத அம்பறாத்தூணி. பாசுபத அத்திரம் வேண்டி சிவபெருமானை நோக்கி அர்ஜுனன் தவம் செய்தபோது அர்ஜுனனைக் கொல்வதற்காக முகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் ஏவினான். அந்த அரக்கன், பன்றி வேடம் கொண்டு அர்ஜுனனைத் தாக்க வந்தான். அர்ஜுனன் தவம் செய்த இடத்திற்கு வேடுவக் கோலம் தாங்கிவந்த சிவபெருமான், பன்றியின் மீது அம்பினை எய்தார்; அர்ஜுனனும் தன்னைக் கொல்ல வந்த பன்றியை அம்பினால் தாக்கினான். பன்றி இறந்தது. வேடுவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே, தான் குறி வைத்த பன்றியின் மீது அடுத்தவன் அம்பு எய்யலாமா என்பது குறித்து விவாதம் எழுந்தது. அந்த விவாதம் பின்னர் சண்டையாக மாறியது. இந்த சண்டையில் சிவபெருமான் தனது வீரத்தினை அர்ஜுனனுக்கு காட்டி, பின்னர் அவனுக்குத் தனது திருக்கோலத்தையும் காட்டி, அவன் வேண்டிய பாசுபத அத்திரத்தையும் அளித்தார். அர்ஜுனனுக்கு சிவபெருமான் தனது வலிமையைக் காட்டிய இந்த நிகழ்ச்சி இங்கே அப்பர் பெருமானால் குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை

போர்த் திறமை மிக்க அர்ச்சுனன் தவம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு சிவபெருமான் வேடுவக் கோலம் தாங்கி, வல்லமை வாய்ந்த பெரிய வில்லினைக் கையில் ஏந்தியவாறு வந்தார். அவ்வாறு வந்தவர் தம்முடைய பேராற்றலை அர்ஜுனனுக்கு வெளிப்படுத்திய பின்னர், இருவரது வீரமும் வெளிப்படும் வகையில் அர்ஜுனனுடன் போர் புரிந்தார். அர்ஜுனன் கேட்ட அரிய வரமாகிய, ஒளி பொருந்திய பாசுபத அத்திரத்தை அவனுக்கு அருளி, மேலும் எப்போதும் அம்புகள் நிறைந்து இருக்கக்கூடிய அம்பறாத்தூணியையும் வழங்கி அவனுக்கு அருள் புரிந்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.