ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர் மழு ஒன்றால் ஓச்சக் குளிர் சடைக் கொன்றை மாலைத்
தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே
விளக்கம்
ஆ மலி பாலும் நெய்யும் = மாடுகள் மேய்ந்துகொண்டு இருக்கையில், அங்கே கிடைத்த பொருட்களைக் கொண்டு சிவ வழிபாடு செய்தவர் சண்டீசர். அவரது வழிபாட்டினைக் கண்ட பசுக்கள் தாமே சென்று அவர் மணலால் பிடித்து வழிபட்ட லிங்கத்தின் மேல் பால் பொழிந்தன. பசுக்கள் விரும்பி பொழிந்த பால் மிகவும் அடர்த்தியாக காணப்பட்டதால், வெண்ணெய் மிதந்து அந்த பாலில் இருந்தன என்பதை உணர்த்தும் வண்ணம், ஆமலி பாலும் நெய்யும் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை சண்டீசர் விரும்பி மேற்கொண்ட பின்னர், பசுக்களும் சண்டீசர் பால் தங்கள் அன்பைப் பொழிந்தன. பொதுவாக தங்களது கன்று அருகில் வந்தால்தான், கன்றுகளுக்கு ஊட்டுவதற்காக பால் சொரியும் பசுக்கள், தங்களது கன்றுகள் அருகில் இல்லாதபோதுகூட, மறைக்கன்றாகிய சண்டீசர் அருகில் சென்று தாமே பால் பொழிந்தன என்று சேக்கிழார் கூறுகின்றார்.
அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி
அளவின்றி
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய
மறைக்கன்று
தனிக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாம் தன்மை
நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால்
பொழிந்தனவால்
இவ்வாறு பசுக்கள் கறவாமலே, தன்னுருகில் வந்து பால் பொழிந்ததைக் கண்ட சண்டீசர், அவ்வாறு பொழியப்படும் பால் சிவபெருமானின் திருமஞ்சனத்திற்கு உரிய பொருள் என்ற முடிவுக்கு வந்தார். அவருக்கு சிவபெருமானை வழிபடவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் எழுந்தது. ஆற்றங்கரையில் இருந்த ஆத்தி மரத்தின் கீழே, சிவபிரானின் இலிங்கத் திருமேனியை மணலால் அமைத்தார். பின்னர் பசுக்கள் விருப்பத்துடன் பொழிந்த பாலினால் இறைவனை நீராட்டி வழிபட்டார். இவ்வாறு சண்டீசர் தினமும் செய்து வந்த பூஜையின் மகிமையை அறியாத, அடுத்த ஊரினைச் சார்ந்த ஒருவன் கண்டான். சண்டீசர் பாலினை வீணாக்குவதாக கருதி பசுக்களின் உரிமையாளர்களிடம், நடந்ததை கூறினான். அவர்கள் அனைவரும், சண்டீசரின் தந்தை எச்சதத்தனிடம், தனது மகனை கண்காணிக்குமாறு கூற, தந்தையும் மறைந்திருந்து தனது மகன் சண்டீசரின் செயல்களை கண்காணித்தார். சண்டீசர் முந்தைய நாட்கள் செய்தது போன்று அன்றும் மணலால் லிங்கம் அமைத்து, பின்னர் பூஜைக்கு வேண்டிய பொருட்களுடன், பால் நிறைந்த குடங்களையும் கொண்டு வந்ததை, அவரது தந்தை எச்சதத்தன் கண்டார். சிவபிரானை பாலினால் நீராட்டுவதைக் கண்ட அவரது தந்தைக்கு மிகுந்த கோபம் வரவே, தனது மகனை முதுகில் அடித்து, கடுமையான சொற்களால் திட்டினார். ஆனால் இறைவனுக்குத் தான் செய்துகொண்டிருந்த வழிபாட்டில் தன்னை மறந்து ஈடுபட்ட சண்டீசர், தந்தை அடித்ததையோ, தந்தை கோபம் கொண்டு கடுஞ்சொற்கள் சொன்னதையோ, அறியவில்லை. இதனால் மேலும் கோபம் கொண்ட தந்தை, பாற்குடங்களை தனது காலால் உதைத்தார். இவ்வாறு பொறுமை இழந்த தந்தையின் செயல்களை, அப்பர் பிரான் பொறாத தந்தை என்ற தொடர் மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.
சண்டீசரின் இயற்பெயர் விசாரசருமன். சண்டீசர் என்ற நாமம் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்டது. கண்ணப்பர், சண்டீசர், இராவணன், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகிய நாமங்கள் சிவபெருமானால் தனது அடியார்களுக்கு சூட்டப்பட்ட திருநாமங்கள்.
பொழிப்புரை
வெண்ணெய்ப் பசை மிகுந்து காணப்பட்ட பாலினால் இறைவனை நீராட்டி, மென்மையான கொன்றைக் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்ட விசாரசருமரின் (சண்டீசர் என்பது பின்னர் இறைவன் வழங்கிய திருநாமம்) செய்கையை பொறுக்காத அவரது தந்தை, சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வகையில் பால் குடங்களைத் தனது காலால் உதைத்தார். தனது தந்தை செய்த இடையூற்றைத் தடுக்கும் பொருட்டு, அருகில் இருந்த கொம்பு ஒன்றினை, தனது தந்தையின் கால்களில் படுமாறு விசாரசருமர் வீசினார். சிவ அபராதம் எத்தகைய கடுமையான பாவம் என்பதை உணர்த்தும் வகையில், அந்த கொம்பு மழுவாளாக மாறி, எச்சதத்தரின் கால்களை வெட்டியது. தந்தையென்றும் பாராமல் சிவ அபராதம் செய்தவரை தண்டித்த விசாரசருமரின் செய்கையை பாராட்டி, தான் அணிந்திருந்த கொன்றை மாலையை அணிவித்து, சண்டீசர் என்ற நாமமும் அளித்து சிறப்பித்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

