வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 8

திரண்ட தோளினை உடைய வேடன் கண்ணப்பனார்

Updated On :28 டிசம்பர் 2016, 6:30 pm

குவப் பெரும் தடக்கை வேடன் கொடுஞ்சிலை
                                                                இறைச்சிப் பாரம்
துவர்ப் பெரும் செருப்பால் நீக்கித் தூய வாய்க்
                                                                   கலசம் ஆட்ட
உவப் பெரும் குருதி சோர ஒரு கணை இடந்து
                                                                       அங்கப்பத்
தவப் பெரும் தேவு செய்தார் சாய்க்காடு
                                                              மேவினாரே

விளக்கம்

குவ = குவவு என்ற சொல்லின் குறை. திரட்சி என்று பொருள். கொடுஞ்சிலை = வளைந்த வில். திறமையான வேடர்களுக்கு வேண்டுவது திரண்ட தோளும், வளைந்த வில்லும். உவ = உவந்து. மிகுந்த விருப்பத்துடன். அப்புதல் = பொருத்துதல். கண்ணப்பரை, இறைவன் தனது வலது பக்கத்தில் என்றும் இருக்கச் செய்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக்கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என்
                                                                   வலத்தின்
மாறிலாய் நிற்க என்று மன்னு பேரருள் புரிந்தார்

கண்ணப்பரைப் போன்று இறைவனிடத்தில் வேறு எவரும் அன்பு வைக்கமுடியாது என்பதை நமக்கு உணர்த்தும் வகையில், மணிவாசகர் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு தன்னிடம் இல்லை என்பதை கீழ்க்கண்ட பாடலில் உணர்த்துகின்றார். இந்த பாடல் திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் நான்காவது பாடல். கண்ணப்பரின் அன்பினை ஒத்த அன்பு இல்லாவிட்டாலும் சிவபெருமான் நம்மை ஆட்கொள்வார் என்று கூறி மணிவாசகர், நம்மையும் நம்பிக்கை வைத்து சிவபெருமான்பால் அன்பு கொள்ளுமாறு தூண்டுவதை நாம் இந்த பாடலில் உணரலாம்.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்து என்னை வா என்ற வான் கருணைச்
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

பொழிப்புரை

திரண்ட தோளினை உடைய வேடன் கண்ணப்பனார், வளைந்த வில்லினை ஒரு கையிலும் மற்றொரு கையில் இறைச்சியையும் வைத்திருந்ததால், செருப்பு அணிந்திருந்த கால்களால் இறைவனின் சன்னதியில் இருந்த காய்ந்த மலர்களை (முதல் நாள் இறைவனுக்கு சூட்டப்பட்ட மலர்கள்) நீக்கினார். இறைவனை நீராட்டுவதற்காக நீரினைத் தனது வாயில் கொண்டு வந்த காரணத்தால், அவரது வாய் புனித நீர் அடங்கிய கலசமாக மாறியது. இறைவனது கண்களில் இரத்தம் வடிந்ததைக் கண்ட கண்ணப்பர், மிகுந்த விருப்பத்துடன் தனது கண்ணினை நோண்டி லிங்கத்தில் பொருத்தினார். அப்போது கண்ணப்பரின் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகியது. அவர் தனது இரண்டாவது கண்ணினையும் நோண்ட முயற்சி செய்தபோது, கையினைப் பிடித்து அவரைத் தடுத்து நில்லு கண்ணப்ப என்று குரல் கொடுத்து, கண்ணப்பரைத் தனது வலது பக்கத்தில் என்றும் இருக்குமாறு ஏற்றுக்கொண்டவர் சிவபிரான். சிவபிரானிடம் தான் கொண்ட அன்பினை வெளிப்படுத்திய வேடனை சிறந்த தெய்வமாக மாற்றியவர் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார். . .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.