வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 9

விரிந்து மணம் வீசும் பல நூறு பூக்களைக்கொண்டு

Updated On :29 டிசம்பர் 2016, 6:30 pm

நக்குலா மலர் பன்னூறு கொண்டு தன் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென்மலர் ஒன்று காணா
தொக்கு மென்மலர்க் கண் ஒன்று அங்கு ஒரு கணை
                இடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே
 

விளக்கம்

நக்கு உலா மலர் = மலர்கள் மலர்ந்து விரிந்து இருப்பதை சிரிக்கும் மலர்கள் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். தாமரை மலர் போன்ற கண்களை உடையவன் என்பதால் தாமரைக் கண்ணன் என்ற பெயர் திருமாலுக்கு உண்டு. இந்த தகவல், தாமரை மலர் போன்ற கண்களில் ஒன்றினை திருமால் அளித்தார் என்று குறிப்பிடுவதன் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. பன்னூறு = பல நூறு, இங்கே ஆயிரம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பெருமானின் ஆயிரம் நாமங்களை சொல்லிக்கொண்டு ஒவ்வொரு திருநாமத்திற்கும் ஒரு பூவினை அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது ஒரு முறை. அத்தகைய சிறப்பான வழிபாடு திருமால் செய்தபோது, அந்த பூக்களில் ஒன்று குறைந்தது. இவ்வாறு ஒரு மலர் குறைந்தது சிவபெருமானின் திருவிளையாடலால்தான் என்பதை உணர்த்தும் அப்பர் பிரான் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எண்ணி ஆயிரம் பூக்கொண்டு என்ற சொற்றொடர் மூலம், சிவபிரானை வழிபட்ட திருமால் ஆயிரம் பூக்களுடன் தனது வழிபாட்டினைத் தொடங்கினார் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே ஒரு பூ குறைந்தது சிவபிரானின் திருவிளையாடல் என்பது நமக்கு புலனாகின்றது.

தசபுராணத் திருப்பதிகத்தின் (4.14) பத்தாவது பாடல் இது. சிவபிரான் திருமாலுக்கு அளித்த சக்கரத்தின் திறமையும், சலந்தரனை சிவபிரான் அழித்த நிகழ்ச்சியைச் சொல்வதன் மூலம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

தடமலர் ஆயிரங்கள் குறை ஒன்றது ஆக நிறைவு என்று தன்
                                                                    கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து
                                                                      மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த
                                                                    கொடுமை
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கோர்
                                                                   சரணே

பொழிப்புரை

விரிந்து மணம் வீசும் பல நூறு பூக்களைக்கொண்டு, சிவபெருமான் தான் உயர்ந்த மெய்ப்பொருள் என்ற உணர்வுடன் திருமால் சிறப்பான வழிபாடு செய்தபோது, ஒரு பூ குறைந்ததை உணர்ந்தார்: தனது கண்கள் தாமரைப் பூக்களை ஒக்கும் என்பதால், ஒரு அம்பினால் தனது கண் ஒன்றினை பெயர்த்து எடுத்து, அதனை மலராக பாவித்து சிவபிரானுக்கு அர்ச்சனை செய்தார். திருமாலின் செயற்கரிய செய்கையைக் கண்ட சிவபிரான், அவருக்கு சக்கரம் அளித்து அருள் செய்தார். இவ்வாறு அருள் செய்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.