பாடல் 2
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று முன்னுமாய்ப்
பின்னுமாய் முக்கண் எந்தை
பிறை ஆர்ந்த சடைமுடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து
உடன் வைத்தார் பெரிய நஞ்சு
கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை கழிப்பாலை
மேய கபாலப்பனார்
மறை ஆர்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

விளக்கம்

முறை ஆர்ந்த = மதில்களுக்கு உரிய இலக்கணத்துடன் கட்டப்பட்ட மதில்கள். பிணக்கம் = பகைமை. முன்னுமாய் பின்னுமாய் = ஆதியாய் அந்தமாய் இருக்கும் நிலை. அனைத்துப் பொருட்களுக்கும் உயிர்களுக்கும் முந்தையவனாகவும், அனைத்துப் பொருட்களும் உயிர்களும் அழிந்த பின்னரும் இருப்பவனாக இறைவன் இருக்கும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. நமக்கு உடனே நினைவுக்கு வரும் திருவாசகம், திருவெம்பாவை பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திருவாசகத்தின் முதல் பாடலே, ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி என்று தொடங்குவது நாம் இங்கே நினைவுறத் தக்கது. இன்று நாம் காணும் உலகப் பொருட்களும் உயிர்களும் தானே தோன்றியவை அல்ல. இவ்வாறு நாம் காணும் உயிர்களுக்கும் பொருட்களுக்கும் முன்னமே பல உயிர்களும் பல பொருட்களும் தோன்றி அழிந்தன. அத்தகைய உயிர்களுக்கும் பொருட்களுக்கும் முன்னம் முதன்முதலாக தோன்றிய பொருட்களும் உயிர்களும்கூட தானே தோன்றியவை அல்ல. எனவே அவற்றை தோற்றுவித்தவன், பழம் பொருளுக்கும் பழமையானவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதை நாம் உணரமுடிகின்றது. அவன்தான் பரம்பொருளாகிய சிவபெருமான். அவ்வாறே இன்றுள்ள பொருட்களுடன் ஒப்பு நோக்கையில் நாளை தோன்றவிருக்கும் உயிர்களும் பொருட்களும் புதுமையானவை. ஆனால் இந்த புதுமையான பொருட்களும் புதுமையானதும் அல்ல. அந்த பொருட்களுக்கு பின்னர் தோற்றுவிக்கப்படும் பொருட்களுக்கு பழம்பொருட்களாக மாறக்கூடியவை மேலும் இந்த பொருட்கள் நிரந்தரமானவை அல்ல; ஒரு நாள் அழியக்கூடியவையே. தானே அழியமுடியாத இந்த பொருட்களை அழிக்கக் கூடியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதையும் நாம் ஊகிக்க முடிகின்றது. அவன்தான் வரும் நாட்களில் தோன்றப்போகும் புதுமையான பொருட்களுக்கும் புதுமையானவன். இந்தச் செய்திதான் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்

ஆதியும் அந்தமுமாக இறைவன் உள்ள தன்மை, ஆலவாய் (மதுரையின் பல பெயர்களில் ஒன்று) பதிகத்தில் (3.52.7) ஞான சம்பந்தரால் சொல்லப்படுகின்றது. தருக்கினார் = பக்குவம் அடைந்த ஆன்மாக்கள். உலகப் பொருட்களைப் பற்றிய கல்வி அறிவு படைத்தவர்களால், பெருமானின் பெருமையை உணரவும் முடியாது உரைக்கவும் இயலாது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஓர் சோதியாய்
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அலால்
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே
ஆரூர் பதிகத்தின் கடைப்பாடலில் (6.26.10) அப்பர் பிரான் ஆதியாய் அந்தமாய் நின்றவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கால் = காற்று. நீதி = ஒழுங்கு. சூரியன், சந்திரன் மற்றும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஒரு ஒழுங்குக்கு கட்டுப்பட்டு இயங்குவதை நாம் காண்கின்றோம். அந்த ஒழுங்காக இருப்பவன் இறைவன் என்று இங்கே சொல்லப்படுகின்றது. பாதி = பற்றுக்கோடு. அனைத்துப் பொருட்களுக்கும் பற்றுக்கோடாய் உள்ள இறைவன், ஒப்பற்ற ஒருவனாகவும், சிவம் சக்தி என்று இரண்டுமாகவும், முத்தொழில்கள் புரிபவனுமாக இருப்பதுடன், அணுவுக்கும் அணுவாக உள்ள தன்மையும் இங்கே கூறப்படுகின்றது. ஆதியும் அந்தமுமாய் என்று வீடுபேற்றுடன் இணைத்து சொல்லப்படுவதால், வீடுபேறு அடையக்கூடிய வழியாகவும், அந்த வழியின் இறுதி கட்டமாகிய வீடுபேறாகவும் உள்ள இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக இருக்கும்.

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலாய் இவையிற்றின் நியமமாகிப்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்ப் பரமாணுவாய்ப் பழுத்த பண்களாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைகளாகிச் சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்தவாறே

முடிப்பது கங்கையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில் (7.44.7) சுந்தரர், யாரும் அளக்க முடியாத ஆதியாகவும் அந்தமுமாகவும் சிவபெருமான் இருப்பதாக கூறுகின்றார்.

தாரும் தண்கொன்றையும் கூவிளத் தனி மத்தமும்
ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்றில்லை உகப்பார் தொழப்
பேரும் ஓராயிரம் என்பரால் எம் பிரானுக்கே

இந்த பாடலில், சந்திரன், பாம்பு மற்றும் கங்கை ஆகிய மூவருக்கும் இடையே இருந்த பிணக்கினைத் தீர்த்து, தனது சடையில் வைத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு, இந்த மூவருக்கு இடையே உள்ள பகைமையினைக் குறிப்பிடும் அப்பர் பிரானின் மற்றொரு பாடலை நினைவூட்டுகின்றது. மிகவும் சுவையான கற்பனை செய்து இயற்றப்பட்ட பாடல் (4.53.2). சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்துகொள்வதும், பாம்பு சென்றுவிட்டதா இல்லையா எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்ப்பதுமாக இருக்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் தொடர்ந்து புலப்படாமல், கருமையான யானைத் தோலில் அடியில் மறைந்துகொள்வதும் இடையிடையே வெளிப்படுவதுமாக தோன்றும் காட்சி, மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கிவிடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி, சந்திரனை மின்னலாகவும் கங்கை நங்கையை மயிலாகவும் தவறாக நினைத்த பாம்பு, ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று கங்கை நங்கையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை நதியின் அலைகள் சந்திரனின் மீது மோதுவதால், சந்திரன் கங்கையிடமும் அச்சம் கொள்கின்றான். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல்தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்.

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே.

இந்த பாடலில் நஞ்சு அடங்கக் கண்ட பெருமான் என்று கூறுகின்றார். பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த நஞ்சு அனைத்து இடங்களிலும் பரவத் தொடங்கியது. அதனை ஒருங்கே திரட்டி பெருமான் உண்டு தனது கழுத்தினில் அடக்கியதால், அனைத்து உலகங்களும் தப்பின. இதனை உணர்த்தும்வண்ணம், நஞ்சு அடங்கக் கண்ட பெருமான் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை

முறையாக கட்டப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்த மூன்று மதில்களையும் எரிந்து பொடியாகுமாறு அழித்தவனும், அனைத்து உயிர்களுக்கும் பொருட்களுக்கும் முன்னவனாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருப்பவனும் ஆகிய எமது பெருமான் மூன்று கண்களை உடையவனாக உள்ளான். அவன், கங்கை நதி, சந்திரன் மற்றும் பாம்பு ஆகிய மூவருக்கு இடையே உள்ள பகைமையைத் தீர்த்து அவை மூன்றினையும், ஒரே இடத்தில் (தனது சடையில்) வைத்துள்ளான். கொடிய தன்மையால் அனைத்து உலகங்களையும் அழிக்கவல்ல நஞ்சினை அடக்கித் தனது கழுத்தினில் பெருமான் தேக்கியதால் ஏற்பட்ட விடத்தின் கறையினை, தனது கழுத்தில் கொண்டுள்ளவன் சிவபெருமான்; இத்தகைய அரிய பண்புகளை உடையவனும் எங்களுக்குத் தந்தையாகவும் விளங்கும் பெருமான் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தமது சொற்களால், நாம் மாயையால் ஆகிய நமது உடலினை விடுத்து, உய்வடைந்த உயிர் வீடுபேறு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு