19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 2

அனைவர்க்கும் தலைவனாக விளங்கும் சிவபெருமான், தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றினை,

Updated On :30 மார்ச் 2016, 5:18 am

பாடல் 2

கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான்
காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண் உமையவளோர் பாகத்தான் காண் ஓருருவின்
மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெய்யடியார்
உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண்
அவன் என் சிந்தையானே

விளக்கம்

கருத்தன் = கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், தலைவன் என்று பொருள். அடியார்களின் கருத்தாக இருப்பவன் என்றும், அனைத்துப் பொருட்களுக்கும் கருத்தாக, மூலப் பொருளாக இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். கமலத்தோன் = பிரமன். காய்ந்தான் = கோபம் கொண்டு அறுத்தவன். ஒருத்தன் = ஒப்பற்றவன். விருத்தன் = மிகவும் பழைமையானவன். திருத்தன் = தூயவன், தீர்த்தன் என்ற வடமொழித் சொல்லின் திரிபு.

இந்தப் பாடலில் மூவுருவாய் ஒன்றாய் நின்ற பெருமான், என்று இறைவனின் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். உலகத்தைத் தோற்றுவிக்கும் பொருட்டும், தோன்றிய உலகத்தினை காக்கும் பொருட்டும், பிரமனாகவும் திருமாலாகவும் நிற்கும் பெருமானின், உண்மையான தோற்றம், ஓருருவாய் நிற்றல் என்பதால், மூவுருவாய் ஒன்றாய் நின்ற என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். விருத்தன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு மணிவாசகரின் திருவாசகத்தின் முன்னைப் பழமைக்கும் பழம்பொருளே என்ற தொடரை நினைவூட்டுகின்றது.

பொழிப்புரை

அனைவர்க்கும் தலைவனாக விளங்கும் சிவபெருமான், தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றினை, கோபம் கொண்டு அறுத்தான். மிகவும் வேகமாக பாய்ந்து வந்த கங்கை நதியின் வேகத்தை, தனது பரந்த சடையில் அந்த நதியினைத் தாங்கியதன் மூலம், தடுத்த ஒப்பற்ற ஆற்றல் கொண்ட சிவபெருமான் உமையம்மையைத் தனது உடலினொரு பாகத்தில் ஏற்றவன் ஆவான். அரி, அயன், அரன் ஆகிய மூன்று உருவமாக இருந்து, அனைத்து உயிர்களையும் இயக்கும் பெருமான், அனைத்துப் பொருட்களுக்கும் பழமையானவனாக, ஆதியாக விளங்குகின்றான். தேவர்கள் அனைவருக்கும் தலைவனாக விளங்கும் அவன், தனது மெய்யடியார்களின் மனதினில் மிகவும் விருப்பத்துடன் உறையும் தூயவனாகவும் விளங்குகின்றான். இத்தகைய பெருமைகளைக் கொண்ட சிவபெருமான், முண்டீச்சரத்து தலத்தில் விளங்கும் சிவலோகனாய் இருக்கும் பெருமான், எனது சிந்தனையாகத் திகழ்கின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.