பாடல் 7
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓடத் தொடர்ந்து
அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண் தக்கன் தன் தலையைச் செற்ற தலைவன் காண்
மலைமகளாம் உமையைச் சால
மதிப்பு ஒழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடு
மதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன்
என் சிந்தையானே

விளக்கம்

உணராத தக்கன் என்று சிவபெருமானின் பெருமையை உணராது, அவரை ஒதுக்கிவைத்து வேள்வி செய்யத் துணிந்த தக்கனின் செய்கையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

வேள்வி உருண்டு ஓட என்று, வேள்வி தொடர்ந்து நடைபெறாமல் வேள்வியை அழித்த செய்கை இங்கே உணர்த்தப் படுகின்றது. தக்கனின் வேள்வி தொடர்புடைய செய்திகள், திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் விவரமாக கூறப்படுகின்றன. அந்த பதிகத்தில் மூன்று பாடல்களில் கலங்கிற்று வேள்வி, மயங்கிற்று வேள்வி, மடிந்தது வேள்வி என்று கூறப்படுகின்றது. வேள்வியில் அளிக்கப்பட்ட அவிர்பாகத்தைப் பெறுவதற்காக நீட்டிய அக்னியின் கை வெட்டப்பட்டது என்றும், அவிர்பாகத்தை உண்பதற்காக வாயைத் திறந்த சூரியனின் பற்கள் தகர்க்கப் பட்டன என்றும், தலையை இழந்த தக்கனின் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்ததால் வேள்வி தொடர்ந்து நடைபெறவில்லை என்றும் இந்த பாடல்களில் மணிவாசகர் கூறுகின்றார்.

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்தவாறு என்று உந்தீபற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீபற

தக்கனார் அன்றே தலை இழந்தார்
தக்கன் மக்களைச் சூழ நின்று உந்தீபற
மடிந்தது வேள்வி என்று உந்தீபற

இவ்வாறு வேள்வி தகர்க்கப்பட்ட செய்தியை மேற்கண்ட பாடல்களில் உணர்த்திய மணிவச்சகர், வேள்வி தகர்க்கப்பட்டபோது தேவர்கள், உருத்திரனிடம் இருந்த பயத்தால் அஞ்சி ஓடியதையும் மற்றொரு பாடலில் கூறுகின்றார். சாடிய = தகர்த்த. சரிந்திட = சிறிது சிறிதாக அழிய. உருத்திரன் என்ற சொல்லுக்கு அச்சத்தை விளைவிப்பவன் என்று பொருள். அச்சத்துடன் தேவர்கள் ஓடியதால், தேவர்களின் மனதினில் அச்சத்தினை ஏற்படுத்திய செயல்களை செய்த சிவபெருமான் என்ற பொருள்பட உருத்திரன் என்ற சொல் கையாளப் பட்டுள்ளது.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீபற
உருத்திர நாதனுக்கு உந்தீபற

மகள் என்ற முறையில் தக்கன் நடத்திய யாகத்திற்கு சென்ற தாட்சாயணி, சிவபெருமானை அழைக்காமல் வேள்வி நடத்தியது முறையல்ல என்று கூற, தக்கனுக்கு மிகுந்த கோபம் வருகின்றது; தாட்சாயணி உலகத்திற்கு தலைவி என்பதை கருத்தில் கொள்ளாமல், தேவியை இழிவாக தக்கன் பேசுகின்றான். அவ்வாறு அவன் இழிவாக பேசியதை கண்டித்து எவரும் தக்கனை திருத்தவில்லை; மேலும் கோபத்தில், தக்கன் தேவியை, நீ எனக்கு மகளும் அல்ல, நான் உனக்கு தந்தையும் அல்ல என்றும் ஏசுகின்றான். இதனால் மிகவும் மனம் வருந்திய அன்னை, தக்கனுக்கு மகளாகப் பிறந்ததால்தானே, இழிவான சொற்களைத் தான் கேட்ட நேர்ந்தது என்று வருந்தி, தக்கன் தந்த உடலினை விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்து, வேள்விக் குண்டத்தில் குதித்து தனது உயிரினை விடுகின்றாள். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் வண்ணம் பார்ப்பதியை பகை சாற்றிய தக்கன் என்று மணிவாசகர் கூறுகின்றார். தாட்சாயணி தான் அடுத்த பிறவியில் பர்வத ராஜனுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் வளர்கின்றாள். பார்வதி என்ற பெயர் பார்ப்பதி என்று திரிந்துள்ளது. அடுத்த பிறவியில் வந்து சேர்ந்த பெயரினை, மணிவாசகர் இங்கே முன்னமே குறிப்பிடுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். தக்கனுடன் தனக்கு தொடர்பு ஏதும் இனி இல்லை என்று கூறியவாறு தனது உடலினை விடுத்த தேவியை, தக்கனின் மகள் என்பதை உணர்த்தும் பெயராகிய தாட்சாயணி என்று அழைப்பது தவறு தானே. மணிவாசகர் தேவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, தாட்சாயணி என்று அழைக்காமல் பார்ப்பதி என்று அழைக்கும் நயம் மிகவும் ரசிக்கத்தக்கது.

பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை
பார்ப்பது என்னேடி உந்தீபற
பணை முலை பாகனுக்கு உந்தீபற

மணிவாசகர் பார்ப்பதி என்று குறிப்பிடுவது போன்று சம்பந்தரும், தக்க யாகத்துடன் தொடர்பு கொண்ட தேவியை, தாட்சாயணி என்ற பெயரினைத் தவிர்த்து மலைமகள் என்று அழைப்பதை நாம் வீழிமிழலை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.20.3) காணலாம். மதியறு = புத்தி கெட்டவன்; சிறுமனவன் = குறுகிய மனம் உடையவன். புத்தி கெட்டவன் என்று கூறுவது சம்பந்தர்க்கு திருப்தி அளிக்கவில்லை போலும், குறுகிய மனமும் உடைய தக்கன் என்று இங்கே கூறுகின்றார். முனிவு செய்தல் = கோபம் கொள்ளுதல். பார்வதி தேவியை இகழ்ந்து பேசியதுதான், பெருமானின் கோபத்திற்கு காரணம் என்று இந்த பாடலில் விளக்கப்படுகின்றது. மனிதப் பிறவி மற்ற பிறவிகளிலும் உயர்ந்ததாக கருதப்படுகின்றது. அந்த பிறவிக்கு உரிய மனித தலை உயர்ந்த தலை என்று கூறப்பட்டு, தக்கனது உயர்ந்த தலை பறிக்கப்பட்டு, ஆட்டின் தலை வைக்கப்பட்டதும் இங்கே குறிப்பால், உயர் தலை அற முனிவு செய்தவன் என்று கூறப்படுகின்றது. அப்பர் பிரானும், மணிவாசகர் மற்றும் ஞானசம்பந்தர் போன்று, தாட்சாயணியை மலைமகள் என்று குறிப்பிடுவதை உணரலாம்.

மலைமகள் தனை இகழ்வது செய்த மதியறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு
சிலை மலி மதிள் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே
தக்கனது வேள்வியில் நடந்த செயல்கள் அனைத்தையும் உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (6.96.9) இங்கே நினைவுகூரத்தக்கது. இந்த பாடலில் வேள்வி எல்லாம் அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப பெருமான், தக்கன் தன்னை இகழ்ந்ததை பொருட்படுத்தவில்லை. தன்னைப் புறக்கணித்து செய்யப்படும் வேள்வி, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறையை மீறியது என்பதாலும், ஒரு தவறான முன்மாதிரியாக தக்கன் செய்த வேள்வி அமையக்கூடாது என்பதற்காகவும், பெருமான் வேள்வி தடைப்படுமாறு செய்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தக்க யாகத்தின் தொடர்புகொண்ட நிகழ்ச்சிகளில், தக்கன் உட்பட பங்குகொண்டோர் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டாலும், எவரது உயிரும் பறிக்கப்படவில்லை. இதனையே அருளும் செய்தார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது.

எச்சன் நிணத்தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில்
ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்
மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார் விறல் அங்கி
கரம் கொண்டார் வேள்வி காத்த
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்விலாத்
தக்கன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார் அடியேனை
ஆட்கொண்ட அமலர் தாமே

எச்சன் = வேள்வியை நடத்திக் கொடுத்தவன். பகன் = பன்னிரண்டு சூரியர்களில் ஒருவன். சூரியனின் பன்னிரண்டு வடிவங்கள் ஒரு தொகுப்பாக துவாதச ஆதித்யர்கள் என்று சொல்லப் படுகின்றன. பாகவதத்திலும் சூரியனின் பன்னிரண்டு வடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. தாதா, அர்யமா, மித்ரன், வருணன், இந்திரன், விவஸ்வான், த்வஷ்டன், விஷ்ணு, அம்சுமான், பகன், பூஷன், பர்ஜனன் என்பன அந்த பன்னிரண்டு வடிவங்களின் பெயர்கள். இந்த பதிகத்தில் பகனின் கண்ணினை கொண்ட நிகழ்ச்சியும், பூஷனின் (இரவிகளில் ஒருவன்) பற்களை உடைத்த நிகழ்ச்சியும் குறிப்பிடப்படுகின்றன. தனது பதவியில், திறமையில் அதிக கர்வம் கொண்டு, தன்னைத் தானே மெச்சிக் கொண்டு, பெருமானை புறக்கணித்து வேள்வி நடத்தத் துணிந்த தக்கன், மெச்சன் என்றும் வியாத்திரன் என்றும் அழைக்கப்படுகின்றான். யாத்திரிகன் என்ற சொல்லின் எதிர்மறை வியாத்திரிகன். வழிப் பயணம் மேற்கொள்வோர், பலரும் நடந்த பாதையினில் நடந்து செல்வார்கள்; ஆனால் வியாத்திரிகனோ, தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு மாறான வழியில் செல்வான். வேதங்கள் வகுத்த பாதையை, பலரும் பின்பற்றிய பாதையை விட்டு விலகி, பெருமானை புறக்கணித்து யாகம் செய்யத் துணிந்த தக்கனை வியாத்திரன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தக்கனது வேள்வியினைக் காத்து நின்ற இயமனின் கால்கள் வெட்டப்பட்டதும், சந்திரனை காலால் தேய்த்ததும், வேள்வியில் பங்கு கொண்டோர் அச்சமடைந்து ஓடியதும், வேள்வி தடைப்பட்டதும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. தக்கனின் வேள்வி சிதைக்கப்படுவதற்கு பெருமானால் அனுப்பப்பட்டவர் வீரபத்திரர் என்றாலும், அவர் பெருமானின் அம்சம் என்பதால், அவரது செயல்கள் அனைத்தையும் பெருமானின் செயல்களாக ஏற்றிச் சொல்வது திருமுறை மரபு. பூவல்லி பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர், வீரபத்திரரால், தக்க யாகத்தில் பங்குகொண்ட பல தேவர்கள் மற்றும் தக்கன் தண்டனை பெற்றதை, புண்பட்டனர் என்று கூறுகின்றார். பண்பட்ட = மேம்பட்ட. எண்பட்ட = வேறொரு எண்ணம் கொண்டு செய்யப்பட்ட வேள்வி, பெருமானை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட வேள்வி.

பண்பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண்பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண்பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ

பொழிப்புரை

சிவபெருமானின் பெருமையை உணராது அவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் தக்கன் வேள்வி செய்ய முயற்சித்த போது, அந்த வேள்விக்காக திரட்டி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் உருண்டோட உதைத்தவன் சிவபெருமான். பூஷன் என்று அழைக்கப் படும் சூரியனைத் பின்தொடர்ந்து சென்று அவனது பற்களை உடைத்தவனும், தக்கனின் தலையை வெட்டி எறிந்தவனும் சிவபெருமான்தான். மலைமகளாகிய உமை அம்மையை இகழ்ந்து பேசிய தக்கனது வசை மொழிகளை கேட்டுக்கொண்டு தாங்கள் உண்ணவிருந்த அவிர்பாகத்தை பெரிதாக கருதி வாளா இருந்த தேவர்களையும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேள்விப் பொருட்களையும், தேவர்களின் அறியாமையையும் சிதைத்த சிவபெருமான் முண்டீச்சரம் தலத்தில் சிவலோக நாயகனாக உறைகின்றார். அவர்தான் எனது சிந்தனையில் பரவி இருக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை