மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 10

தனது வலிமையால் செருக்கு கொண்டு

Updated On :3 அக்டோபர் 2016, 6:30 pm

பாடல் 10

    இட்டம் ஆயின செய்வாள் என் பெண்கொடி
    கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத்
    துட்டு அடக்கிய தோணிபுரத்து இறை
    அட்டமூர்த்திக்கு அன்பது ஆகியே


விளக்கம்

கட்டம் = தனது வலிமையின் மீது கொண்ட செருக்கினால் பேசிய வீண் வார்த்தைகள். தனது மகள் கூறிய பதிலினைக் கேட்ட தாய், மனமுடைந்த நிலையில், எனது மகள் தனது விருப்பம்போல் நடப்பாள், என்று விரக்தியில் கூறுகின்றாள்.

பொழிப்புரை

தனது வலிமையால் செருக்கு கொண்டு, தனது வழியில் குறிக்கிட்ட கயிலை மலையை பேர்த்து எடுப்பேன் என்று வீண் மொழிகள் பேசிய, அரக்கன் இராவணனின் கொடிய முயற்சியைத் தடுத்து அவனது கர்வத்தை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்ட மூர்த்தி பால் காதல் கொண்டுள்ள எனது மகள், தனது விருப்பம் போல் நடந்துகொள்வாள். அவளது போக்கினை என்னால் மாற்ற இயலாது.

முடிவுரை

பெற்ற தாயினும் நல்லவனாக சிவபெருமானை அப்பர் நாயகி கருதிய தன்மை, நமக்கு திருமூலரின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் திருமூலர் தாயினும் நல்லன் தாழ்சடையோன் என்று கூறுகின்றார்.

    தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
    ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
    சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
    தாயினும் நல்லன் தாழ் சடையோனே

இதே கருத்தை தான் மணிவாசகரும் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருள்புரிபவன் சிவபெருமான் என்று பிடித்த பத்து பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார். இந்த பாடலில் அவர், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக்கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார். சிவபுராணத்தில் தாயினும் சிறந்த தயா ஆன தத்துவனே என்று குறிப்பிடுவதும் நாம் இங்கே சிந்திக்கத்தக்கது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து
                                                                                     அருளுவது இனியே

இன்றும் நாம் பல குடும்பங்களில், காதல் வயப்பட்ட பெண்ணுக்கும் அவளது தாய்க்கும் இடையே நடைபெறும் போராட்டங்களை காண்கின்றோம். அத்தகைய சமயங்களில் ஏற்படும் இயல்பான உரையாடல்கள் போன்று, வாழ்வியலுடன் ஒத்து காணப்படும் கருத்துகள் கொண்ட சுவையான பதிகம். சிவபெருமான் மீது தான் கொண்டுள்ள ஆழமான காதல் காரணமாக, தனது போக்கினை மாற்றிக்கொள்ளாமல் செயல்படும் அப்பர் நாயகி போன்று நாமும், சிவபெருமான் பால் நாம் வைத்துள்ள அன்பையும் பக்தியையும் இறுதிவரையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இந்த பதிகத்தின் மையக் கருத்தாகும். அதனை புரிந்துகொண்டு அப்பர் பிரான் காட்டிய வழியில் நாம் நடப்போமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.