பாடல் 3
அருமறையனை ஆணொடு பெண்ணனை
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை
புரி வெண் நூலனைப் புள்ளிருக்குவேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே
விளக்கம்
அருமறையன் = அரிய வேதங்களின் வடிவாக உள்ள இறைவன். புள்ளிருக்குவேளூர் இறைவனைப் போற்றிப் புகழும் மனிதர்கள் கூற்றுவனின் சீற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என்று, பதிகத்தின் இரண்டாவது பாடலில், வழி சொல்லிக்கொடுக்கும் அப்பர் பிரான், அவ்வாறு இறைவனை, மனம் உருகிப் போற்றும் மனிதர்களின் உள்ளம் எவ்வாறு மாறும் என்பதை இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு சம்பந்தப் பெருமானின் நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இறைவனின் மீது என்றும் நீங்காத அன்பினை, நாளுக்கு நாள் மேலும் வளரும் அன்பினைக் கொண்டு, உள்ளம் கசிந்துருகி, கண்களிலிருந்து கண்ணீர் பொழிய நமச்சிவாய மந்திரத்தை ஓதும் அடியார்களை, ஐந்தெழுத்து மந்திரம் நன்னெறியில் கொண்டு சேர்த்து அவர்கள் வாழ்வில் உய்வினை அடைவதற்கு வழி வகுக்கும் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
இந்த பாடலில் கருவிடம் மிக உண்டவன் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கிவந்த விடம் அனைத்தையும், மிச்சம் ஏதும் வைக்காமல் உண்டவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு, விடம் மிக உண்டவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தசபுராண திருப்பதிகத்தின் முதல் பாடலில் (4.14.1) திரண்டு எழுந்த விடத்திற்கு பயந்து ஓடிய தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு, விடத்தை, மிச்சம் ஏதும் வைக்காமல், எரியாமல் உண்டவன் சிவபெருமான் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம்.
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்
அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அரசே
மாதொருபாகனாக இறைவன் உள்ள நிலை பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றது. தோடுடைய செவியன் என்றும் குழையுடைய காதன் என்றும் ஆணோடு பெண்ணானவன் என்றும் பல தேவாரப் பாடல்களில் பெருமானின் அம்மையப்பனாகிய உருவம் உணர்த்தப்படுகின்றது. பெண்ணின் உருவமும், ஆணின் உருவமும் கலந்து இருக்கும் நிலையினை, இறைவனின் உடலின் ஒரு பாகம் மற்றொரு பாகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக காணப்படும் நிலையினை, உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி என்று திருவடித் தாண்டகம் பதிகத்தில் அப்பர் பிரான் மிகவும் சுருக்கமாகவும் அழகாகவும் உணர்த்துவதை நாம் இங்கே (6.6.6.) காணலாம்.
திருமகட்கு செந்தாமரையாம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய
வல்ல அடி
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி
திருவதிகைத் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி
சிவபெருமான் வேதம் ஓதுவதையும் நடனம் ஆடுவதையும் மிகவும் அருகில் இருந்து எப்போதும் ரசிப்பவள் உமையம்மை. இந்த நிகழ்ச்சியை, அப்பர் பிரான் மாதொருபாகன் உருவத்தில் காண்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் உணரலாம். பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடலில் (4.08) அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு
நின்று புரள
விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல் பாகமாக வருவர்
இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம்
எழில் வண்ணம் வண்ணம் இயல்பே
ஒரு காதினில் குழையும் (ஆண்கள் அணியும் ஆபரணம்) மற்றொரு காதினில் தோடும் (பெண்கள் அணியும் ஆபரணம்) அணிந்தவராக, பெருமானை நமக்கு உணர்த்தும் பாடல்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில், ஞானசம்பந்தர் இறைவனை தோடுடையான் குழையுடையான் என்று குறிப்பிடுகின்றார்.
சேர்ந்தாடும் என்று பேய்களுடன் இணைந்து நடனம் ஆடுவதை இங்கே சம்பந்தர் கூறுகின்றார். காட்டில் உறைபவனாக இருந்தாலும், பல நாடுகளிலும் உள்ள கோயில்களில் இறைவன் குடிகொண்டு இருப்பதால், சம்பந்தர் நாடுடையான் என்றும் இறைவனை அழைக்கின்றார். பீடு = பெருமை. எவராலும் வெல்ல முடியாதவனாக, செருக்குடன் திரிந்த அரக்கன் ராவணனின் வலிமையை முதலில் அடக்கிய பெருமை உடையவன் எனபதால், அரக்கன் தோளடர்த்த பீடு உடையான் என்று கூறுகின்றார்.
தோடுடையான் குழை உடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிகப் பெரியான்
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்
காடு உடையான் நாடு உடையான் கனபதீச்சரத்தானே
வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது அவருக்கு, சிவபெருமான் தனது நடனக்காட்சியை காட்டி அருளினார். அந்த நடனக் காட்சியை, பாட அடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில் (6.77) அப்பர் பிரான் நமக்காக வடித்து இருக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், சிவபெருமானின் காதினில் தோடும் குழையும் கண்டதாக அப்பர் பிரான் சொல்கின்றார்.
குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும்
கொள்கை கண்டேன்
இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை
முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம்
கறங்கக் கண்டேன்
மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை
நான் கண்டவாறே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக் குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினை ஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்..
நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான
விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக்
குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ்
மகரக் குழையும் தோடும் அணிந்த திருக்
காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ கார்வயல் சூழ்
கானப்பேர் உறை காளையையே
இறைவன் சிவபெருமானின் திருவடிகள், பார்வதி தேவி அணியக்கூடிய அணிகலன்கள் ஒலிக்கும் தன்மை உடையன என்று கூறுவதன் மூலம், திருவடிகளில் ஒன்று தேவியின் திருவடி என்று உணர்த்தி, இறைவன் மாதொருபாகனாக இருக்கும் நிலை, திருவையாறு பதிகத்தின் ஒரு பாடலில் (4.92.12) அப்பர் பெருமானால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பொலம் புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றி என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன்னனையாள்
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணித் திரளும்
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே
மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீரும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்த பழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன.
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலது காதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப்படுகின்றார். சிவபிரான் பேரில் காதல்கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்ட அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.
வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே
மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொருபாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லை போலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ள பொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த சொல் கையாளப்பட்டுள்ளது. வீ = பூச்செண்டு. பாந்தள் = பாம்பு. சங்கம் = வெண் சங்கால் அமைந்த வளையல். அக்கு = எலும்பு மாலை. அங்கம்சரி = அங்கு+அம்+சரி. அங்கு, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல். அம் சரி = அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவை அம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினை உணர்த்தும் பொருட்களாகவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்
தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்
சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்
அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே
சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின் கோலத்தை விவரிக்கின்றார் வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலது பக்கத்திலும், பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.
வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்
மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே
பொழிப்புரை
அரிய வேதங்களின் வடிவமாக உள்ளவனும், ஆண் உருவத்தினோடு பெண் உருவத்தினையும் இணைத்து காணப்படுபவனும், பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த கருமையான நஞ்சு அனைத்தையும் உண்டதால் கருமை நிற கழுத்தினை உடையவனும். வெண்மையான முப்புரி நூலினை அணிந்தவனும், புள்ளிருக்குவேளூர் தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை நினைத்து உருகி உள்ளம் நைபவர்களின் மனம் மிகவும் குளிர்ந்து இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

