பாடல் 7
கையினோடு கால் கட்டி உமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்
பொய்யிலா அரன் புள்ளிருக்குவேளூர்
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே
விளக்கம்
உமர் = உம்மைச் சார்ந்த உறவினர். இறந்த உடல் விரைப்பதற்கு முன்னமே, இறந்தவரின் கைகளையும் கால்களையும் இறுக்கமாக கட்டுவது வழக்கம். அந்த வழக்கத்தினை குறிப்பிட்டு, இறப்பதற்கு முன்னம் புள்ளிருக்குவேளூர் அரனைத் தொழுது வாழ்த்தி உய்யுமாறு அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பதிகம். வீடினன் = இறந்தான்.
பதினோராம் திருமுறையில் க்ஷேத்திரத் திருவெண்பா தொகுப்பில் காணப்படும் ஐயடிகள் காடவர் கோனின் பல பாடல்கள், ஒத்த கருத்தினை கூறுவதை நாம் இங்கே காணலாம். பழைய வேட்டியின் ஓரத்தில் உள்ள கரையினைக் கிழித்து இறந்தோரது கால் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்துக் கட்டியும், மாலை அணிவித்தும், கண்ணுக்கு மை எழுதியும், புதிய புத்தாடையால் மூடியும் பிணத்திற்கு சிங்காரம் செய்யும் பழக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. நீ உயிரிழந்து, உனது இறந்த உடலை பலவிதமாக சிங்காரித்து பலர் கூடி அழுவதன் முன்னம் கோடிகா சென்று உய்வினை நாடுவாய் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல்.
காலைக் கரை இழையால் கட்டித் தன் கை ஆர்த்து
மாலை தலைக்கு அணிந்து மை எழுதி மேலோர்
பருக்கோடி மூடி பலர் அழா முன்னம்
திருக் கோடிகா அடை நீ சென்று
இறந்துவிட்டதை எவ்வாறு உறுதி செய்கின்றார்கள் என்பது கீழ்க்காண்ட பாடலில் உணர்த்தப்படுகின்றது. உடலில் துடிப்பு உள்ளதா அல்லவா என்பதை உணர்வதற்காக தொட்டும் தடவியும் உணரும் சுற்றத்தார், உயிர் பிரிந்துவிட்டது என்பதை அறிந்த பின்னர், இந்த பிணத்தை எடுங்கள், இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும் நிலை நமது உடலுக்கு வருவதன் முன்னம் நெடுங்களத்து இறைவனின் திருப்பாதங்களை நினைக்குமாறு இந்த பாடலில் அறிவுரை கூறப்படுகின்றது.
தொட்டுத் தடவி துடிப்பு ஒன்றும் காணாது
பெட்டப் பிணம் என்று பேரிட்டுக் கட்டி
எடும் களத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை
சிராப்பள்ளி இறைவனை, நமது உயிர் போகுமுன்னர் நினைக்க வேண்டும் என்று உணர்த்தும் பாடல் இது. நேற்றே போன உயிர், தனது கட்டுகளை விட்டு நாற்றம் எடுக்கின்ற படியால், உறவினர்களே இந்த உடல் இங்கே இருப்பதை நாம் சகிக்க முடியாது எனவே அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்கு இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லப்படும் நிலை நமது உடலுக்கு வருவதன் முன்னர், சிவபெருமானின் திருவடிகளைப் பற்றுமாறு அறிவுறுத்தும் பாடல்.
கழிந்தது நென்னற்று கட்டுவிட்டு நாறி
ஒழிந்தது உடல் இரா வண்ணம் அழிந்தது
இரா மலையா கொண்டு போ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்
ஒருவர் இறந்த பின்னர், அவரது உடலைக் காண வரும் சுற்றத்தாரும், நண்பர்களும் இறந்தவர், தனது வாழ்நாளில் செய்த செயல்களை (நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள், செய்யத் தவறிய செயல்கள்) விமர்சனம் செய்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தில்லைக் கூத்தனை தரிசிக்காததால், தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தினை நிறைவேற்றாத எவரேனும் இறந்தால், அவரது உடலைக் காண வருவோர், மிகவும் இகழ்ச்சியாக, அவர் செய்யத் தவறிய செயலை, (அதாவது தில்லைக் கூத்தனை தரிசித்து பிறவிப் பயனை அடையாத நிலையை), சுட்டிக்காட்டி சிரிப்பார்கள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். திருச்சிற்றம்பலம் சென்று நடராஜப் பெருமானின் கூத்தினைக் காணாத ஒருவனின் வாழ்க்கை வீணாகக் கழிந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், அவ்வாறு தில்லை செல்லாத ஒருவனை மற்றவர்கள் ஏளனமாக பேசுவதை தடுக்கும் வண்ணம், தில்லை சென்று தொழுவாயாக என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் தில்லைப் பதிகத்தில் (5.01.3) உள்ளது.
அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிசுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சு உற்றுப் பல பேசப் படா முனம்
திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே
பொழிப்புரை
உங்களது சுற்றத்தார் அனைவரும் ஒன்று கூடி, உமது கைகளையும் கால்களையும் துணியால் கட்டி, குடும்பத் தலைவன் இறந்துவிட்டான் என்று கூறுவதன் முன்னமே, நீர் பொய்மை இல்லாத பெருமானாகிய புள்ளிருக்குவேளூர் இறைவனை, கருநிறம் படிந்த கழுத்தினை உடைய பெருமானை வீழ்த்தி, நலம் பெறுவீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

