மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

40. ஆண்டானை அடியேனை - பாடல் 3

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின்

Updated On :15 அக்டோபர் 2016, 11:20 am

பாடல் 3

பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை
பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை எம்மானை என்னுள்ளத்து
உள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை அன்னிக்கும் தீங்கரும்பை
அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள்
போக்கினேனே


விளக்கம்

தன்னைப் பல நாட்கள் தொடர்ந்து தேவாரப் பதிகங்கள் பாட வைத்தவன் சிவபெருமான்தான் என்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அப்பர் பெருமான் கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய நாள் முதலாக, தனது வாழ்நாட்களின் இறுதி வரையிலும் பதிகங்கள் பாடியதை பெரியபுராணம் தெரிவிக்கின்றது. அப்பர் பிரான் தனது வாழ்நாளில் 49,000 பாடல்கள் பாடியதாக சுந்தரர் தனது பாடல் ஒன்றினில் கூறுகின்றார். ஆனால், நமக்கு தற்போது கிடைத்துள்ளவை 3066 பாடல்கள் கொண்ட 313 பதிகங்களே ஆகும்.

அபயம் என்று சரணடைந்த தனது சூலை நோயினைத் தீர்த்து ஏற்றுக்கொண்டதும் அல்லாமல், தன்னிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (668) ஒரு பாடலில் அப்பர் பிரான், தன்னை பாமாலை பாட பயில்வித்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைக் கொடுத்து திருவதிகைக்கு வரவழைத்து அப்பர் பிரானின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை அமைத்துக் கொடுத்து, அவரை தேவாரப் பதிகங்கள் பாடச் செய்தவர் பெருமான் தானே. எத்திசையும் வானவர்கள் தொழநின்றான் = வானவர்கள் தங்களுக்கு இட்ட கட்டளையின்படி, வெவ்வேறு இடத்தில் இருந்தவாறு தங்களது தொழில்களைச் செய்தவாறு இருப்பார்கள். அவ்வாறு வெவ்வேறு இடங்களில் இருந்தவாறே, இறைவனைத் தொழும் நிலை, எத்திசையும் வானவர்கள் தொழ நின்றான் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. சித்தன் = எல்லாம் செய்ய வல்லவன்.

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறூர்ந்த பெம்மானை
                                                                                            எம்மான் என்று    
பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப்
                                                                                          பயில்வித்தானை    
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செழும்பவளக்
                                                                                         கொழுந்து ஒப்பானைச்
சித்தனை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே
                                                                                           திகைத்தவாறே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.84.4) தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கு அறுத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பன்னிய நூல் என்றால் இலக்கண முறைப்படி அமைந்த பாடல்கள் என்று பொருள். இந்த பாடல்களைப் பாடியதால் தனது மனதில் இருந்த மயக்கும் சிந்தைகள் அறுந்தன என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அவரது பாடல்களை பொருள் உணர்ந்து ஓதினால், நாமும் நமது சிந்தைகளில் உள்ள மயக்கங்களை அறுத்துத் தூய்மை பெறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது.

கந்தமலர்க் கொன்றை அணி சடையான் தன்னைக் கதிர் விடுமாமணி
                                                                                               பிறங்கு கனகச்சோதிச்
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானைச் சராசர நல் தாயானை நாயேன்
                                                                                                                    முன்னைப்
பந்தம் அறுத்து ஆளாக்கப் பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை
                                                                                                                       பாடுவித்து என்
சிந்தை மயக்கு அறுத்த திருவருளினானைச் செங்காட்டங்குடி அதனில்
                                                                                                                          கண்டேன் நானே

அப்பர் பிரானை மட்டுமா சிவபெருமான் தீந்தமிழ் பாடல்கள் பாடவைத்தார், ஞானசம்பந்தப் பெருமான், சுந்தரர் மற்றும் மணிவாசகர் ஆகியோரையும் பாடவைத்தவர் அவர்தானே. அம்மையே அப்பா என்று குளக்கரையில் நின்று, தோணிபுரத்தில் இருந்த கோயில் சிகரத்தில் வீற்றிருந்த பெருமானைச் சுட்டிக் காட்டி அழுத குழந்தைக்கு, உமையம்மை மூலம் ஞானப்பால் வழங்கி, மூன்று வயதினிலேயே, அந்த குழந்தையைப் பாட வைத்து அற்புதம் நிகழ்த்தியவர் சிவபெருமான்தானே. இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தில், ஞானசம்பந்தர், எனது உரை தனது உரையாக என்ற தொடரினை பதிகத்தின் (1.76) முதல் பத்து பாடல்களிலும் அடக்கி, சிவபெருமானின் உரைதான் தனது வாய்மொழியாக தேவாரப் பாடல்களாக வந்தன என்ற உண்மையை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். இந்த பதிகம் அகத்துறை கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தனது உரையினை எனது உரைகளாக வெளிப்படுத்தி அருளியவன் என்று சிவபெருமானை இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர் மறைக்காடு
                                                                                                                     நெய்த்தானம்
நிலையினான் எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு உகந்து
                                                                                                                        ஏறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கிக்
                                                                                                                      கணமயில் ஆலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்
                                                                                                                 எழில் கொள்வது இயல்பே

நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து, பின்னர் அடிமை ஓலை காட்டி சுந்தரரை ஆட்கொண்ட பெருமான், அவரை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்துறை திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் அங்கே மறைந்துவிடுகின்றார். பின்னர் வானில் எழுந்த ஓசை மூலம், எம்மை பாடுவாய் என்று சுந்தரரை பணிக்கின்றார். உன்னை அறிந்துகொள்ள முடியாமல், நாயினும் கடையேனாக இருந்த அடியேன் என் சொல்லிப் பாடுகேன் என்று சுந்தரர் சொல்ல, இறைவனார் முன்பு என்னை பித்தன் என்றே மொழிந்தனை, ஆகவே பித்தன் என்றே பாடுக என்று அடியெடுத்துக் கொடுத்து, சுந்தரரை பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தை பாடவைத்தார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
வன்பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடலுற்றார்

மணிவாசகர் தனது கோத்தும்பீ பதிகத்தில், தன்னை பாடுவித்த நாயகன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சீ என்று வெறுக்காது தான் செய்த திருப்பணிகளை ஏற்றுக்கொண்டவன் என்றும் அடியார்களின் குற்றங்களைப் பொறுத்து அருளும் பெருமையாளன் என்றும் இந்த பாடலில் பெருமானை குறிப்பிடுகின்றார்.         

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

அண்ணித்தல் = தித்தித்தல். புத்தேள் = கடவுள், தேவர்கள். பாடப் பயில்வித்தானை = பாடக் கற்றுக் கொடுத்தவன் என்றும் தொடர்ந்து பாடவைத்தவன் என்றும் இரண்டுவிதமாக பொருள் கொள்ளலாம். தீங்கரும்பு = இனிமையான கரும்பு.

பொழிப்புரை

அடியேன் பக்தியுடன் வணங்கி பல நாட்கள், தன்னைத் தொடர்ந்து தேவாரப் பாடல்கள் பாடுமாறு செய்தவன் சிவபெருமான்தான். அனைத்துத் தெய்வங்களும் புகழ்ந்து போற்றும் தெய்வமாக இருப்பவனும், எனது தலைவனும், எனது உள்ளத்தில் தேன் போன்று இனிய நினைவாக ஊறுபவனும், தேன், பால், அமுதம் மற்றும் இனிய கரும்பு போன்று அனைவருக்கு இனியவனாக. அவர்களது பகைவர்களை அழிப்பவனும், முதற்கடவுளாக இருப்பவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.