மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

40. ஆண்டானை அடியேனை - பாடல் 5

ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான்

Updated On :15 அக்டோபர் 2016, 11:21 am

பாடல் 5


மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும் கால் தன்னகத்தில்
                                                                                                         இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த் தரணிதலத்து
                                                                                                                      அஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான் பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை
                                                                                      வயிரத்தை மாசு ஒன்றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
                                                                                                                  நாள் போக்கினேனே

விளக்கம்

ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாகவும் விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த கருத்தையே மணிவாசகர், போற்றித் திருவகவலில் கூறுகின்றார்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

இதே கருத்து கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.60) ஒரு பாடலிலும் கூறப்படுகின்றது.

மண்ணதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை
                                                                                                   மாருதத்து இரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிகதிரை தண்மதியைத் தாரகைகள்
                                                                                                                     தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த
                                                                                                                         இமையா நெற்றிக்
கண்ணவனை கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக்
                                                                                                                   கண்டேன் நானே
கால் = காற்று. தாழ் புனல் = பள்ளம் நோக்கி பாய்ந்து ஓடும் தன்மை உடைய நீர். எஞ்சா = அழியாத. தஞ்சம் = புகலிடமாக விளங்கும் தன்மை. வான்பவளம் = சிறந்த பவளம்.

பொழிப்புரை

மின்னல் வீசி பிரகாசிக்கும் ஆகாயத்தில் ஒலி எனப்படும் ஒற்றைப் பண்புடனும், வீசும் காற்றினில் ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளாகவும். சிவந்த நிறத்துடன் மிளிரும் தீயினில் ஒலி, ஊறு மற்றும் ஒளி ஆகிய மூன்று பண்புகளாகவும், பள்ளத்தினை நோக்கி ஓடும் இயல்பினைக் கொண்ட நீரினில், ஒலி ஊறு ஒளி மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளாகவும், பூமியில் ஒலி ஊறு ஒளி சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளாகவும் விளங்குபவன் சிவபெருமான். என்றும் அழியாத பொருளாக அனைவர்க்கும் தஞ்சம் அளிக்கும் நிலையான பொருளாக விளங்குபவனும், சிறந்த பவளக் கொழுந்தாக விளங்குபவனும், அரிய முத்தாகவும், வளரும் ஒளியாகவும், வயிரமாகவும், குற்றம் ஒன்றும் இல்லாது பொன்னிறத்துடன் விளங்கும் மேனியை உடையவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.