(நாரையூர் – குறுந்தொகை)
முன்னுரை
தில்லையம்பதியில் உழவாரத் திருப்பணிகள் செய்தவாறு, தில்லைக் கூத்தனை புகழ்ந்து பல பதிகங்கள் பாடி அப்பர் பிரான் மகிழ்ந்திருந்த நாட்களில் ஒருநாள், அடியார் ஒருவர் தில்லைக்கு அருகில் இருக்கும் சீர்காழியில் மூன்று வயதுக் குழந்தைக்கு, பார்வதி அன்னை தனது முலைப் பாலுடன் சிவஞானமும் கலந்து ஊட்டிய நாள் முதல், அந்த குழந்தை பதிகங்கள் பாடிய அதிசயத்தை, மற்றொரு அடியாருக்கு சொல்வதை கேட்டார். இந்தச் செய்தியை குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அப்பர் பிரானுக்கு அந்தக் குழந்தையின் திருப்பாதங்களைத் தொழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது. தில்லைப் பதியை விட்டு அகன்று செல்கின்றோம் என்ற எண்ணத்தில் பொன்னம்பலக் கூத்தனின் சன்னதிக்கு சென்று அவரை வணங்கிய பின்னர், தில்லை நகரத்தின் திருவீதிகளில் புரண்டு, அப்பர் பிரான் வலம் வந்தார். தில்லை நகரத்தின் திருவீதிகளை, பிறவிப் பிணியினை நீக்க வல்ல வீதிகள் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
கடை யுகத்தின் ஆழியின் மேல் மிதந்த திருக்கழுமலத்தின் இருந்த செங்கண்
விடை உகத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்
அதன் பின்னர், சீர்காழி செல்லும் வழியில் திருநாரையூர் தலம் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் இரண்டு திருப்பதிகங்கள், ஒரு குறுந்தொகையும் ஒரு தாண்டகமும் அருளியுள்ளார். தில்லையை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாதவராக, தில்லையின் எல்லைக்கு சென்ற பின்னர், அங்கிருந்தவாறே இறைவனை நினைத்து வணங்கினார் என்று கீழ்க்கண்ட பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே
எப்புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடிச் செல்வார்
தலத்து இறைவனின் திருநாமம் சௌந்தர்யநாதர், அழகிய நாதர் என்பது. பெருமானின் திருநாமத்தை உணர்த்தும் வகையில் பெருமானின் திருக்கோலம் மிகவும் அழகியது என்ற பொருள் பட, அம்ம அழகிதே என்று, பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் முடிகின்றன. அம்ம என்பது வியப்பினை உணர்த்தும் சொல். பெருமானின் திருவுருவத்தினைத் தனது அகக் கண்கள் மூலம் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான், அந்த அழகில் மெய்ம்மறந்து பெருமானின் திருவுருவம் எத்தனை அழகாக உள்ளது என்று வியந்து பாடும் பாடல்கள் கொண்ட பதிகம். இந்தப் பதிகத்தில் பெரும்பாலும் இறைவனின் பல பாகங்களின் அழகு விவரிக்கப் படுகின்றது.
இவ்வாறு பெருமானின் திருமேனியின் அழகினை அப்பர் பிரான் வியந்து பாடுவது நமக்கு, திருமங்கை ஆழ்வார், நாகைப் பெருமாள் மீது அருளிய பாசுரம் (பெரிய திருமொழி 9.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்தத் தலத்தின் பெருமாளின் பெயர் சௌந்தரராஜ பெருமாள் என்பதாகும். இந்த பாசுரத்தின் முதல் ஒன்பது பாடல்களும் அச்சோ ஒருவர் அழகியவா என்று முடிகின்றன. அச்சோ என்பது வியப்பினைக் குறிக்கும் சொல்லாகும். பாசுரத்தின் கடைப் பாடலில், நாகை அழகியர் என்று பெருமாளை குறிப்பிடுகின்றார். இந்தப் பாசுரத்தின் மூன்றாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விலங்கல் = குன்றுகள். மெய்யம் = திருமெய்யம் வைணவத் தலம். செவ்வியவாகி = அழகாக.
வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயுருங்குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா
பாடல் 1
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே
விளக்கம்
வீறு = பெருமை. வெற்பன் = மலையை உடையவன், இமவான். கூன் பிறை = வளைந்த பிறைச் சந்திரன்.
பொழிப்புரை
பெருமை பொருந்திய இமயமலைக்கு அரசனாகிய, இமவானின் மகளாகிய பார்வதி தேவியினைத் தனது உடலில் கொண்டவனும், வளைந்த பிறையினைத் தனது சடையில் சூடியவனும், நறுமணம் வீசும் சோலைகள் சூழ்ந்த நாரையூர் நகரில் வீற்றிருக்கும் நம்பனும் ஆகிய சிவபெருமான், தனது சடையில் கங்கை ஆற்றினையும் தரித்துள்ளான்; ஆயினும் அவனது திருமேனி மிகவும் வியப்பூட்டும் அழகு பொருந்தியதாக விளங்குகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

