பாடல் 4
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே
விளக்கம்
தூவல் = இறகு. நாரை பெருமானை வழிபாட்டு சாப விமோசனம் அடைந்த தலம் என்பதால் நாரையூர் என்ற பெயர் பெற்றது. நாரையின் வழிபாட்டினை நினைவூட்டும் தலம், அப்பர் பிரானுக்கு, இறைவன் கொக்கினை வென்று கொக்கின் சிறகினை அணிந்த நிகழ்ச்சியை நினைவூட்டியதுபோலும். கொக்கின் வடிவில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கன், அனைவரையும் துன்புறுத்தியதால், சிவபெருமானை அவனைக் கொன்றார் என்றும் அவனைக் கொன்றதன் அடையாளமாக கொக்கின் இறகினை ஆபரணமாக அணிந்தார் என்றும் கந்த புராணத்தில் சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் கொக்கின் இறகு அணிந்த சிவபெருமான் என்ற தொடராக குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
பிரமபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (2.65.2) சம்பந்தர் கொக்கின் இறகினை சிவபெருமான் அணிந்ததை உணர்த்துகின்றார். இந்தப் பதிகத்தில் வரும் இலர் என்ற சொல்லுக்கு எதிர்மறையாக பொருள் கொண்டு உள்ளவர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கூரம்பது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும்
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும்
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.107.6) சம்பந்தர் இறைவன் கொக்கிறகு அணிந்திருப்பதை குறிப்பிடுகின்றார். குழகாக = இளமையுடன். குலாய = செழுமை மிகுந்த. புகல் = திருவருள் சக்தி பதிதல். நாரையூர்ப் பெருமானை விருப்பத்துடன் வழிபடும் அடியார்களின் மனதினில் திருவருளின் சக்தி பதியும் என்று சம்பந்தர் கூறுகின்றார்.
கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக
நக்கமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்
புக்கமரும் மனத்தோர்கள் தம்மை புணரும் புகல் தானே
திருவாரூர் தலத்தில் தான், மனக்கண்ணில் கண்ட பெருமானின் உருவத்தை விவரிக்கும் பாடல் ஒன்றினில் (4.19.2) பெருமான் அணிந்திருக்கும் கொக்கிறகு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பூதகணங்கள் சூழ பல ஊர்கள் சென்று பிச்சை ஏற்கும் பெருமான், நிறைந்த கோவணமும் சங்குமணி மாலையும் இடுப்பினில் அணிந்தவராக காணப்படுகின்றார் என்றும் இங்கே கூறுகின்றார்.
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்க ஊர் பிச்சை ஏற்றுண்டு பொலிவு உடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே
அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய ஒரு பாடல் (5.80.5) கொக்கிறகர் என்றே தொடங்குகின்றது. கொக்கின் இறகை சூடியும், எலும்பு மாலைகளையும் அணிந்தும், மிகவும் குறைந்த ஆடைகளுடன் காண்போர் நகைக்கும் தோற்றத்துடன் இருக்கும் சிவபெருமானை எளியவர் என்று எண்ணிவிட வேண்டாம் என்று உணர்த்தும் வண்ணம் அவர், செருக்கு மிகுந்த மூன்று அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானது வீரம் மிகுந்த செயலைக் கேட்ட நாம், அவரிடம் அச்சம் கொண்டு அவரை அணுக தயக்கம் காட்டுவோம் என்ற சந்தேகம் அப்பர் பிரானுக்கு வந்ததுபோலும். அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தும் வண்ணம், சிவபெருமான் கருணை மிகுந்தவர் என்று, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்ததை நினைவூட்டி, அவர் நம்மை நன்றாக அறிந்தவர் என்று இங்கே உணர்ந்ததும் நயத்தையும் இந்த பாடலில் நாம் காணலாம்.
கொக்கிறகர் குளிர் மதிச் சென்னியர்
மிக்க அரக்கர் புரம் எரி செய்தவர்
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை
நக்கு உருவரும் நம்மை அறிவரே
பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தலையில் கொக்கின் இறகினை சூடி உள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில், கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.
மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே
திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் கடைப் பாடலில், பெருமானைச் சிறப்பித்து பாடியவாறே தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் கூறுகின்றார். அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக அசைத்தலை தெள்ளுதல், கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை, நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்தப் பாடல் கூறுகின்றது.
குலம் பாடி கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்
நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்
அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
திருக்கோவையார் பாடல் ஒன்றினில் பெருமான் கொக்கிறகு அணிந்து காணப்படும் காட்சியை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். எட்டு திக்குகளை எட்டுமாறு பரந்த தோள்களை உடைய தில்லைக் கூத்தன், கொக்கின் இறகு அணிந்துள்ளான் என்று இங்கே கூறுகின்றார். தோழியின் கூற்றாக அமைந்த இந்தப் பாடலில், கூடல் நகரத்து முத்து போன்ற பற்களை உடைய தலைவியை விட்டுவிட்டு, அயல் மாதரிடம் நாட்டம்கொண்டு பிரிந்த தலைவனைப் பழித்து உரைப்பது போன்ற பாடல். தலைவியை சிவனருளாக உருவகித்து, அந்த அருளினைப் பிரிந்து பிற தெய்வத்தை நாடும் ஆன்மாவினை, தகுதி இல்லாத ஆன்மா என்று இழித்துக் கூறுவது இந்தப் பாடலின் உட்பொருளாகும்.
திக்கின் இலங்கு திண்தோள் இறை தில்லைச் சிற்றம்பலத்துக்
கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தென் கூடல் அன்ன
அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
தக்கின்று இருந்திலன் நின்ற செவ்வேள் என் தனி வள்ளலே
ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா) பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடல்) கொக்கின் இறகையும் கொன்றை மலரையும் தனது சடையில் அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். அடியார்கள் நினைப்பதைத் தரும் இறைவன் என்பதால் கற்பகம் என்று இங்கே கூறுகின்றார். கொக்கின் இறகையும், கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், ஊமத்தம் பூவினையும் சடையில் சூடி, நடனமாடும் தில்லைக் கூத்தனின் உருவம் தனது சிந்தையுள் நிறைந்து உலவுகின்றது என்று இங்கே கூறுகின்றார்.
ஏர்கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெருந்தடம் கண்கள் மூன்றுடை உன்
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெற்றும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா
நீர்கொள் செஞ்சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே
கொக்கின் இறகு, வில்வ இலைகள், மண்டையோட்டு மாலை, விரிந்த சடை, குறைந்த ஆடை, எலும்பு மாலை ஆகியவை அணிந்த பெருமானாக தான் கண்டதை அப்பர் பிரான் இங்கே எடுத்துரைக்கின்றார். மேலே குறிப்பிட்ட பொருட்களில் எதுவும் எவருக்கும் அழகினை சேர்க்காது என்பதை நாம் உணரலாம். ஆனாலும் இவை அனைத்தும் அணிந்த பெருமான் அழகுடன் திகழ்வதால், தான் வியப்புக்கு உள்ளாகியதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
கொக்கின் சிறகுகளையும், வில்வ இலைகளால் அமைந்த மாலையினையும், காய்ந்த மண்டையோடுகள் பல சேர்த்து கட்டப்பட்ட தலை மாலையும், விரிந்த சடையையும், மிகவும் குறைந்த ஆடையினையும், அணிந்துள்ள நாரையூர் நம்பனுக்கு, அவர் இடுப்பினில் அணிந்துள்ள எலும்பு மாலையும் மிகவும் அழகாக விளங்குகின்றது. அவரது அழகிய தோற்றம் எனக்கு மிகுந்த வியப்பினை அளிக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

