பாடல் 10
கடுக்கை அம் சடையன் கயிலைம் மலை
எடுத்த வாளரக்கன் தலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே
விளக்கம்
கடுக்கை = கொன்றை மலர். அம் சடையன் = அழகான சடையினை உடையவன். அடுத்த = ஊன்றிய.
பொழிப்புரை
தனது அழகான சடையில் கொன்றை மலர்களை அணிந்த பெருமான் உறையும் கயிலாய மலையினை, பேர்த்து எடுக்க முயற்சி செய்த, வாளினை உடையவனான அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம், தனது கால் விரலினை மலையின் மீது அழுத்திய செய்கை மிகவும் அழகானது; மேலும் இறைவனது வல்லமை மிகவும் வியப்புக்கு உரியதாகவும் உள்ளது.
முடிவுரை
இந்த பதிகத்தின் நான்கு பாடல்களில் (முதல், நான்காம், ஆறாம் மற்றும் ஒன்பதாம் பாடல்களில் அப்பர் பிரான், இறைவனை, விரும்பத்தக்கவன், நம்பத்தக்கவன் என்ற பொருள்பட நம்பன் என்று அழைக்கின்றார். சிவபெருமான் மட்டுமன்றி, அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் நம்பனாக விளங்கும் தன்மையை இந்த தலம் நமக்கு உணர்த்துகின்றது. திருநாரையூர் என்றாலே சைவ உலகத்துக்கு நினைவுக்கு வருவது நம்பியாண்டார் நம்பி அவர்களின் சரித்திரம்தான். அவரது நம்பிக்கை உரியவராக திகழ்ந்த, நாரையூர் பிள்ளையார் சரித்திரத்தை நாம் இங்கே நினைவு கூர்வோம்.
அனந்தீசர் என்ற பெயரில் ஆதிசைவ குலத்தில் வழி வந்து கோயிலில் பூசை செய்து இருந்தவர்க்கும் அவரது மனைவி கல்யாணி என்பவருக்கும் நம்பியாண்டார் நம்பி மகனாகப் பிறந்தார். நம்பி சிறு வயதினராக இருந்தபோது தந்தையார் தினமும் கோயிலுக்கு செல்லும்போது நிவேதனம் படைக்க பலகாரங்கள் கொண்டு செல்வதையும் திரும்பி வரும்போது பலகாரங்கள் ஏதும் இல்லாமல் திரும்புவதையும் கவனித்தார். அந்த சிறிய குழந்தை, தனது தந்தை எடுத்துச்சென்ற பலகாரம் தனக்கு கிடைக்கவில்லையே என்ற நியாயமான ஏக்கத்துடன் ஒரு நாள் தனது தந்தையிடம் பலகாரம் குறித்து வினவினான். கோயிலில் பூஜை முடிந்த பின் நிவேதனத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து வரும் பழக்கம் உடைய தந்தையார், உண்மையைச் சொன்னால் தனது மகனின் மனம் வருத்தம் அடையும் என்ற எண்ணத்தில், தனது மகனிடம் நிவேதனம் இறைவனுக்கு படைக்கப்பட்டதாகவும் இறைவன் அவற்றை எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். தந்தையின் கூற்று பிஞ்சு மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது
ஒரு சமயம் நம்பியாண்டார் நம்பியின் தந்தை, தவிர்க்க முடியாத வேலையாக வெளியூர் செல்லவேண்டி இருந்தது. தான் திரும்பி வரும் வரை பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை செய்யுமாறு மகனிடம் தந்தையார் கூறினார் தந்தையார் சொற்படி பூஜை செய்யச் சென்ற நம்பியார் அபிடேகம், பூஜை செய்து முடித்து, தான் எடுத்து சென்ற நிவேதனப் பொருளை ஏற்றுக்கொள்ளுமாறு விநாயகப் பெருமானை வேண்டினார். தந்தையார் இதற்கு முன் ஒரு நாள் கூறியது அவரது மனத்தில் ஆழப் பதிந்து இருந்த காரணத்தால் தாம் படைத்த நிவேதனத்தை இறைவன் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த தட்டு அப்படியே இருந்ததால், தான் செய்த பூஜையில் ஏதோ குறைபாடு இருந்ததால்தான், இறைவன் நிவேதனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வந்தார். அறியாச் சிறுவனாகிய தான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் அதை மன்னித்து உண்ணுமாறு இறைவனை வேண்டியும், நிவேதனப் பொருள் அப்படியே இருந்தது. தினமும் நிவேதனத்தை உட்கொண்ட பிள்ளையாருக்குத் தனது குறைபாடு நிறைந்த வழிபாட்டால், உணவு இல்லாமல் போய்விட்டது என்ற முடிவுக்கு வந்த நம்பி மிகவும் வருத்தம் அடைந்தார்.
நிவேதனத்தை ஏற்றுக்கொள்ளாவிடில் தான் அருகில் இருந்த கல்லின் மீது மோதிக்கொண்டு உயிரை விடலாம் என்று தீர்மானித்த குழந்தை கல்லின் மீது மோதிக்கொள்ளச் சென்ற சமயம், பிள்ளையார் நம்பியை பொறுக்குமாறு குரல் கொடுத்தார். பின்னர் குழந்தையின் விருப்பப்படி தனது கரத்தை நீட்டி நிவேதனம் அனைத்தையும் பிள்ளையார் உண்டார். நம்பியும் மகிழ்ந்து வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்றவுடன், அவரது அன்னையார், நிவேதனப் பொருட்களை என்ன செய்தாய் என்று கேட்டபோது, பிள்ளையார் நிவேதனத்தை ஏற்றுக்கொண்டார் என்று தனது குழந்தை கூறியதை, விளையாட்டுப் பேச்சாக, அவரது அன்னை எடுத்துக்கொண்டார். உண்மையாகவே அவ்வாறு நடந்திருக்கலாம் என்பதை அவரது அன்னையார் ஏற்றுக்கொள்ளவில்லை. அறியாச் சிறுவன், தானே பலகாரம் அனைத்தையும் உட்கொண்டுவிட்டு, அன்னையின் கோபத்துக்கு அஞ்சி, பொய்மொழி உரைத்ததாக அவள் கருதினாள். இதனை, வெளியூர் சென்றிருந்த தனது கணவர் வந்தவுடன் அவரிடமும் தெரிவித்தார்.
அவரது தந்தையார் நம்பியை அழைத்து பூஜை செய்த விவரம் பற்றி வினவி நிவேதனப் பொருட்களை என்ன செய்தாய் என்றும் கேட்டார். நம்பி, நிவேதனப் பொருட்களை பிள்ளையார் உண்டதாக கூறினார். இதனை கேட்ட தந்தையார் முதலில் நம்பவில்லை. இருந்தாலும் தனது குழந்தை பலமுறையும் அதே பதிலை கூறியதால், அடுத்த நாள் குழந்தையையே விநாயகருக்கு வழிபாடுகள் செய்யவைத்து நடப்பதென்ன என்பதை கண்காணிக்கலாம் என்று தீர்மானம் செய்தார். பின்னர் அடுத்த நாள் கோயிலில் வழிபாடுகள் முடிந்த பின்னர், குழந்தை வேண்ட பிள்ளையார் நிவேதனப் பொருட்களை உண்டதை நேரில் கண்டபோது மிகவும் வியப்படைந்தார். அன்று முதல் தினமும் விநாயகருக்கு குழந்தை நம்பியே பூஜை செய்யலானார். இதுதான் நம்பிக்கை வைத்து வழிபட்ட குழந்தைக்கு, குழந்தையின் நம்பிக்கை பொய்க்காத வண்ணம், நாரையூர் பிள்ளையார் அருளிய வரலாறு.
திருக்கோயிலில் வழிபாடு செய்யத் தொடங்கிய நாள் முதல், குழந்தை பள்ளிக்குச் சென்று, கல்வி பயிலுதல் தடைப் பட்டமையால், பிள்ளையாரே நம்பியாண்டார் நம்பிக்கு ஞானத்தை அருளினார். இவ்வாறு குழந்தைக்கு விநாயகர் அருள் புரிந்தமை சோழ மன்னனின் காதுகளுக்கும் எட்டியது. தேவாரப் பாடல்களை சைவ உலகம் மீண்டும் பெறவேண்டும் என்று பேராவல் கொண்டிருந்த மன்னன், தெய்வத்தின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிதான், தேவாரப் பாடல்களை மீண்டும் தமிழுலகம் பெறுவதற்கு வழிவகுக்க முடியும் என்று நம்பினான். அவன் திருநாரையூர் வந்து, நம்பியாண்டார் நம்பியிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க, நம்பியும் விநாயகரிடம் அவ்வாறே வேண்டினார். அசரீரி குரலாக, தேவாரப் பதிகங்கள் தில்லைத் திருக்கோயிலில் மேற்குச் சுற்றில் உள்ள அறை ஒன்றினில் வைக்கப்பட்டுள்ள செய்தி தெரிவிக்கப்பட்டது. அங்கே சென்று தேவாரப் பாடல்கள் மீட்கப்பட்டது வரலாறு. நாமும் நம்பன் என்று அழைக்கப்படும் சிவபெருமானை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டு, நமது விருப்பங்கள் நிறைவேறப்பட்டு வாழ்க்கையில் உய்வினை அடைவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

