மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

37. சொல்லானைப் பொருளானை  - பாடல் 6

பேய்களின் பாடலுக்கு ஏற்ப காட்டினில் நடனம்

Updated On :22 செப்டம்பர் 2016, 12:17 pm


பாடல் 6


    பிறவாதும் இறவாதும் பெருகினானைப் பேய் பாட நடமாடும்
                                                      பித்தன் தன்னை
    மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானைக்
                                                     கடலானை வனத்துள்ளானை
    உறவானைப் பகையானை உயிரானானை உள்ளானைப்
                                                   புறத்தானை ஓசையானை
    நறவாரும் பூங்கொன்றை சூடினானை நாரையூர் நன்னகரில்
                                                   கண்டேன் நானே

விளக்கம்

அப்பர் பிரான் இந்த பாடலில் பெருமானை பித்தன் என்று அழைக்கின்றார். அதற்கான காரணத்தையும் அவர் நமக்கு உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். நடனம் ஆடும்

கலைஞர்கள் தங்களது நடனத்திற்கு ஏற்ப இனிமையாக பாடுவோரைக் கொண்டு நடனம் ஆடுவார்கள். ஆனால் பரமனோ இங்கே, அவ்வாறு எவரையும் கொள்ளமால்,

பேய்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடுகின்றார். எனவே அவரை பித்தன் என்று கூறுவதாக நமக்கு உணர்த்துகின்றார். நறவு = தேன். உயர்ந்து காணப்படும் மலை பல

செல்வங்களை உடையது; பரந்து எல்லையின்றி காணப்படும் கடலும் பல செல்வங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான்,

மலையாகவும், கடலாகவும் உள்ளதாக கூறுவது திருமுறை மரபு. மனித உயிர்கள் ஏதேனும் செய்யவேண்டும் என்றால், ஒரு கருவினுள்ளே புகுந்து, வளர்ந்து, தான்

விரும்பும் செயலை நிகழ்த்தவேண்டும். ஆனால் இறைவனுக்கு அத்தகைய கட்டாயம் ஏதும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் எதனையும் செய்ய வல்லவன் இறைவன்.

இந்த உண்மையை பிறவாது பெருகினான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

உறவானை பகையானை என்று பெருமான் உயிர்களுக்கு உறவாகவும் பகையாகவும் இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நாம் இன்பங்கள் அனுபவிக்கும்

போது, பெரும்பாலும் இறைவனை நினைப்பதில்லை. அப்படி நினைத்தாலும், நமக்கு இன்பங்கள் அளித்த அவனை நல்லவன் என்று சொல்கின்றோம். துன்பம் அடையும்

நேரங்களில் அவனைத் தூற்றுகின்றோம். இது மனிதனின் இயல்பு. இதைத் தான் அப்பர் பிரான், இங்கே இறைவன் உறவாகவும் (இன்பங்கள் அனுபவிக்கும் போது)

பகையாகவும் (நாம் துன்பங்கள் அடையும் தருணங்களில்) நம்மால் கருதப்படுவதை குறிப்பிடுகின்றார். ஆனால் நாம் ஒருகணம் சிந்தித்தால், நாம் இன்ப துன்பங்கள்

அடைவதன் மூலம், நமது வினைகள் கழியுமாறு உதவி செய்பவன் இறைவன் என்பதை உணரலாம்.

பொழிப்புரை

மற்றவர்கள் போன்று வினைகளால் கட்டுண்டு இல்லாமல், பிறப்பினையும் இறப்பினையும் கடந்து, பிறவாமலும் இறக்காமலும் இருப்பதால் பெரும்புகழ் பெற்றவனாக

விளங்குபவன் சிவபெருமான்; பேய்களின் பாடலுக்கு ஏற்ப காட்டினில் நடனம் ஆடுபவன் சிவபெருமான்; தன்னை மறவாது இருக்கும் அடியார்களின் மனதினில் நிலையாக

பொருந்தி இருப்பவன் சிவபெருமான்; உயர்ந்து காணப்படும் மலை போன்று, மற்ற தெய்வங்களை விடவும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவபெருமான், பல வளங்களை

மலை நமக்கு அளிப்பது போன்று, நமக்கு பலவிதங்களிலும் நன்மை புரிகின்றான். பரந்தும் ஆழ்ந்தும் காணப்படும் கடல் தன்னில் மூழ்குவோர்க்கு விலை மதிப்பற்ற

முத்துகளை அளிப்பது போன்று, பெருமானும் தன்னைப் பற்றிய நினைவுகளுடன் ஒன்றும் அடியார்களுக்கு எவரும் பெறாத ஆனந்த பரவச நிலையினை அளிக்கின்றான்.

அவன் காட்டினில் உறைகின்றான். உயிர்களின் வினைத் தொகைகளுக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் விளைவிப்பதால், உயிர்களுக்கு உறவாகவும் பகையாகவும்

கருதப்படுகின்றான். அனைத்து உயிர்களுக்கும் உயிராக விளங்கும் பெருமான், உயிர்களுடன் கலந்து உயிரின் உள்ளேயும், அவ்வாறு கலந்திருந்தாலும் உயிரினின்று

வேறுபட்டு நிற்கும் தன்மையால் உயிரின் வெளியே நிற்பவனாகவும் விளங்குகின்றான். இவ்வாறு விளங்கும் பெருமான் ஒலி வடிவாக நின்று, மற்ற நான்கு

தன்மாத்திரைகளாகவும், ஐம்பூதங்களையும், ஐம்பூதங்களின் கலவையால் ஆன உலகமாகவும் உலகப் பொருட்களாகவும் உள்ளவன் சிவபெருமான். அவன் தேன் நிறைந்த

கொன்றை மலர்களை சூடியவனாக காணப் படுகின்றான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.