விண்ணோர் பரவ நஞ்சுண்டார் போலும் வியன் துருத்தி
வேள்விக்குடியார் போலும்
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரைய
மங்கை அமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய
பரமர் போலும்
திண்ணார் புகார் முத்து அலைக்கும் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே
விளக்கம்
இந்த பாடலில் அப்பர் பிரான் வேள்விக்குடி தலத்தையும் துருத்தியுடன் இணைத்துச் சொல்வதை நாம் உணரலாம். பகற்பொழுதில் துருத்தியில் தங்கும் பெருமான், இரவினில் அருகில் உள்ள வேள்விக்குடி என்ற தலம் சென்றாங்கே உறைவதாக நம்பப்படுகின்றது. இதனால் இரண்டு தலங்களையும் இணைத்துச் சொல்வது வழக்கம், ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய இருவரும் இந்த இரண்டு தலங்களையும் ஒரே பதிகத்தில் (3.90, 7.18) குறிப்பிட்டுள்ளார்கள். ஞான சம்பந்தர் அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனில், பகல் அமர்ந்த பிரான் சேரும் துருத்தி என்றும் இரவினில் உறையும் வேள்விக்குடி என்றும் குறிப்பிடுவதை நாம் உணரலாம். தூறு = புதர்ச் செடிகள். வீறு சேர் = செல்வம் மிகுந்த, நீர்வளம் மற்றும் நிலவளம் மிகுந்த தலம்.
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கொளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண்பிறை புல்கு
சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த
பிரான்
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
பூம்புகார் மற்றும் சாய்க்காடு ஆகிய இரண்டு தலங்களுக்கு இடையே உள்ள அருகாமை கருதி புகார் சாய்க்காடு என்று இந்த தலத்தினை அப்பர் பெருமான் அழைக்கின்றார். ஞானசம்பந்தரும் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (2.41.1) இந்த தலத்தை தண்புகார் சாய்க்காடு என்று அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். புகார் தலம் பல்லவனீச்சரம் என்று தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. கண்=இடுக்கண், துன்பம். சாய்க்காட்டுப் பெருமானின் அடியார்கள், இந்த நிலவுலகத்தில் இருக்கும் நாள் வரை, நோய்கள் ஏதும் அவரை அண்டாது; மனச்சோர்வு, பசி, மற்றைய துன்பங்கள் அவர்களை அணுகாது என்று கூறும் ஞானசம்பந்தர், பிறப்பெடுத்து மீண்டும் இந்த நிலவுலகுக்கு வரும் அவசியம் அவர்களுக்கு இல்லை என்றும், பேரின்பம் அடைவார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் புகழினைக் கற்ற அடியார்கள், மற்றும் கற்றவர்கள் சொல்லக் கேட்ட அடியார்கள், தேவ லோகத்தையும் கடந்த சிவலோகத்தைச் சென்று அடைவார்கள் என்பதால், அவர்கள் விண் புகுவார்கள் என்று கருதாதீர்கள், அதனையும் கடந்த சிவலோகம் சென்று அடைவார்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே விளக்குகின்றார்.
மண்புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே
பொழிப்புரை
தேவர்கள் வேண்டியதால் அவர்களை காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்ட சிவபெருமான், அகன்ற காவிரி நதிக்கரையில் உள்ள துருத்தி மற்றும் வேள்விக்குடி தலங்களில் உறைபவர் ஆவார். அண்ணாமலையில் உறையும் அண்ணலாக விளங்கும் பெருமான், அதியரைய மங்கை தலத்திலும் அமர்ந்துள்ளார். மிகவும் அதிகமான தேனை உண்டதால் களிப்பு மிகுந்து காணப்படும் வண்டுகள் ரீங்காரம் இசைத்து பாடியும் ஆடியும் திரியும் பராய்த்துறை தலத்தில் பொருந்தி எழுந்தருளிய பரமர் சிவபெருமான் ஆவார். மணல் நிறைந்து காணப்படுவதும், கடல் தனது அலைக் கரங்களால் முத்துக்களைக் கொண்டு சேர்க்கும் கடற்கரையினை உடையதும், தெளிந்தும் குளிர்ந்தும் காணப்படும் காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறையும் சிவபெருமான், வேறு எவருடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

