மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும்
தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்றம் உடையார்
போலும்
கோவாய முனி தன் மேல் வந்த கூற்றைக் குரைகழலால்
அன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கு அரியார் போலும் திருச்சாய்க்காட்டு
இனிது உறையும் செல்வர் தாமே
விளக்கம்
மா = குதிரை குதிரை வடிவம் எடுத்துத் தன்னை அழிக்கவந்த கேசி என்ற அரக்கனைக் கொன்ற கண்ணன், அதனால் கேசவன் என்ற பெயரினைப் பெற்றான் என்று பாகவத புராணம் கூறுகின்றது. இந்த பாடலில் திருமாலாகவும் பிரமனாகவும் பெருமான் இருக்கும் நிலை உணர்த்தப்படுகின்றது. மூவராக பெருமான் இருக்கும் நிலை உணர்த்தப்படும் சில தேவாரப் பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வேணுபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.9) இரண்டாவது பாடலில் சம்பந்தர் படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் புரியும் பெருமான் என்று கூறுகின்றார்.
படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படையான் ஊர்
புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.53) முதல் பாடலில் சம்பந்தர், பிரமன், திருமால் மற்றும் ஈசனாக விளங்கும் மூவராய முதலொருவன் என்று குறிப்பிடுகின்றார். மூவராக விளங்கும் பெருமான் அந்த மூவருக்கும் தனி முதல்வனாகவும் விளங்குகின்றான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். ஐம்பூதங்களுடன் இணைந்து இருக்கும் பெருமான், தேவர், அசுரர், சித்தர், அந்தணர் முதலான அனைத்து உயிர்களுடன் இணைந்து இருக்கும் செய்தியும் இங்கே உணர்த்தப்படுகின்றது. கால் = காற்று. எரி = தீ.
தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசனென்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.58) நான்காவது பாடலில் அப்பர் பெருமான் மூவர் உருவாய முதல்வர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல். சிவபெருமான் மீது ஆராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பெருமானை தன்னை வாவா என்று அழைத்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு அழைத்த பெருமான், தன்னை விட்டுவிட்டு சென்றதை குறிப்பிட்டு தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய
முதல்வர் இந்நாள்
கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார் குளிர்
கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத்
தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே
மன்னினாரே
பொழிப்புரை
குதிரை உருவத்தில் வந்த கேசி என்ற அசுரனைக் கொன்று கேசவன் என்ற பெயரினைப் பெற்று மகிழ்ந்த கண்ணனாக அவதாரம் எடுத்த திருமாலாகவும், தாமரை மலர் மேல் உறையும் பிரமனாகவும் இருப்பவர் சிவபெருமான் ஆவார். மூப்பு அடையாத தோற்றத்தில் இருக்கும் பெருமான் அந்த பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முதல்வராகத் திகழ்கின்றார். மிகவும் பழைமையான மலை என்று சொல்லப்படும் முதுகுன்றத்தைத் தனது உறைவிடமாக கொண்டவர் சிவபெருமான். முனிவர்களுக்குத் தலைவராக விளங்கிய மார்க்கண்டேயனின் மேல் பாய்ந்து வந்த கூற்றுவனை, கழல் அணிந்த தனது திருவடியால் உதைத்து அழித்தவர் சிவபெருமான். தேவர்களுக்கும் தேவர்களின் தலைவராக விளங்கும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருக்கும் அரியவராக விளங்கிய பெருமான், சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறையும் சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

