வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

48. வானத்து இளமதியும் பாம்பும் - பாடல் 7

ஐந்து பூதங்களாகவும் இருப்பவர் சிவபெருமான்.

Updated On :4 ஜனவரி 2017, 11:57 am

கடுவெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து
         என்றும் இருப்பார் போலும்
இடிகுரல் வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி
         இருந்தார் போலும்
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்
பாண்டிக்கொடுமுடியும் தம்மூர் போலும்
செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே

விளக்கம்

காரோணத்து என்றும் இருப்பார் என்று அப்பர் பிரான் காரோணம் தலத்தினை குறிப்பிடுகின்றார். காரோணம் என்ற பெயருடன் தமிழ்நாட்டில் மூன்று கோயில்கள் உள்ளன, நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம் மற்றும் கச்சிக் காரோணம் என்பன அவை. நாகைக் காரோணம் மற்றும் குடந்தைக் காரோணம் பாடல் பெற்ற தலங்கள். காய ஆரோகணம் என்ற வடமொழிச் சொல் காரோணம் என்று திரிந்ததாக கூறுவார்கள். காயம் என்றால் உடல். ஆரோஹணம் என்றால் தழுவிக்கொள்ளுதல் என்று பொருள். பல தலங்களை இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு வரும் அப்பர் பிரான், காரோணம் என்று இந்த இரண்டு தலங்களையும் குறிப்பிடுகின்றார் போலும்.

குடந்தை சோமேசர் ஆலயம் தேவாரப் பதிகங்களில் குடந்தைக் காரோணம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தலத்து இறைவைனை இராமபிரான் வழிபட்டதாக தலபுராணம் கூறுகின்றது. இந்த தலத்து இறைவனின் திருநாமம் காயாரோஹணர் என்பதாகும். இராமபிரானும் இலக்குவனும் சீதையை தேடிக்கொண்டு சென்றபோது இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டனர். இராவணனுடன் செய்யப்போகும் சண்டையில் தான் வெற்றிபெறுவதற்காக, தன்னுடைய உடலில் சிவனின் அம்சம் இருக்க வேண்டும் என்று இராமபிரான் விரும்பியதாகவும், அதற்காக சிவபிரானை வேண்டி பின்னர் சிவபிரானின் உடலை தழுவிக்கொள்ளவே சிவபிரானுக்கு காயா ரோஹணர் என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் சிவபெருமானது உடலில் சென்று அடங்குவதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.

புண்டரீகர் என்ற முனிவர் தான் முக்தி அடைய வேண்டி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அவரது தவத்திற்கு இரங்கிய பெருமான், முனிவரின் தவத்தினை மெச்சி, அவரைத் தன்னுடன் அணைத்துக் கொண்டார். அதனால் நாகைக் காரோணம் தலத்து இறைவனுக்கு காயாரோஹணர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். முனிவருக்கு முக்தியும் கிட்டியது. இந்த பெயருக்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகின்றது. முற்றூழி காலத்தில், அனைத்து உடல்களும் இறந்துவிடுகின்றன. அப்போது இறந்த திருமால் மற்றும் பிரமனது உடல்களைத் தனது தோளில் வைத்துக்கொண்டு நடனம் ஆடும் கங்காளராக பெருமான் திகழ்வார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த தருணத்தில், பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல், பெருமானின் தோள்களில் பொருந்துவதால் காயாரோஹணர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். காஞ்சிப் புராணத்தில் காயாரோகணப் படலம் என்றே ஒரு படலம் உள்ளது.

காரோணர் என்று குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, இறைவன் தேவியைத் தழுவிக்கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததுபோலும். கச்சி ஏகம்பம் தலத்தில், தழுவக் குழைந்த நாதராக இறைவன் இருப்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் ஏகம்பம் மேவி இருந்தார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றினில், சம்பந்தர் (1.105) ஒப்பில்லாதபடி உயர்ந்த அழகினை உடைய திருமேனி கொண்டவன் சிவபெருமான் என்ற பொருள்பட, படிபட்ட கோலத்தன் என்று குறிப்பிடுகின்றார். காண்போரை சொக்கவைக்கும் சொக்கனாகவும், சுந்தரனாகவும் திகழும் பெருமானின் அழகு, அதற்கு ஒப்பு ஒன்றும் இல்லாத நிலையில் உயர்ந்த அழகுடன் விளங்குவதில் வியப்பு என்ன இருக்கமுடியும். முத்து விதானம் என்று தொடங்கும் பதிகம் மூலம் (4.21), ஆதிரை நாள் விழாவின் சிறப்பினை அப்பர் பிரான் வாயிலாக அறிந்த, பெருமானை ஆதிரையன் என்று திருஞானசம்பந்தர் அழைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். கூடலர் = வேதநெறியுடன், சிவநெறியுடன் கூடாத திரிபுரத்து அரக்கார்கள்.

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக்
கூடலர் மூவெயிலும் எரி உண்ண கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே

ஒப்புமை இல்லாத அழகினை உடையவள் அன்னை பார்வதி தேவி என்று உணர்த்தும் வண்ணம், படி எழுதலாகாத மங்கை என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல், ஆலவாய் (மதுரை) தலத்தின் மீது அருளிய (6.19) பதிகத்தின் பாடலாகும். மூவன் = முற்பட்டவன். மூவா மேனி = மூப்பு அடையாத மேனி. பாவன் = எங்கும் பரந்து காணப்படும் தன்மை உடையவன். மேவன் = பொருந்தி இருப்பவன். பெருமான் நஞ்சு உண்டதால் தான் அமரர்கள் அமுதத்தினை அருந்தும் வாய்ப்பினைப் பெற்றார்கள். எனவே பெருமான்தான் அமுதம் ஈந்தவன் என்று கொள்வது பொருத்தமே.

மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூவுலகும்
                    தானே எங்கும்
பாவனைப் பாவம் அறுப்பானை தன்னைப் படி எழுதலாகா
                       மங்கையோடு
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு
                உண்டு அமுதம் ஈந்த
தேவனைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்
                பெற்று உய்ந்தேனே

திருவாசகம் ஆசைப்பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில், மணிவாசகர் ஒப்புமை இல்லாத பரம்பரன் என்று குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கடி = மிகுந்த. செடி ஆர் = கேடுகள் நிறைந்த, குற்றங்கள் நிறைந்த. யாக்கை = உடல். கூறுபாடு அற வீசி = முற்றிலும் கழித்து. திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவாக வந்து பாத தீட்சை அளித்து தன்னை ஆட்கொண்ட, இறைவன் சிறிது நேரம் கழித்து மறைந்துவிட்டதை நினைத்துப்பார்க்கும் மணிவாசகர், இறைவனுடன் நிலையாக கலந்திருக்கும் நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். இறைவன் மட்டும் மறையவில்லை. அவருடன் இருந்த அடியார்களும் மறைந்துவிடுகின்றார்கள். தனது உடல்தான், இறைவனுடன் தான் சேர்ந்து இருப்பதற்கு தடையாக இருந்தது என்பதை உணர்கின்றார். குற்றங்கள் நிறைந்த அந்த உடலினை உதறிவிட்டு, தனது ஆன்மா சிவபுர நகர் சென்று அடைந்து இறைவனின் ஒளி வீசும் திருமேனியை கண்ணாரக் காண வேண்டும் என்றும் அவனுடன் காட்சி அளித்த பழ அடியார்களுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று மணிவாசகர் விரும்புகின்றார். அந்த விருப்பத்தை உணர்த்தும் பாடல் இது.

செடி ஆர் யாக்கை திறம் அற வீசிச் சிவபுரநகர் புக்குக்
கடி ஆர் சோதி கண்டு கொண்டு என் கண் இணை களி கூற
படி தான் இல்லாப் பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே    

கடுவெளி = பெரிய ஆகாயம். இடிகுரல் வாய் பூதம் = இடியினைப் போன்று வலிமையான குரலினைக் கொண்ட பூதங்கள். படி = ஒப்பு. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக சிவபெருமான் திகழும் நிலை பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. செடி = துன்பம். செடி படு = துன்பப்படுவதற்கு காரணமான. நமது ஆன்மா படும் துன்பங்களுக்கு மூல காரணம், நாம் எடுத்த இந்த பிறவியும், தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலைதானே. எனவே நமது ஆன்மா இந்த துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்றால், இந்த பிறப்பிறப்பு நோயிலிருந்து விடுபட வேண்டும். இந்த பிறப்பிறப்புச் சுழற்சியைத்தான் செடிபடு நோய் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

பெரிய ஆகாயத்தோடு சேர்த்து ஐந்து பூதங்களாகவும் இருப்பவர் சிவபெருமான். அவர் காரோணம் என்று அழைக்கப்படும் தலங்களில் நிலையாக உறைகின்றார். இடி இடித்தல் போன்று வலிமையான குரலினை உடைய பூதப் படையினை உடையவராக திகழும் பெருமான், கச்சி ஏகம்பம் தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் குடிகொண்டுள்ளார். அழகிலும் ஆற்றலிலும் தனக்கு ஒப்பார் எவரும் இல்லாத பெருமான் திருப்பாண்டிக் கொடுமுடியைத் தனது ஊராகக் கொண்டுள்ளார். அடியார்களின் துன்பங்களுக்கு மூல காரணமான பிறவி நோயினை தீர்த்து முக்தி அளிக்க வல்லவர் சிவபெருமான். இத்தகைய அருமையான பண்புகளை உடைய பெருமான் சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றார், அவர் வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.