அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

48. வானத்து இளமதியும் பாம்பும் - பாடல் 8

விலை மதிப்பற்ற எலும்பு மாலைகளை

Updated On :7 ஜனவரி 2017, 6:30 pm

விலையிலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண்ணீறு
        மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும் மாற்பேறு காப்பாய்
        மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்
     சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்
சிலையினார் செங்கண் அரவர் போலும் திருச்சாய்க்காட்டு
        இனிது உறையும் செல்வர் தாமே
 

விளக்கம்

விலையிலா ஆரம் என்று இறைவன் அணிந்துள்ள எலும்பு மாலையினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். விலையில்லாத மலிவான மாலை என்று ஒரு பொருளும் எவரும் விலை சொல்லமுடியாத, விலை மதிப்பில்லாத மாலை என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். ஊழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் அழிந்தபின்னர், எஞ்சியிருந்த எலும்புகளை அணிந்து கொண்டு, தான் ஒருவனே அழிவில்லாதவன் என்பதை உணர்த்தும் கோலம்தான் எலும்பு மாலை அணிந்த கோலமாகும். திருமால் பிரமன் உள்ளிட்ட தேவர்களின் உடலில் இருந்த எலும்புகளுக்கு விலை எவர் சொல்ல முடியும். இறந்த உடலின் எலும்புகளை மட்டுமா இறைவன் அணிந்துகொண்டிருக்கின்றார். அந்த உடல்கள் எரிந்த சாம்பலையும் தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டு காட்சி அளிப்பவர் சிவபெருமான். இவ்வாறு எலும்பினை அணிந்துகொண்டு, மயானத்து சாம்பலை பூசிக்கொண்டு இருப்பவர், மற்றவர்களிடமிருந்து முற்றும் மாறுபட்டவர்தானே, அதனால்தான், அப்பர் பிரான் இந்த பாடலில், மாறுபட்டவர் என்ற பொருளை உணர்த்தும் விகிர்தர் என்ற சொல்லால் இறைவனை குறிப்பிடுகின்றார். மலையினார் = மலையில் பிறந்து வளர்ந்த. காப்பு = உறைவிடம். தொலைவிலார் = தொலைவு இல்லாதவர். தோல்வி அடைந்து தொலைந்துபோகாத நிலை.

பொழிப்புரை

மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, விலை மதிப்பற்ற எலும்பு மாலைகளை அணிந்தும் தனது உடலில் மயானத்து சாம்பலைப் பூசியும் விகிர்தனாக காட்சி அளிக்கும் சிவபெருமான் மலையினில் பிறந்து வளர்ந்த உமையம்மையின் கணவராவார். அவர் மாற்பேறு தலத்தினைத் தனது உறைவிடமாக கொண்டுள்ளார். எவரிடமும் தோற்காமல் அனைவரையும் அந்நாள் வரை வெற்றி கொண்டிருந்த, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்த சிவபெருமான், சோற்றுத்துறை மற்றும் துருத்தி ஆகிய தலங்களில் விருபத்துடன் உறைகின்றார். அவர் மேரு மலையினை வில்லாக வளைத்து, கோபம் கொண்டு சிவந்த கண்களை உடைய வாசுகி பாம்பினை நாணாகப் பொருத்திய வல்லமை படைத்தவர் ஆவார். இவ்வாறு பல அரிய பண்புகளை உடைய பெருமான் சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறைபவராகவும் வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவராகவும் விளங்குபவர் சிவபெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.