உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கம் செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும்
நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும்
பிறைப் பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண்
ஆண் உருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட்கு இனியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே
விளக்கம்
பல பதிகங்களைக் குறிப்பிடும் அப்பர் பிரான் இந்த பதிகத்தின் கடைப் பாடலில், கயிலைப் பதியை, ஒவ்வொரு சைவனும் தனது ஆன்மா சென்று அடைய வேண்டும் என்று விரும்பும் இடத்தினை, குறிப்பிடுகின்றார். உறைப்பு = எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அதனைத் தொடர்ந்து செய்யும் தன்மை.
பொழிப்புரை
தான் எடுக்கும் காரியத்தை, தளர்வு ஏதும் அடையாமல் தொடர்ந்து செய்யும் தன்மையை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலை தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி, மிகுந்த ஊக்கத்துடன் கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்தபோது, அந்த மலையில் ஏற்பட்ட அசைவினால் பார்வதி தேவி மிகுந்த அச்சம் கொண்டாள். அன்னை அச்சமடைந்ததை உணர்ந்த பெருமான், தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்த, அந்த அழுத்தத்தினை தாங்கமுடியாமல் அந்நாள் வரை வெற்றியால் நிறைந்திருந்த அரக்கனின் வலிமையான இருபது தோள்களும் பத்து தலைகளும் மண்ணோடு மண்ணாக ஒன்றிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான், மலங்கள் தன்னைச் சாராமல் இருக்கும் தன்மை உடையவர்; அவர், தேய்ந்து பிளவுபட்ட நிலையில் இருந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்று, சந்திரனை அழியாமல் காத்த பெருமகனார் ஆவார்; அம்மையைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டதால், பெண் உருவமும் ஆண் உருவமும் இணைந்த உருவத்தினை உடைய அவர், சிறந்த அடியார்களுக்கு மிகவும் இனியவராக காணப்படுகின்றார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றார். அவர் வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.
முடிவுரை
இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் பல தலங்கள் குறிப்பிடப்படுகின்றன. பதிகத்தின் இறுதிப் பாடலில் கயிலாய மலையினை குறிப்பிடுவது போன்று உள்ள வேறு சில பதிகங்களை நாம் இங்கே காணலாம். தில்லைச் சிற்றம்பலமும் என்று தொடங்கும் க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தின் (6.70) முதல் பாடல் தில்லைத் தலத்தின் பெயருடன் தொடங்குகின்றது. பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் கயிலாய நாதனைக் காணலாமே என்று முடிவது போன்று, பதிகத்தின் கடைப்பாடலும் அமைக்கப் பெற்று, கயிலாயம் தலத்தைப் பற்றிய குறிப்புடன் முடிகின்றது.
திருவதிகை தலத்தின் மீது அருளப்பட்ட காப்புத் திருத்தாண்டகம் (6.07) என்ற பதிகமும், தன்னுடைய முதல் பாடலில், பல தலங்களுடன் தில்லைத் தலத்தையும் குறிப்பிடுகின்றது. பதிகத்தின் கடைப் பாடல் கயிலாயம் தம்முடைய காப்புக்களே என்று கயிலாயம் பற்றிய குறிப்புடன் முடிகின்றது. காப்பு என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள். கோடிகா தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகமும் (6.81) பல்வேறு தலங்களை பதிகத்தில் குறிப்பிட்டாலும், பதிகத்தின் கடைப் பாடல் (பதிகத்தின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்கள் சிதைந்துவிட்டன) கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் என்று கயிலாயத்தை குறிப்பிடுகின்றது. அப்பர் பிரான் தனது வாழ்நாளில் இறுதியாக பாடிய எண்ணுகேன் என்சொல்லி என்று தொடங்கும் பதிகமும் (6.99) பல தலங்களை குறிப்பிட்டாலும் பதிகத்தின் இறுதிப் பாடலில் பொருவரையாய் உன்னடிக்கே போதுகின்றேன் என்று கயிலாயம் நோக்கித் தனது ஆன்மா பயணத்தைத் தொடங்கியதை குறிப்பிடும் வகையில், கயிலாயம் தலத்தினை குறிப்பிடுகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

