(திருமணஞ்சேரி – குறுந்தொகை)
முன்னுரை
இந்நாளில் குத்தாலம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம்) என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாட்களில் துருத்தி என்று அழைக்கப்பட்டது. துருத்தி தலத்திற்கு பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருமணஞ்சேரி. இந்த தலத்தில் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் நமக்கு கிடைத்துள்ளது. .எனவே துருத்தி சென்ற அப்பர் பிரான், அங்கிருந்து திருமணஞ்சேரி சென்றிருக்க வேண்டும். இந்த தலத்திற்கு அப்பர் பிரான் சென்றதாக, சேக்கிழார் பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. எனினும் துருத்தி தலம் சென்றதை குறிப்பிடும் பாடலில், பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே, என்று குறிப்பிடுவதால் துருத்தியிலிருந்து கோடிகா செல்லும் வழியில் இந்த தலமும் சென்றார் என்று நாம் உணரமுடிகின்றது..
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை
உயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி
வேள்விக்குடி எதிர்கொள்பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி
பலவும் பணிந்து போந்தே
ஆ உறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து
ஆவடு தண் துறையைச் சார்ந்தார்
பாடல் 1
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரி எம்
வட்ட வார் சடையார் வண்ணம் வாழ்த்துமே
விளக்கம்
பட்ட நெற்றியர் = பட்டம் அணிந்த நெற்றியினை உடையவர். வட்ட வார் சடை = வட்டமாக கட்டிய நீண்ட சடை. வண்ணம் = தன்மை. சிட்டர் = சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். உயர்ந்தவர்கள், மேன்மையானவர்கள் என்று பொருள். இந்த பாடலில், நாள்தோறும் நடனம் ஆடுபவர் என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமான், இடைவிடாது நடனம் ஆடுவதை குறிக்கும் வண்ணம் நடராஜப் பெருமானின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். அவரது கச்சின் ஒரு முனையும், சடை முடிகளும், பெருமானின் திருவுருவத்தைத் சுற்றியுள்ள திருவாசியைத் தொடுவதை நாம் காணலாம். எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தான், கச்சும் சடைமுடிகளும் இவ்வாறு காணப்படும். அல்லையேல் அவை இரண்டும், புவியீர்ப்பு விதியின்படி, தொங்கிக்கொண்டுதானே இருக்க வேண்டும். பெருமான் இவ்வாறு தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டே இருப்பதால் தான், உலகமும், உலகப் பொருட்களும், உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இயங்குகின்றன என்று கூறுவார்கள். உலகப் பொருட்கள் அழிந்து, உலகமும் அனைத்து உயிர்களும் பெருமானிடம் ஒடுங்கிய நிலையில், அதாவது முற்றூழிக் காலத்தில், பெருமான் ஆடும் நடனம் சங்காரக் கூத்து என்று அழைக்கப்படுகின்றது.
திருமூலர், திருமந்திர நூலின் ஒன்பதாம் தந்திரத்தில் திருக்கூத்து தரிசனம் என்ற தரிசனம் என்ற தலைப்பின் கீழ் எண்பத்திரண்டு பாடல்களில் பெருமானின் கூத்தினை விவரிக்கின்றார் இவற்றில் இரண்டு பாடல்களை நாம் இங்கே காண்போம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது பழமொழி. இந்த பழமொழி அவன் அசையாவிட்டால் ஏதும் அசையாது என்பதை உணர்த்துவதுடன், அவன் அசைந்தால் அனைத்தும் அசையும் என்பதையும், அனைத்தையும் அசைய வேண்டி அவன் அசைகின்றான், அதாவது நடனம் ஆடுகின்றான் என்பதையும் உணர்த்துகின்றது. இதனை உணர்த்தும் திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வேதங்கள் ஆட மிகும் ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதன் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே
பெருமான் நாள்தோறும் நடனம் ஆடுகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறியதுபோல், திருமூலர் நாள்தோறும் பெருமான் அம்பலத்தில் கூத்து ஆடுகின்றார் என்று சொல்லும் பாடலை நாம் இங்கே காண்போம். கனகாசலம் = மேரு மலை. மேரு மலையில் தேவர்களுக்காக ஆடிய நடனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. கூளி = பேய்கள். சர்வ சங்கார காலத்தில் உடலற்ற உயிர்களைத் தனது தோளில் வைத்துக்கொண்டு கங்காளராய் நடனம் ஆடுவதை, அறியாதவர்கள் பேய்களோடு நடனம் ஆடுவதாக கருதுகின்றார்கள் என்று விளக்கம் அளித்து, கூளி நடனம் என்பது சர்வ சங்கார நடனம் என்று உரை ஆசிரியர்கள் விளக்குகின்றார்கள். பஞ்சபூதங்களையும் இயக்கும் வண்ணம், எவரும் அறியாதவாறு அவற்றுடன் கலந்திருந்து நடமாடுவதும் இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றது. அந்த நாதன்தான் நாளும் அம்பலத்தே ஆடுகின்றான் என்று திருமூலர் இந்த பாடலை முடிக்கின்றார்.
காளியோடு ஆடிக் கனகாசலத்து ஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி
நீடிய நீர்த் தீக் கால் நீள் வானத்தே ஆடி
நாளுற அம்பலத்தே ஆடி ஆடும் நாதனே
பெருமானின் கூத்தின் சிறப்பு கருதி, அப்பர் பிரான் அதிசயம் போல் நின்று அனலெரி ஆடுமாறே என்று தில்லைப் பதிகத்தின் (4.22) கடைப் பாடலில் கூறுகின்றார். நெதியன் = செல்வன். பெருமானின் நடனத்தைக் கண்டு வியக்காதவர் ஆரேனும் உளரோ.
மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீள் இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனலெரி ஆடுமாறே
சிவபெருமான் ஆடும் நடனத்தை ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் உண்மை விளக்கம் எனப்படும் சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் கூறுகின்றார். ஆன்மாக்கள் உலக இன்பங்களை நுகரும் பொருட்டு நடத்தப்படும் கூத்தினை ஊன நடனம் என்றும், ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு உதவி செய்யும் நடனத்தை ஞான நடனம் என்றும் கூறுகின்றார். பெருமானின் ஒரே நடனம் இந்த இரண்டு வகைகளில் செயல்படுவதால், நடனம் விளைவிக்கும் பயன் கருதி ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் கருதப்படுகின்றது.
படைத்தல் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நாதத்தை எழுப்பும் உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், அபயம் காட்டும் வலது திருக்கரம் காத்தல் தொழிலையும், தீச்சுடர் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவார்கள். இந்த ஐந்து தொழில்களும் உயிர் தனது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு உடலுடன் பொருந்தி, வினைகளின் விளைவால் ஏற்படும் இன்பதுன்பங்களை அனுபவித்து, வினைகளை கழித்துக் கொள்ள வழி வகுப்பதால் இந்த நடனம் ஊன நடனம் எனப்படுகின்றது. இதனை விளக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திதி ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். அங்கி = அக்னி. சங்காரம் என்றால் அழிக்கும் தொழில்.
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா
ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்பதத்தே நாடு
இந்த நடனம் எவ்வாறு ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு வழி வகுத்து, ஞான நடனமாக திகழ்கின்றது என்பதை அடுத்த பாடலில் ஆசிரியர் விளக்குகின்றார். உடுக்கை ஏந்திய திருக்கை மாயா மலத்தை உதறுகின்றது; தீச்சுடர் ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தை சுட்டு எரிக்கின்றது; ஊன்றிய திருவடி ஆணவ மலத்தின் வலிமையை அடக்கி அதை அழுத்தி செயலிழக்கச் செய்கின்றது; இவ்வாறு மலங்களின் பிடியிலிருந்த விடுபட்ட ஆன்மாவை, தூக்கிய திருவடி பேரானந்தத்தை அருள, அபயகரம் அந்த ஆன்மாவை பேரின்பத்தில் அழுத்துகின்றது. இவ்வாறு ஆன்மாவை பேரானந்தத்தில் ஆழ்த்தும் செயல் ஞான நடனம் என்று கருதப்படுகின்றது. சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபிரானையும், வ என்ற எழுத்து அவனது அருட்சக்தியாகிய அம்மையையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதான மலத்தையும் ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கும். ய என்று உணர்த்தப்படும் ஆன்மா, சிவ எனப்படும் ஞான நடனத்தையும், நம எனப்படும் ஊன நடனத்தையும் நுகர்வதாக, பஞ்சாக்கர மந்திரம் உணர்த்துவதாக கூறுவார்கள்.
மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்
பொழிப்புரை
பட்டம் எனப்படும் அணிகலனை அணிந்த நெற்றியரும், மற்ற விலங்குகளின் மீதும் மனிதர்கள் மீதும் பாயும் இயல்பினை உடைய புலியின் தோலை ஆடையாக அணிந்தவரும், நாள்தோறும் நடனம் புரிபவரும், நாள்தோறும் கீதங்கள் பாடுபவரும் ஆகிய சிவபெருமான், தங்களது பண்பினால் உயர்ந்தவர்கள் வாழ்கின்றதும் செல்வம் நிறைந்தும் ஆகிய மணஞ்சேரி தலத்தில் உறைகின்றார். வட்டமாகக் கட்டியதும் நீண்டதுமான சடையை உடைய பெருமானின் தன்மைகளை நாம் அனைவரும் வாழ்த்துவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

