(கஞ்சனூர் – திருத்தாண்டகம்)
முன்னுரை
திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள இந்த தலத்திற்கு அப்பர் பிரான் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. எனினும் அருகிலிருக்கும் பல தலங்கள் அப்பர் பிரான் சென்றார், என்று பல இடங்களில் காணப்படும் குறிப்பு இந்த தலத்தையும் குறிப்பதாக நாம் கொள்ள வேண்டும். தலத்து இறைவனின் பெயர் அக்னீஸ்வரர். தலத்தின் இறைவியின் பெயர் கற்பகநாயகி. கற்பக நாயகி வழிபட்டு போற்றும் இறைவனை கற்பகநாதன் (இராமநாதன், சுவாமிநாதன்) என்று கூறலாம் அல்லவா. இந்த பெயரைத்தான் சுருக்கமாக கற்பகம் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.
சைவ சித்தாந்தத்தின் கொள்கையின் படி, சிவம் வேறு சக்தி வேறு என்று சொல்வதில்லை. சிவத்தின் அருள் வடிவமாகவே சக்தி கருதப்படுகின்றாள். சிவபிரானின் கருணையாக உமையம்மை செயல்பட்டு உயிர்களுக்கு வீடுபேற்றினை தனக்கு அளித்ததாக திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிரதி சயானந்தம் = எல்லை இல்லாத இன்பம். திருவாவடுதுறை கோயிலில் உள்ள அத்தி மரத்தின் கீழே அமர்ந்து திருமூலர் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகின்றது. உமையம்மை, தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்ததாவும் திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார்.
நேரிழை ஆவாள் நிரதி சயானந்தப்
பேருடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே
சிவம் வேறு சக்தி வேறு என்று பிரிக்க முடியாதபடி ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அவர்கள் விளங்குகின்றார்கள். இந்த தன்மையை மணிவாசகர் மிகவும் அழகாக திருவாசகம் கோயில் மூத்த திருப்பதிகத்தின் முதல் பாடலில் கூறுகின்றார். சிவத்தின் உள்ளே சக்தி இருப்பதாகவும். சக்தியின் உள்ளே சிவம் இருப்பதகாவும் அவர் கூறும் பாடல் இது. உடையாள் = எல்லா உயிர்களையும் எல்லாப் பொருட்களையும் தனக்கு அடிமையாகவும் உடைமையாகவும் கொண்டுள்ள உமையம்மை.
உடையாள் உன் தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவில் நீ
இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடவுள் இருக்கும் அருளைப் புரியாய்
பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன் நின்றே
ஐந்து தொழில்களையும் புரிந்து உயிர்கள் அனைத்தையும் காத்து நிற்கும் பெருமான், அத்தகைய தொழில்கள் செய்யும் ஆற்றலை தன்னுள்ளே அடக்கி தொழிலேதும் செய்யாத நிலையில், சுத்த அறிவே வடிவாக, புறத்தே நோக்காது இருக்கும் நிலையில் சக்தி சிவனுள்ளே அடங்கி அதன் வசமாக உள்ளது. ஐந்து தொழில்களையும் புரிவதற்கு திருவுள்ளம் கொண்டு சிவபெருமான் இருக்கும் நிலையில், சக்தி செயல்படத் தொடங்கும் நிலையில், சக்தியின் வசமாக சிவம் இருக்கும். இந்த நிலையைத் தொட்டுதான் சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்ற பழமொழி வந்தது போலும். இந்த நிலை தான் மேற்கண்ட பாடலில், உடையாள் உன் தன் நடுவு இருக்கும் என்றும் உடையாள் நடுவில் நீ இருத்தி என்றும் மணிவாசகரால் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இந்த பாடல் இருதலை மாணிக்கம் எனப்படும், சிவசிவ என்ற பஞ்சாக்கர மந்திரத்தை உணர்த்துவதாகவும் கருதப்படுகின்றது. சி என்ற எழுத்து பெருமானையும் வ என்ற எழுத்து அவனது அருள்சக்தியாகிய அம்மையையும் குறிக்கும் என்பதை நாம் அறிவோம். மேற்கண்ட மந்திரத்தில் வகாரம், இரண்டு சிகாரங்களுக்கு இடையில் இருப்பதையும், சிகாரம் இரண்டு வகாரங்களுக்கு இடையில் இருப்பதையும் நாம் உணரலாம். இவர்களின் இருவரின் நடுவில் ய எனப்படும் ஆன்மா இருக்க நினைக்கும் நிலையை சிவயசிவ என்ற மந்திரம் உணர்த்துகின்றது. அவ்வாறு சிவம் சக்தி இருவரின் மத்தியில் தான் இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை மணிவாசகர் இந்த பாடலில் தெரிவிக்கின்றார். அந்த நிலையினை அடைவதற்கு முதற்படியாக அடியார்களின் நடுவில் தான் இருக்குமாறு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று அடிகளார் வேண்டுவதையும் நாம் இங்கே உணரலாம்
.
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.08.) உயிர்களின்பால் தான் கொண்டுள்ள கருணையின் காரணமாக உயிர்களுக்கு அருள் புரியும் வண்ணம், உமை அம்மையாக வருவதும் சிவம்தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் சிவபெருமான் அனைத்துப் பொருட்கள் மற்றும் உயிர்களுமாக இருக்கும் தன்மையும், அந்த பொருட்களுடன் கலந்தும், அந்த பொருட்களுடன் வேறுபட்டு அவைகளுக்கு மேலாக உள்ள தன்மையும் குறிப்பிடப்படுகின்றது. இதே தன்மை மணிவாசகரால், யாவையுமாய் மற்று அல்லையுமாய் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. தெரிதல் = ஆராய்ந்து பார்த்தல். ஆரம் = மாலை. எரி அரவு = தீ போன்று கொடிய நஞ்சு உடைய பாம்பு.
விரிகதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேத விதி அல்லர் விண்ணு நிலனும்
திரிதரு வாயு அல்லர் செறுதீயும் அல்லர் தெளிநீரும் அல்லர் தெரியில்
அரி தரு கண்ணியாளை ஒரு பாகமாக அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே
இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களின் மகுடமாக, அப்பர் பிரான் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன் என்று பாடுவதை நாம் உணரலாம். இவ்வாறு இறைவனை இறைவியுடன் இணைத்து அப்பர் பிரான் பாடிய பதிகம் இது ஒன்றுன். தான் கண்ட பொருள்களில் எல்லாம் இறைவனும் இறைவியும் இணைந்து நின்ற காட்சியைத் தான் கண்டதை மாதர் பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் திருவையாறுப் பதிகத்தின் (4.03) அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் கூறுகின்றார். எனவே மேற்கண்ட விளக்கத்தின் பின்னணியில், இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் வரும் கற்பகம் என்ற சொல், அப்பர் பெருமான் கற்பகம் என்று அழைக்கப்படும் தலத்தின் இறைவியை சிவமாகக் கண்டதே என்று நாம் கொள்ளலாம்.
பாடல் 1
மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர்க்
கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால்வேதம்
ஆறங்கம் ஆயினானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை அயன்
திருமால் ஆனானை அனலோன் போற்றும்
காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
விளக்கம்
இந்த பாடலில் அக்னி தேவன் இறைவனைப் போற்றிய செயல் குறிப்பிடப்படுகின்றது. அக்னி போற்றியதை உணர்த்தும் முகமாக தலத்து இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப் படுவதை நாம் காண்கின்றோம். வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகளை, மற்ற தேவர்களின் சார்பாக அக்னி பெறுவதாக வேதங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆகுதிகளைப் பெறும் அக்னி, ஒரு முறை அளவு கடந்த நெய்யினையும் சேர்த்து உண்டதால், அவனுக்கு சோகை நோய் ஏற்பட்டது. இந்த நோயினை போக்கிக்கொள்ள, அக்னி இந்த தலத்தில் சிவபெருமானை வழிபட்டார் என்பது தல வரலாறு.
மூன்று சுடர்க் கண்ணினான் என்று, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி இறைவனின் கண்களாக இருக்கும் நிலை இந்த பாடலில் கூறப்படுகின்றது. சேரமான் பெருமாள் நாயனார் தான் அருளிய பொன்வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் பத்தொன்பதாவது பாடலில் (பதினோராம் திருமுறை) சூரியன் சந்திரன் அக்னி ஆகியோர் பெருமானது மூன்று கண்களாக இருப்பதாக கூறுகின்றார். பெருமான் பால் அளவற்ற காதல் கொண்டு, எப்போதும் அவனை நினைத்து ஏங்கி தனது உடலின் நிறம் கெட உடல் இளைத்து வாடும் தலைவியின் தாய், எட்டாக் கனியான பெருமானை நினைத்து தனது மகள் ஏங்குவது அறிவற்ற செயல் என்று கூறும் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். ஏன் பெருமானை எட்டாக்கனியாக தலைவியின் தாய் கருதுகின்றாள் என்பதற்கு விடையாக பெருமானின் உயர்ந்த நிலை இந்த பாடலில் கூறப்படுகின்றது. நிலவுலகம் அவனது திருப்பாதங்கள்; சூரியன், சந்திரன், அக்னி அவனது சுடர் விடும் மூன்று நயனங்கள்; காற்று (பவனம், பவனம் என்ற சொல் பாவனம் என நீண்டது) அவனது உயிர் மூச்சு; பொங்குகின்ற அலைகளைக் கொண்டு எப்போதும் ஆரவாரத்துடன் இருக்கும் கடல் அவனது உடை (ஓதம் = கடல் அலைகள் எழுப்பும் ஒலி); வானத்தின் உச்சி (முகடு) அவனது தலை; எங்கும் பரந்துள்ள வானமே அவனது உடல்; வேதங்கள் அவனது வாய் (முகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு வாய் என்று பொருள்); திசைகளே தோள்கள்; உலகில் வழங்கும் பல வகையான மொழிகளே அவன் பாடும் பாட்டு என்று பெருமானின் எங்கும் பரந்து விரிந்து நிற்கும் உருவத்தை குறிப்பிடும் தாய். எவ்வாறு அந்த உயர்ந்த நிலையில் உள்ள பெருமானை தனது மகள் அடைய முடியும் என்று கவலை கொள்கின்றாள். எனவே தான் தனது மகள் தனது காதலில் தோல்வியைத் தழுவுவாள் என்று அவள் கருதுவதாக பாடல் முடிகின்றது.
பாதம் புவனி சுடர் நயனம் பாவனம் உயிர்ப்பு ஓங்கு
ஓதம் உடுக்கை உயர் வான் முடி விசும்பே உடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதம் என்ன
போதம் இவர்கோர் மணி நிறம் தோற்பது பூங்கொடியே
இறைவனின் மூன்று கண்களை சூரியன், சந்திரன், அக்னிக்கு ஒப்பிட்டு காரைக்கால் அம்மையார் பாடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (அற்புதத் திருவந்தாதி - பதினோராம் திருமுறை). நீண்டு வளரும் தீச்சுடர், குளிர்ந்த சந்திரன், தனது கதிர்களால் வெப்பத்தை உண்டாக்கிச் சுடும் சூரியன் என்று மூன்று சுடர்களை குறிப்பிடுகின்றார். ஆலுதல் = அசைதல். பெருமான் முப்புரங்களை விழித்தே அழித்தான் என்று அம்மையார் இந்த பாடலில் கூறுகின்றார்.
நெடிதாய பொங்கு எரியும் தண்மதியும் நேரே
கடிதாம் சுடும் சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீயினில் தீயினில் அழியக்
கண்டு ஆலும் முக்கணான் கண்
நாவலன் = புலவன். வேதங்களை அருளிய பெருமான் என்பதால் புலவன் என்றும், தருமிக்கு பொற்கிழி அளிக்க உதவும் வண்ணம் பாட்டு எழுதியமையால் புலவன் என்றும், பாண பத்திரர்க்கு உதவும் வண்ணம் கவிதை எழுதி சேரமான் புலவனுக்கு அளித்தமையால் (பதினோராம் திருமுறை முதல் பதிகம், மதிமலி புரிசை என்று தொடங்கும் பதிகம்) புலவன் என்றும் இறைவனை அழைத்தார் அப்பர் பிரான் என்று கூறுவதுண்டு.
அயன் திருமாலானானை என்று பெருமான், பிரமனாகவும் திருமாலாகவும் இருந்த நிலை, இந்த பாடலில் உணர்த்தப்படுவது போன்று பல தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.20.1) அப்பர் பிரான் மூவரும் ஆயவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். குழகன் = அழகன். பருவரால் = பருத்த வரால் மீன்கள். பழனம் = வயல்கள். ஒப்பற்ற ஒருவனாகவும், சக்தி சிவன் ஆகிய இருவராகவும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்
குருவதாய குழகன் உறைவிடம்
பருவரால் குதி கொள்ளும் பழனம் சூழ்
கருவதாம் கடம்பூர் கரக் கோயிலே
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை புரிபவனாகவும், இந்த மூன்று தொழில்களின் இறுதிப் பயனான வீடுபேறாக விளங்குபவன் இறைவன் என்று சீர்காழி நகரத்துப் பதிகத்தின் பாடல் (1.9.2) ஒன்றினில் சம்பந்தர் கூறுகின்றார். இறைவன் இந்த மூன்று தொழில்களையும் செய்வது எதற்காக? மலங்களுடன் பிணைந்திருக்கும் உயிர்கள், தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு, வீடுபேறு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், முத்தொழில்களின் பயன் வீடுபேறு என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. நேர்மை = நுண்ணிய பொருள். கிடை = வேதம் ஓதும் கூட்டம்.
படைப்பு நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல் கணம் உடையான் கிறி பூதப் படையான் ஊர்
புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரும் தென்றல் மிகு வேணுபுரம் அதுவே
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.10) ஏழாவது பாடலில் அப்பர் பிரான், மூவரானார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான், மூவராக இருப்பதும் அன்றி மூவர்க்கும் முதல்வராகவும் இறைவன் உள்ளார் என்று கூறுகின்றார்.
முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும்
முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார்
காம்பேய்த் தோளி
பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால் ஊழி
உலகம் ஆனார்
பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
பந்தணைநல்லூராரே
பொழிப்புரை
மூன்று இலைகளைக் கொண்டதும், உலகத்திற்கு நன்மை புரிவதும் ஆகிய சூலத்தைத் தனது வலது கையினில் ஏந்தியவனும், சூரியன் சந்திரன் மற்றும் அக்னி எனப்படும் மூன்று சுடர்களைத் தனது மூன்று கண்களாக உடையவனும், அனைவர்க்கும் தலைவனாக உள்ளவனும், நாவன்மை பொருந்திய புலவனாக உள்ளவனும், நரை போன்ற வெண்மை நிறத்தினை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனும், பசு தரும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுபவனும், தேவர்களுக்குத் தலைவனும், திருமால் பிரமனாக இருந்து அவர்களின் செயல்களைச் செய்பவனும், அக்னியால் போற்றப்பட்டவனும், உலகுக்கு காவலாக இருப்பவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

