அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 4

பெருமானின் எளிமையை

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 6:30 pm

பாடல் 4:

    துன்ன ஆடை ஒன்று உடுத்துத் தூய வெண்ணீற்றினர் ஆகி
    உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
    பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரை மேல்  
    அன்னமாகும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

துன்ன ஆடை=தைத்த ஆடை; பெரிய துணியிலிருந்து கிழக்கப்பட்டு தைக்கப்பட்ட கோவண ஆடையினை இங்கே உணர்த்துகின்றார். கோவண ஆடையினை உடுத்திருக்கும் தன்மை பெருமானின் எளிமையை உணர்த்துகின்றது. உடல் முழுவதும் திருநீறு பூசியுள்ள தன்மை, உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் ஒரு நாள் அழியும் தன்மை உடையது என்பதையும் பெருமான் ஒருவனே என்றும் அழியாது நிலைத்து நிற்கும் தன்மை உடையவன் என்பதையும் உணர்த்துகின்றது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாததும், பெருமான் ஒருவனுக்கே உரிய குணங்களாக உள்ளவை இந்த இரண்டு ஒப்பற்ற குணங்கள்;

துன்ன ஆடை உடுத்தவர் என்று எளிமையின் வடிவமாக பெருமான் விளங்குவதை பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வேணுபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தின் மீது (2.81.2) அருளிய பாடலில் தைத்த கோவணத்தோடு புலித்தோல் ஆடையினை உடையாக கொண்டவர் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் கருணையின் வடிவமாக திகழ்பவள் பார்வதி அன்னை என்பதை நாம் அறிவோம். தான் கருணை புரிபவன் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் அடையாளமாக பெருமான் வைத்துள்ளார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். 

    சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல்
    உடை ஆடையது கொண்டீர் உமையாளை ஒரு பாகம்
    அடையாளம் அது கொண்டீர் அங்கையினில் பரசு எனும்
    படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே 

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடல் (2.44.1) துன்னம் பெய் கோவணம் என்ற தொடருடன் தொடங்குகின்றது. பொக்கம்=பொலிவு; பெருமானின் அழகிய திருவடிகளை போற்றி புகழாத மனிதர்கள் அழகு அற்றவர்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பின்னம்=பின்னப்பட்டு அழகுடன் காணப்படும்

    துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
    பின்னம் சடை மேலோர் பிள்ளை மதி சூடி
    அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான் தன்
    பொன்னம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே . 

அப்பர் பெருமான் தான் புகலூர் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் துன்னம் சேர் கோவணத்தாய் என்று பெருமானை அழைக்கின்றார். துன்னம்= தையல்; அக்காரம்=எலும்பு மாலை; சங்கு மணிகளால் கோர்க்கப்பட்ட உருத்திராக்க மாலை என்றும் கூறுவார்கள். சிவபெருமான் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை அவர் பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படாத காரணத்தால், இரத்தக் கறை படியாத ஆயுதமாக விளங்குகின்றது. எனவே அதனை வெண் மழுவாள் என்று கூறுகின்றார். 

    துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து
         இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி
    தன் அணையும் தண்மதியும் பாம்பும் நீரும் சடைமுடி மேல்
         வைத்து உகந்த தன்மையானே
    அன்ன நடை மடவாள் பாகத்தானே அக்காரம்
         பூண்டானே ஆதியானே
    பொன்னம் கழலடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர்
         மேவிய புண்ணியனே 

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.53.5) அப்பர் பிரான் துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் என்று குறிப்பிடுகின்றார். துன்னம்=துண்டிக்கப்பட்ட துணி, பிரமனின் மண்டையோட்டினை பெருமான் கையில் ஏந்தியுள்ள தன்மை இந்த பாடலின் நான்காவது அடியில் குறிப்பிடப்படுகின்றது. 

    துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்
         சுடர் மூன்றும் சோதியுமாய்த்  தூயார் போலும்
    பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும் பூதகணம் புடை சூழ
         வருவார் போலும் 
    மின்னொத்த செஞ்சடை வெண் பிறையார் போலும் வியன்
          வீழிமிழலை சேர் விமலர் போலும் 
    அன்னத் தேர் அயன் முடி சேர் அடிகள் போலும்
          அடியேனை ஆளுடைய அடிகள்  தாமே 

 
பொழிப்புரை:

தைக்கப்பட்ட கோவண ஆடையினை உடுத்து எளிமையாக காட்சி அளிப்பவரும் தூய  வெண்ணீறு அணிந்து தாம் ஒருவனே என்றும் அழியாது நிலைத்து நிற்பவன் என்று உணர்த்துபவரும் ஆகிய சிவபெருமானை நினைத்து உள்ளம் நைந்து வழிபடாத மனிதர்களுக்கு அவரது அருள் கைகூடுவதில்லை; பொன்னையும் சிறந்த மணிகளையும் தனது நீர்ப்பெருக்குடன் அடித்துக் கொண்டு வரும் நிவா நதியின் கரையில் அமைந்ததும் அன்னப் பறவைகள் தங்கி மகிழ்வதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், நீங்கள் அவரது எளிமைத் தன்மை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை நினைத்து உள்ளம் நைந்து வழிபடுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.