மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

101. நின்று மலர் தூவி  - பாடல் 1

ஞான சம்பந்தர்

News image
Updated On :11 ஜனவரி 2019, 5:55 am

                
பின்னணி:

எருக்கத்தம்புலியூர் இறைவனை வணங்கி படையார் தருபூதப் படை என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருமுதுகுன்றம் செல்ல விருப்பம் கொண்ட திருஞானசம்பந்தர், அவ்வாறு செல்கையில் பல தலங்கள் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் அந்த தலங்களின் விவரங்களும் ஆங்கே அருளப்பட்ட பதிகங்களின் விவரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. செல்லும் வழியில் முதுகுன்று சென்று அடைவோம் என்று முதுகுன்றத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியவாறே சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. இந்த பதிகம் மத்தா வரை நிறுவிக்கடல் என்று தொடங்கும் (1.12) பதிகமாகும். இந்த தலத்தின் இறைவனைக் குறிப்பிட்டு ஞான சம்பந்தர் அருளிய ஏழு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலம் சென்ற சம்பந்தர், முதுகுன்றினை வலம் வந்த பின்னர் திருக்கோயிலுக்கு சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். வான நாயகர்=தேவர்களின் தலைவர்; போனகம்=சோறு; பிராட்டியால், ஞானம் கலந்து ஊட்டப்பட பால் சோற்றினை உட்கொண்ட சம்பந்தர் ஞான போனகர் என்று அழைக்கின்றார்.  

    வான நாயகர் திருமுதுகுன்றினை
        வழிபட வலம் கொள்வார்   
    தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக்குறள் துணை
        மலர் மொழிந்து ஏத்தி
    ஞான போனகர் நம்பர் தம் கோயிலை நண்ணி
        அங்கு உள் புக்குத்
    தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி
         திளைத்த அன்பொடு தாழ்ந்தார்

இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.  குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற  பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் எண்ணுவர் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். இந்த பதிகம் உட்பட மொத்தம் ஏழு பதிகங்கள் திருவிருக்குக்குறள் பதிகங்களாக கருதப் படுகின்றன. அரனை உள்குவீர் என்று தொடங்கும் பிரமபுரம் பதிகமும் (1.90), சித்தம் தெளிவீர்காள் என்ற திருவாரூர்ப் பதிகமும்  (1.91), வாசி தீரவே என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகமும் (1.92) நின்று மலர் தூவி என்று தொடங்கும் இந்த பதிகமும் (1.93), நீலமா மிடற்று என்று தொடங்கும் திருவாலவாய்ப் பதிகமும் (1.94} தோடொர் காதினன் என்று தொடங்கும் இடைமருதுப் பதிகமும் (1.95), மன்னியூர் இறை என்று தொடங்கும் அன்னியூர் பதிகமும் (1.96) அத்தகைய பதிகங்கள் ஆகும். சம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். மேற்கண்ட இந்த பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே. மொழிந்து என்ற சொல்லினை திருக்கோயிலை நண்ணிய செயலுக்கு முன்னம் கூறியமையால், இந்த பதிகம் குன்றினை திருவலம் செய்த போது அருளிய பதிகமாக கருதப் படுகின்றது. மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள கொல்லி பண்ணுக்குரிய இரண்டு பதிகங்கள் (3.40 & 3.41) திருவிருக்குக்குறள் வகையைச் சார்ந்தவையாக கருதப் படுகின்றன.  

திரு கி.வா.ஜா அவர்களும் தனது திருமுறை மலர்கள் என்ற நூலில் இரண்டு சீர்கள் கொண்டுள்ள அடிக்கு குறளடி என்ற பெயர் உள்ளது என்றும், மந்திரத்தைப் போன்று சுருங்கிய உருவத்தில் அமைந்திருப்பதால் இந்த பதிகத்து பாடல்களை மந்திரம் என்று கூறுவார்கள் என்றும் கூறுகின்றார். மேலும் மந்திரத்தை இருக்கு என்றும் அழைப்பார்கள் என்றும் மந்திரமாக அமைந்துள்ள குறுகிய அடிகளைக் கொண்ட இப்பாடல்கள் திருவிருக்குக்குறள் என்று அழைக்கப் படுவதாக அவர் கூறுகின்றார். அடிகள் தோறும் நான்கு சீர்கள் கொண்டுள்ள திருமந்திரப் பாடல்கள், மந்திரமாகக் கருதப் படுவதை நாம் அறிவோம்.     

விருத்தாச்சலம் என்று அனைவரும் அறிந்த தலமே முதுகுன்றம் என்று தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது. பல ஊழிகளைக் கடந்த நின்ற தன்மை குறித்து இந்த தலம் முதுமையான குன்று உடையது என்று பொருள் பட முதுகுன்றம் என்று அழைக்கப் பட்டது. அழகான தமிழ்ப் பெயரினை விடுத்து விருத்தாச்சலம் என்று வடமொழிச் சொல்லால் இன்று அனைவராலும் அழைக்கப் படுவது பரிதாபமான நிலை. இறைவனின் திருநாமம் பழமலைநாதர் இறைவியின் திருநாமம் பெரியநாயகி.  
    
பாடல் 1:

    நின்று மலர் தூவி
    இன்று முதுகுன்றை
    நன்றும் ஏத்துவீர்க்கு
    என்றும் இன்பமே

விளக்கம்:

நின்று=சென்று அடைந்து முன்னே நின்று; இன்று என்று குறிப்பிட்டு நாம் உடனே முதுகுன்றம் செல்ல வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மேலும் ஒருநாள் அவ்வாறு இறைவனை மலர் தூவி வழிபட்டால், வாழ்நாள் முழுவதும் இன்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றார். சம்பந்தரின் திருவாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதால் நாம் அவரது கூற்றினை செயல்படுத்தி பலன் அடைவோமாக.  

பொழிப்புரை:

இன்றே முதுகுன்றம் தலம் சென்று, அங்குள்ள குன்றினை வலம் வந்து, பழமலைநாதரை வழிபட்டு அவரது திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்கும் அடியார்களுக்கு வாழ்வினில் என்றும் இன்பமே நிலைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.