பாடல் 11:
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் கமழ் காழி
என்று கருதப்
படுபொருள் ஆறும் நாலும் உளதாக வைத்த பதியான
ஞான முனிவன்
இடுபறை ஒன்ற அத்தர் பியன் மேல் இருந்தி இன்
இசையால் உரைத்த பனுவல்
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை
கெடுதல் ஆணை நமதே
விளக்கம்:
சம்பந்தர் தனது தந்தையின் தோள் மீது அமர்ந்து இருந்த போது இந்த பதிகம் அருளினார் என்பது அவரது கடைக்காப்பு பதிகத்திலிருந்து புலனாகின்றது. அத்தர் என்றால் தந்தை என்று பொருள். பியன் என்றால் தோள் என்று பொருள். கடல்வரை=கடற்கரை; ஓதம்=அலைகள், இங்கே மிகுதியான நீர்; நனிபள்ளி இறைவனை தியானிக்கும் மாந்தர்களின் வினைகள் தீரும் என்று சம்பந்தர் ஆணையிட்டதற்கு ஏற்ப, அந்த தலத்து மக்களின் தீவினைப் பயனால் பாலையாகி மாறியிருந்த நிலம் நெய்தல் நிலமாக மாறி பின்னர் மறுத்த நிலத்தின் தன்மை அடைந்தது, தேவாரப் பதிகங்கள் அதிசயங்கள் நிகழ்த்தும் வல்லமை படைத்தமை என்பதற்கு மற்றோர் சான்றாகும்.
பொழிப்புரை:
கடற்கரையின் அருகே உள்ள நீர் நிறைந்த உப்பங்கழிகளும் சோலைகளும் நிறைந்து காணப்படும் சீர்காழி நகரின் கண் வாழ்பவனும், நாம் உணர்ந்து அறிந்து கொள்ளவேண்டிய பொருட்களை உடைய நான்கு வேதங்களும் அவைகளுக்கு துணையாக உள்ள ஆறு அங்கங்களும் சொல்லும் கருத்துக்களை அறிந்தவனாக திகழும் ஞானசம்பந்தன், தனது தந்தையார் தோளின் மீது அமர்ந்து ஏழிசையுடன் இணைத்து பறை சாற்றிய பதிகத்தின் பாடல்களை பாடி, நள்ளிருளில் சுடுகாட்டில் நடமாடும் பெருமானும் எனது தந்தையும் ஆகிய பெருமானின் புகழினை நினைத்தால், அவர்களது வினை கெட்டுபோகும் என்பது அடியேன் இடும் ஆணையாகும்.
முடிவுரை:
கடைக்காப்பில் ஆணை என முடியும் சம்பந்தரின் பதிகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பதிகத்தின் தொடக்க சொற்கள் & பதி முடிவு
காரைகள் கூகை (நனிபள்ளி) வினை கெடுதல் ஆணை நமதே
வேயுறுதோளி பங்கன்(பொது பதிகம்) அரசு ஆள்வர் ஆணை நமதே
மடல் மலி கொன்றை (கழுமலம்) பிறவார்-- இதற்கு ஆணை நமதே
நீறு வரி ஆடு அரவோடு(வேதிகுடி) அரசாளும்– சரதம் ஆணை நமதே
சம்பந்தரது ஆணைகளை விருப்புடன் நிறைவேற்றுவதே தன் கடன் என்பது போல் காத்திருக்கும் இறைவன், இந்த நனிபள்ளி பதிகத்தை கேட்டவுடன் அந்த தலத்தின் வினைகளை முற்றிலும் தீர்த்து, பாலை நிலமாக இருந்த தலத்தை நெய்தல் நிலமாக மாற்றி அருளினார்; வேயுறு தோளி பங்கன் பதிகத்தை கேட்ட அம்மையப்பன், சம்பந்தர் அவரை எதிர்கொண்ட சைவ சமயத்தின் எதிரிகளாய் அப்போது திகழ்ந்த சமணர்களை வெற்றிகொள்ள வைத்து, சைவ சமயத்தின் முடிசூடா மன்னாராக்கினார். மடல் மலி கொன்றை என்று தொடங்கும் சீர்காழி (கழுமலம் என்பது சீர்காஷி நகரத்தின் பன்னிராந்து பெயர்களில் ஒன்றாகும்) பதிகத்து கடைக்காப்பினில், தனது பதிகங்களை பாடும் அடியார்கள், நிலவுலகினில் வாழ்வதை ஒழித்து வீடுபேறு முக்தி உலகில் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். வேதிகுடி பதிகத்தின் கடைப் பாடலிலும் இந்த செய்தியை சொல்லும் சம்பந்தர் இது தமது ஆணை என்று கூறுகின்றார். சம்பந்தர் ஆணையிட்டு சொல்லும் சொற்களாய் உண்மையாக இறைவன் மாற்றுவதை அறிந்த நாமும், அவரது பதிகங்களை ஓதி அந்தற்குரிய பலன்களை பெற்று மகிழ்வோமாக.
இங்கே குறிப்பிடப்படும் பதிகம், நனிபள்ளி தலத்தின் எல்லையில் இருந்த போது, தனது தந்தையாரின் தோளில் அமர்ந்த வண்ணம் பாடிய பதிகமாகும். ஊர் எல்லையில் திருஞான சம்பந்தர் வருவதைக் கண்ட தலத்து அந்தணர்கள், அவரை வரவேற்று திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். திருக்கோயில் சென்றடைந்த சம்பந்தர், முறையாக பெருமானை பணிந்து போற்றினார் என்று சேக்கிழார் கூறுவதால், திருக்கோயில் சன்னதியிலும் திருஞான சம்பந்தர் பதிகம் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் அத்தகைய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. கவுணிய கோத்திரத்தில் பிறந்த திருஞான சம்பந்தரை கவுணியர் தலைவன் என்று சேக்கிழார் இந்த பாடலில் அழைக்கின்றார்.
ஆதியார் கோயில் வாயில் அணைந்து அன்பு கூர
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.
இந்த தலத்தில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்ததை அறிந்த, அருகில் உள்ள தலைச்சங்காடு தலத்தைச் சார்ந்த அந்தணர்கள் மிகுந்த விருப்பத்துடன் சம்பந்தரை அணுகி, தங்களது தலத்திற்கு வருமாறு அழைத்தனர் என்றும், தங்கள் தலத்திற்கு சம்பந்தர் வந்த போது எங்கும் பந்தல் இட்டு, வாழை கமுகு மரங்களை நிறுத்தியும் மலர் மலைகளை தொங்கவிட்டும் நிறைகுடங்கள் வைத்தும் தெருக்களை பல வகையாக அலங்கரித்தும் பூரண கும்பத்துடன் அவரை வரவேற்றனர் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். தலைச்சங்கை சென்ற திருஞானசம்பந்தர் ஆங்கிருந்து புறப்பட்டு, சாய்க்காடு, பூம்புகார் வழியாக திருவெண்காடு சென்றடைந்தார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். பின்னர் அங்கிருந்து திருமுல்லைவாயில் வழியாக சீர்காழி நகர் வந்தடைந்தார். இதுவே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட இரண்டாவது தலயாத்திரை ஆகும்.
அப்பர் பிரான் பொருப்பள்ளி என்று தொடங்கும் பதிகத்தில், செழு நனிபள்ளி என்று குறிப்பிட்டு, இந்த தலம் செழுமையாக திகழ்ந்ததை உணர்த்தி, நமக்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் நிகழ்த்திய அதிசயத்தை நினைவூட்டுகின்றார். நனிபள்ளி செல்லும் எவர்க்கும் சம்பந்தப் பெருமான் செய்த அதிசயம் நினைவுக்கு வராமல் போகாது. சம்பந்தப் பெருமான் தனது பதிகங்கள் மூலம் இவ்வாறு அதிசயங்கள் செய்வதற்கு மூல காரணமாக ஞானத்தை சம்பந்தர் குழந்தையாக இருந்த போது சீர்காழி குளக் கரையில் அழுத அன்று புகட்டியவர் சிவபிரான் அல்லவா. எனவே சிவபிரானின் அந்த அருட்செயலும் இந்த பதிகத்தில் சுந்தரரால் குறிக்கப்படுகின்றது.
ஏன மருப்பினோடும் எழில் ஆமையும் பூண்டு
உகந்து
வான மதிள் அரணம் மலையே சிலையா
வளைத்தான்
ஊனம் இல் காழி தன்னுள் உயர் ஞான சம்பந்தர்க்கு
அன்று
ஞானம் அருள் புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி
அதே
பாலை நிலத்தின் தன்மை மாற்றப்பட்ட அதிசயம் நிகழ்ந்தது இந்த தலத்தில். நிலத்தின் தன்மையால் தனது தொண்டர்களுக்கு, திருச்செங்கோடு தலத்தில் குளிர் ஜுரம் வந்தபோது பதிகம் பாடி குளிர் ஜுரத்தை போக்கி நிலத்தின் தன்மையை அந்த தலத்திலும் சம்பந்தர் வெற்றி கொண்டார். சமணர்களுடன் அனல் வாதம் புனல் வாதம் இரண்டிலும் பங்கேற்றபோது நீரினையும் தீயினையும் சம்பந்தரின் பதிகங்கள் எழுதப்பட்ட ஏடுகள் வெற்றிகொண்டு அழியாமல் இருந்தன. மேலும் சமணர்கள் சம்பந்தர் தங்கியிருந்த மாளிகைக்கு தீ வைத்த போது, அந்த தீ சம்பந்தருக்கு தீங்கு ஏதும் செய்யாமல் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு பாண்டியனை வெப்பு நோயாக பற்றிக்கொண்டது. கொள்ளம்புதூரில் கடும் காற்றும் மழையும் கலந்து இருந்த சமயத்தில் ஓடம் செலுத்தவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையில் சம்பந்தர் தனது தொண்டர்களுடன் ஓடத்தில் அமர்ந்து பதிகம் பாடிய போது, ஓடம் தானாக நகர்ந்து அடுத்த கரைக்கு அனைவரையும் பத்திரமாக கொண்ட சேர்த்தது, சம்பந்தர் வானத்தையும் காற்றையும் வெற்றி கொண்ட செய்தியை குறிக்கும் நிகழ்ச்சியாகும். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் தனது பதிகங்கள் மூலம் வெற்றி கொண்டவராக சம்பந்தர் திகழ்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


