பாடல் 1
பின்னணி:
சேய்ஞலூர் தலம் சென்று இறைவனை வணங்கி, பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் அந்த பதிகத்தினில் அந்த தலத்தில் வாழ்ந்த சண்டீசரையும் குறிப்பிட்டு சிறப்பித்து பாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பனந்தாள் சென்றதன் பின்னர் அருகில் இருந்த பந்தணைநல்லூர் தலம் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. ஆங்கு என்ற சொல் திருப்பனந்தாள் தலத்தினை குறிப்பிடுகின்றது. திருப்பனந்தாள் தலத்து இறைவன் மீது கண்பொலி நெற்றியினான் என்று தொடங்கும் பதிகத்தினை (3.62) திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
ஆங்கு சொல்மலர் மாலை சாத்தி அப்
பாங்கு பந்தணைநல்லூர் பணிந்து பாடிப் போய்த்
தீங்கு தீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர்
இந்த தலம் மயிலாடுதுறை திருப்பனந்தாள் சாலையில், திருப்பனந்தாள் தலத்திற்கு எட்டு கி,மீ, தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள குத்தாலம் என்ற இரயில் நிலையத்திற்கு பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் நகரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பந்தநல்லூர் என்று தலம் இப்போது அழைக்கப்படுகின்றது. இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர்; அம்மையின் திருநாமம் காம்பன தோளியம்மை, வேயுறுதோளியம்மை.
ஒரு நாள் மாலைப் பொழுதினில் அம்பிகை இலக்குமி மற்றும் சரசுவதியுடன் பந்தாடிக் கொண்டு இருந்தபோது நேரம் போவது தெரியாமல் மூவரும் விளையாடினார்கள். இவர்கள் மும்மரமாக பந்து ஆடியதைக் கண்ட சூரியன் மறைவதற்கு உரிய நேரம் வந்த போதும், அவர்கள் ஆடிய விளையாட்டினை நிறுத்த வேண்டாம் என்ற நோக்கத்துடன் மறையாமல் இருந்தான். இதனால் பகற்பொழுது நீளவே உலகினர் அதிகமான வெப்பத்தினால் வருந்தினர். முனிவர்களும் தாங்கள் மலையில் செய்யவேண்டிய அனுட்டானங்கள் செய்வதை காலம் தாழ்த்தினார்கள். இதனை அறிந்த சிவபெருமான் மூவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து, கோபத்துடன் பந்தினை உதைத்தார். அந்த பந்து வந்து அணைந்த இடம் பந்தணைநல்லூர் என்று பெயர் பெற்றது. மேலும் உலகத்தவர் வருந்துவதற்கு காரணமாக இருந்த அம்மையை பசுவாக மாறுமாறு சாபமிட, அம்பிகை பசுவாக பூலோகத்திற்கு வந்தார். அவர் முருகப்பெருமானை கன்றாக மாற்றி தன்னுடன் அழைத்துக் கொண்டு வர, திருமால் அம்பிகைக்கு காவலாக இடையனாக வந்தார் என்று தலபுராணம் கூறுகின்றது. இந்த தலத்தில் தவம் செய்து வந்த கண்வ முனிவரின் குடில் வந்தடைந்த பசு, ஒரு நாள் கொன்றை மரத்தின் அடியில் சுயம்புவாக இருந்த இலிங்கத்தைக் கண்டது. அந்த இடம் தான் பெருமானால் உதைக்கப்பட்ட பந்து வந்து வீழ்ந்த இடம். தினமும் பசு அந்த இலிங்கத்தின் மீது பாலை பொழிந்து நீராட்டியது. பாலால் தினமும் நீராட்டப் பெற்றதால் இறைவனும் மனம் குளிர்ந்தார். ஒரு நாள் பசுவின் கால் குளம்பு இலிங்கத்தின் மீது பட்டது. அப்போது பரமன் இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதி தேவிக்கு சாபவிமோசனம் அளித்தார். பசுவாக வந்த தேவியை அவரது பதி ஆட்கொண்டமையால் பசுபதி என்றும் பசுபதி நாதர் என்றும் இந்த தலத்திலுள்ள இறைவன் அழைக்கப் படுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பசுபதி என்று தலத்து இறைவனின் திருநாமம் சொல்லப் படுவதை நாம் உணரலாம். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் பாடிய பதிகமும் கிடைத்துள்ளது.
பாடல் 1:
இடறினார் கூற்றைப் பொடி செய்தார் மதிலை இவை சொல்லி
உலகு எழுந்து ஏத்தக்
கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார் யாதும் குறைவிலார் தாம் போய் கோவணம்
கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
விளக்கம்:
பந்து விழுந்த இடத்தில் தானே சுயம்புவாய் பெருமான் முளைத்த நிலையை சம்பந்தர் காதலித்து உறைதரு கோயில் என்று குறிப்பிடுகின்றார். கடறு=காடு; கொடிறனார்= உறுதியானவர். படிறு=வஞ்சனை; கொடிறு என்ற சொல் பூச நட்சத்திரத்தை குறிக்கும் என்று அபிதான சிந்தாமணி நூல் குறிப்பிடுகின்றது. தைப்பூசத் திருவிழா திருவிடைமருதூர் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வாறு பூச நாளின் சிறப்பினை உடையவன் என்பதை உணர்த்தும் வண்ணம் கொடிறனார் என்று கூறியதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. திருவிடைமருதூர் தலத்திலிருந்து இந்த தலம் ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ளது என்பதை நாம் நினைவு கூரலாம்.
கோவணம் கொண்டு கூத்தாடும் படிறனார் என்பதற்கு அமர்நீதி நாயனார் புராண நிகழ்ச்சியை குறிப்பிடுவதாக கூறுவார்கள். அமர்நீதியாரிடம் தான், பாதுகாப்பாக வைத்திரும் என்று சொல்லி, கொடுத்து வைத்திருந்த கோவணத்தை வஞ்சனையால் மறைத்து அவரை சோதனைக்கு உள்ளாக்கி திருவிளையாடல் புரிந்தவர் அல்லவா சிவபெருமான். அமர்நீதி நாயனார் என்பவர் நல்லூர் தலத்தில் வாழ்ந்து வந்த துணி வணிகர். சிறந்த சிவ பக்தராக இருந்த இவர், சிவன் அடியார்களுக்கு உணவு அளித்து பின்னர் அவர்களுக்கு உடைகளும் (கோவணம் உட்பட அனைத்து வகை உடைகளும்) அளித்து மகிழ்பவர்; தனது வருவாயில் பெரும் பகுதியை கோயில் திருப்பணிக்காக செலவு செய்தவர். அவரது பெருமையினை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்ட பெருமான் ஒரு நாள் வயதான சிவன் அடியார் வேடத்தில் இந்த தலத்திற்கு வந்தார். வந்த சிவன் அடியாரை வரவேற்ற அமர்நீதி நாயனார் தனது இல்லத்திற்கு வந்து உணவு உட்கொள்ளுமாறு வேண்டினார். வந்த அடியவர் தான் நீராடி விட்டு வருவதாக கூறி, தனது கையில் இருந்த கோவணம் ஒன்றினை பாதுகாப்பாக வைக்குமாறு அமர்நீதி நாயனாரிடம் கூறிவிட்டு நீராடச் சென்றார். நீராடச் சென்ற வேதியர் கோவணத்தை எவரும் காணாதவாறு போக்கிவிட்டார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த செயலையே வஞ்சகச் செயல் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். பானல்=நீலம்
போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
பானலத்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூநறுஞ்சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானநீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்
நீராடிவிட்டு வந்த அடியவர் தான் கொடுத்து இருந்த கோவணத்தை திரும்பத் தருமாறு நாயனாரிடம் கேட்டார். ஆனால் பாதுகாப்பாக வைத்த இடத்தில் கோவணம் இல்லாது மாயமாக மறைந்து விட்ட காரணத்தால் நாயனாரால் கோவணத்தை திரும்பித் தர முடியவில்லை. நடந்ததை கூறி அடியவரிடம் மன்னிப்பு கேட்டு வேறு ஒரு கோவணம் தருவதாக நாயனார் வேண்டினார். அடியவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், நாயனாரை இப்படித்தான் கோவணங்களையும் ஆடைகளையும் திருடி அடுத்தவர்க்கு தானம் செய்து நீர் புகழ் ஈட்டினரோ, இது தகுமா என்று ஏசினார். நாயனார் கூறிய எந்த சமாதானத்தையும் அவர் ஏற்கவில்லை. தொலைந்து போன கோவணத்திற்கு ஈடு செய்வதாக நாயனார் கூறியபோது, வந்த அடியார் அதற்கு வேண்டா வெறுப்பாக ஒப்புவது போல் பாவனை செய்தார். அடியவர் தன்னிடம் இன்னொரு கோவணம் இருப்பதாகவும் அந்த கோவணத்திற்கு சம எடையுள்ள இன்னொரு கோவணம் தந்தால் ஒப்புக்கொள்வதாக இறுதியில் கூறினார்.
ஒரு பெரிய தராசு வரவழைக்கப்பட்டு அடியவரின் கோவணம் ஒரு தட்டிலும் மற்றைய தட்டில் ஈடு செய்யும் அளவுக்கு ஏதேனும் வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, அடியவரின் கோவணம் ஒரு தட்டில் வைக்கப்பட்டது. அடுத்த தட்டில் பல கோவணங்கள் வைக்கப்பட்டும் ஈடு செய்ய முடியாத நிலையில், அமர் நீதி நாயனார் தன்னிடம் இருந்த அனைத்து துணிகளையும் (விற்பனைக்கு வைத்து இருந்த) தராசுத் தட்டில் வைத்தார். அப்போதும் ஈடு செய்ய முடியாத நிலையில் தனது இல்லத்தில் இருந்த அனைத்து செல்வங்களையும், பொருட்களையும், (நகைகள், வெள்ளி பாத்திரங்கள் உட்பட அனைத்தையும்), தராசுத் தட்டில் வைத்தும் ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தனக்கு வந்த சோதனையை நினைத்து வருந்திய நாயனார் தன்னையும் தன் குடும்பத்தினரையும் வந்த அடியவருக்கு கோவணத்திற்கு ஈடாக தரத் தீர்மானித்து, இறைவனை வேண்டி குடும்பத்தினருடன் தராசுத் தட்டினால் அமர்ந்தார். பாதுகாப்பாக வைப்பதற்கு கொடுக்கப்பட்ட கோவணத்தை தொலைத்த குற்றத்திற்கு தண்டனையாக தன்னையும் தனது குடும்பத்தவரையும் சிவனடியாருக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்பட நாயனார் தயாரானதும் தராசின் இரண்டு தட்டுக்களும் ஒரே நிலையில் நின்று, கொடுத்த வாக்கிற்காக தன்னையும் தன் குடும்பத்தினரையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணம் கொண்ட அமர்நீதி நாயனாரை உலகுக்கு அடையாளம் காட்டியது.
எதிர் தட்டில் வைக்கபட்டிருந்த கோவணமும் மறைந்தது, வந்த அடியவரும் மறைந்தார். ரிஷபாரூடராக அன்னை பார்வதியுடன் ஈசன் அனைவருக்கும் காட்சி தனது அருளி, அமர்நீதி நாயனாரின் புகழை உலகு அரிய செய்ததும் அல்லாமல், அவர்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் முக்தி அளித்தார். அமர்நீதி நாயனாரும் அவரது குடும்பத்தாரும் ஏறி உட்கார்ந்த தராசே விமானமாக மாறி அனைவரையும் சிவபுரத்திற்கு அழைத்துச் சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். இந்த அரிய சம்பவம் நடந்த இடம் நல்லூர் தலம் தான். துலை என்றால் தராசு.
நாதர் தம் திருவருளினால் நற்பெரும் துலையே
மீது கொண்டெழு விமானம் அதாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார்
அமர் நீதி நாயனாரின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சி அப்பர் பெருமானால், அட்டுமின் இல் பலி எனத் தொடங்கும் பதிகத்தில் ஒரு பாடலில் (4.97.7) கூறப்பட்டுள்ளது. கா=காப்பாற்று: கிறிபட=பல விதமாக வன்மொழிகள் பேசி; அகலிடம்=அகன்ற உலகம், உலகத்தில் உள்ள மக்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். சேக்கிழார் பெரிய புராணத்தில் அமர்நீதி நாயனார் வாழ்ந்த இடம் பழையாறு என்று கூறுகின்றார். இந்த இரண்டு தளங்களும் அருகருகே உள்ளன.
நாள் கொண்ட தாமரை பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபடத் தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியோடும் அங்கு ஓர் வாணிகனை
ஆள் கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இவ் அகல் இடமே
கோவணத்தை காப்பாற்று என்று சொல்லி கொடுத்துவிட்டு, தொண்டனை சோதிக்கும் பொருட்டு, பின்னர் அந்த கோவணத்தை மாயமாக மறையச் செய்த பிரானை, உரிமையுடன் பொய் கூறியவன் என்று அழைப்பது நாம் ரசிக்கத் தக்கது. பொய் சொன்னதும் எதற்காக என்பதை, தொண்டனை ஆட்கொள்ளத்தான் என்று இந்தப் பாடலின் கடைசி வரியில் கூறி தெளிவு படுத்தும் நேர்த்தியையும் இந்த பாடலில் நாம் காணலாம்.
கோவணம் கொண்டு கூத்தாடும் என்ற தொடரினை குறைவிலார் தாம் போய் என்ற தொடருடன் கூட்டி, குறையேதும் இல்லாமல் அனைத்துச் செல்வங்களும் பெற்றுள்ள பெருமான் (உலகத்தில் உள்ள அனைத்து செல்வங்களும் அவர் தந்தது தாமே) கோவண ஆடையுடன் உள்ளார் என்று கூறுவது திருவாசகம் திருச்சாழல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. கிழிக்கப்பட்ட துணியினைத் தைத்து கோவணமாக இறைவன் கட்டிக் கொள்வது ஏன் என்று ஒரு பெண்மணி கேள்வி கேட்க, அதற்கு விடையாக அவளது தோழி நான்கு மறைகள் இறைவனது கோவணமாக இருப்பதாக கூறி, இறைவனது கோவணத்தின் பெருமையை உணர்த்துகின்றாள். வேதங்களே உலகத்தில் எழுந்த முதல் நூல்கள் என்றும், அந்த வேதங்களின் கருத்துகள் பல நூல்களிலும் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். இந்த செய்தியைத் தான், நான்கு மறைகளின் பொருள், பல நூல்களில் காணப்படும் பொருளாக தொடர்ந்து நிற்கும் சரடு போல் இருக்கின்றது என்ற உண்மையை, பொருள் மறை நான்கே வான் சரடா என்ற தொடர் மூலம் மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார், படிறனார் என்று ஞானசம்பந்தர், இந்த பாடலில் கூறுவது, கோவணம் மட்டும் அணிந்து நடனம் ஆடும் பெருமான் என்று மற்றவர் பழிப்பதை உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ
கொடிறனார் என்ற சொல்லுக்கு உறுதிப்பாடு உடையார் என்று பொருள் கொண்டு, யாதும் குறைவிலார் தாம் போய்க் கோவணம் கொண்டு என்ற தொடருடன் இணைத்து விளக்கம் அளிப்பதும் பொருத்தமாக உள்ளது. தன்னிடம் எத்தனை செல்வம் இருந்தாலும், அந்த செல்வத்தின் மீது பற்று ஏதும் வைக்காமல் எளிமையாக தோற்றம் அளிப்பதில் உறுதிப்பாடு உடையவராக விளங்கி, கோவண ஆடையுடன் காட்சி அளிக்கின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர்.
பொழிப்புரை:
காலனை காலால் உதைத்து வீழ்த்தியவர் என்றும் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் எரித்து அழித்தவர் என்றும் அடியார்கள் தொழுது ஏத்த நிற்கும் பெருமான், காட்டினில் உறைபவராகவும் காற்றில் கலந்தவராகவும் உள்ளார். அவர் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து உறையும் கோயில் பந்தணைநல்லூர் திருக்கோயில் ஆகும். தமது கொள்கையில் மிகவும் உறுதியாக உள்ள பெருமான், எந்த குறையும் இன்றி அனைத்துச் செல்வங்கள் வாய்க்கப் பெற்றவராக இருப்பினும் கோவணம் அணிந்து கூத்தாடும் வஞ்சகராக காணப்பட்டாலும், இத்தகைய கோலம் மூலம் தனது பற்றற்ற நிலையினை விளக்குகின்றார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் பந்தணைநல்லூர் உறைகின்ற பசுபதியாவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


